Wednesday, April 1, 2009

மூன்றாவது அணி என்னும் பிணி

மூன்றாவது அணி என்னும் பிணி

காங்கிரஸ் கட்சியை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதையே மட்டும் வெறும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கம்யூனிஸ்டு நண்பர்கள், இன்னும் பிரதமர் ஆசையை கெட்டியாகப் பிடித்து வைத்துள்ள தேவகவுடா அவர்கள் துணையுடன், சில பல மாநில கட்சிகளைப் பிடித்து வைத்துக் கொண்டு 2009 பாராளுமன்ற தேர்தல் களம் கண்டுள்ளனர்.

மூன்றாம் அணி என்று அதற்கு நாமம் சூட்டப்பட்டுள்ளது.

அடைய வேண்டிய அரசியல் இலக்கிலே அவரவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.

அதற்கான பாதையை வலுவாக வகுத்துக் கொண்டு, தேர்தல் களத்திலே பணியாற்றவும், வெற்றிக்கனியைப் பறிக்கப் போராடவும், முனைந்து செயல்படத் துவங்கி விட்டார்கள்.

இருபது கோடி இந்திய இஸ்லாமிய சமுதாயத்திற்கு இத்தேர்தல் ஜீவமரணப் போராட்டமே என்பதில் சந்தேகமில்லை.

சிறுபான்மைச் சமுதாயத்திற்கு தனி அமைச்சகம், ராஜேந்தர் சச்சார் அறிக்கை, சமூக நல்லிணக்கம் பேணியது போன்ற நல்ல பல அம்சங்களோடு காங்கிரஸ் தலைமையிலான அணி ஒரு புறம்.

இந்திய நாட்டின் சமூக, கலாச்சார பன்முகத் தன்மைக்கு வேட்டு வைத்து, இந்தியத் திருநாட்டின் இறையாண்மைக்கு கேடுவிளைவிக்கும் மதவெறி அரசியலை வளர்த்து, அதில் மாயும் மக்களின் உயிர்களிலும், உடைமைகளிலும் தங்கள் பதவி சுகம் காணத் துடிக்கும் சங் பரிவாரங்களின் அரசியல் பிரிவான பிஜேபி தலைமையிலான அணி மற்றொரு புறம்.

இவ்விரு அணிகளுக்கு நடுவிலே தான் கம்யூனிஸ்டு நண்பர்கள், முடிந்த மட்டும் குட்டையை குழப்பி , அரசியல் ஆதாயம் பெருவதற்கு, தேர்தல் களத்திலே மூன்றாம் அணி கண்டுள்ளனர்.

தெளிவான கொள்கை இல்லாமலும், தனிப்பட்ட அரசியல் விரோதங்களுக்கு கணக்கு தீர்த்துக் கொள்வதற்காகவும், காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக பலகீனப்படுத்தவும் இவ்வாறு கம்யூனிஸ்டுகள் அரசியல் அரங்கிலே தனிக் களம் காண்பது ஒன்றும் புதிதல்ல.

1967ல் பீகாரிலே கர்பூரி தாகூர் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்காக, எப்போது ஜனசங்கத்துடன் (அன்றைய பிஜேபி) கம்யூனிஸ்டுகள் தோளோடு தோள் நின்றார்களோ, அப்போது ஆரம்பித்த அரசியல் அநாகரீகம் இன்று புதுப் பரிணாமம் கண்டுள்ளது.

அத்தகைய அணி மாற்றங்களால் கம்யூனிஸ்டுகள் வேண்டுமானால் அரசியல் ரீதியாக பலனடைந்திருக்கலாம்.

அத்தகைய அரசியல் மாற்றங்கள் சிறுபான்மைச் சமுதாயத்திற்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெரும் வினையாகவே முடிந்துள்ளதை நம் சமுதாய மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியத் திரு நாட்டிற்கே கேடு விளைவிக்கும் அத்தகைய அணிகள் உருவாகும் போதெல்லாம், சமுதாயச் தாய்ச் சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர்கள் அதைச் சுட்டிக் காட்டி, அத்தகையவர்களைத் தேர்தலிலே தோற்கடித்து விரட்ட வேண்டியதன் அவசியத்தை நாடெங்கும் பிரச்சாரம் செய்து வந்துள்ளனர்.

கிடைக்கப்பெறும் சீட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சமுதாய நலனை மட்டுமே சிந்தனையில் கொண்டு, அரசியல் ராஜ தந்திரத்துடன் முஸ்லிம் லீக் தெளிவான அரசியல் பாதையை சமுதாயத்திற்கு அப்போதெல்லாம் வகுத்தளித்து வந்துள்ளதை வரலாறு குறித்து வைத்துள்ளது.

1991ல் காங்கிரஸிலிருந்து வெளியேறிய விபி சிங் அவர்கள், இதே கம்யூனிஸ்டு நண்பர்கள் துணையோடு மூன்றாவது அணி கண்ட போது, சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்கள் சொன்னார்கள்.

இது அணி அல்ல. நாட்டைப் பிடித்த பிணி என்றார்கள்.

முஸ்லிம் லீக் தலைவர்கள் மேல் கொண்ட அரசியல் மாச்சரியங்கள் காரணமாக, அப்போது சிராஜுல் மில்லத் அவர்களையும், முஸ்லிம் லீக்கையும் இதனால் விமர்சித்தவர்கள் ஏராளம்.

சமுதாய நலனில் அக்கரையில்லாமலும், அரசியல் தொலை நோக்கு இல்லாமலும் வந்த தரந் தாழ்ந்த விமர்சனங்கள் அவை.

சமுதாய சகோதரர்களே! சிந்தித்துப் பாருங்கள்!! என்னவானது?

தேர்தல் முடிந்தது.

பிஜேபியின் ஆசீர்வாதத்தோடும், கம்யூனிஸ்டுகளின் அரவணைப்போடும் விபி சிங் அரியணையில் அமர்ந்தார். அவரது நீண்ட நாளைய பிரதமர் கனவு நிறைவேறியது.

காங்கிரஸ் தேர்தலில் தோற்றது. கம்யூனிஸ்டுகளின் அரசியல் அபிலாஷை அரங்கேறியது.

2 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே அது வரை பெற்று வந்த பிஜேபி, 89 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நாடாளுமன்றத்திலே நுழைந்தது.

சமுதாயத்திற்குக் கிடைத்தது என்ன?

அன்று நாட்டைப் பிடித்த பிணி தான், இன்று சனியாக சதிராடுகின்றது!

எப்போதெல்லாம் மூன்றாவது அணி தலை எடுக்கின்றதோ, அப்போதெல்லாம் பிஜேபி அரசியல் லாபம் அடைகின்றது.

அன்று அவர்கள் பெற்ற அரசியல் ரீதியான பலம் பாபரி மஸ்ஜித் இடிப்பிலே துவங்கி, குஜராத் இனப் படுகொலை வரை நீண்டு, இப்போது கர்நாடகத்திலே மையம் கொண்டுள்ளது.

அங்கிருந்து தமிழகத்திலும் தலைதூக்குவதற்கான அரசியல் சதி இப்போது பின்னப்படுகின்றது.

மதவெறியின் உச்சத்திலே கோலோச்சிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடிக்குப் பூச்செண்டு கொடுப்பதற்காக சிறப்பு விமானம் ஏறிப் பறந்தவரின் தலைமையிலே, வறட்டுச் சித்தாந்தம் பேசுவோரும், சந்தர்ப்ப வாத அரசியல் செய்து தங்கள் வாழ்வை செழுமைப்படுத்திக் கொள்வோரும், தங்கள் தங்கள் சுயலாபத்திற்காக கூட்டணிப் பொங்கல் செய்து, தமிழக மக்களுக்குப் பரிமாற வருகின்றனர்.

தேர்தல் திருவிழா முடிந்தவுடன் இவர்கள் இணைந்தே இருப்பார்களா என்பது இப்போதே விவாதப் பொருளாகி விட்டது.

எதிர் முகாமுக்குத் தாவுவதும் இயல்பாகி விட்டது.

நம் கவலையெல்லாம் சமுதாய நலனும், சமூகங்களுக்கிடையேயான நல்லுறவும் தான்!

தேர்தல்கள் வரும்! போகும்!!

இன்று நாம் ஓரிடத்திலே வெற்றி பெற்றால், இன்ஷா அல்லாஹ், நாளைய நம் சந்ததியினர் செங்கோட்டையிலே கொடியேற்றுவர்.

2009 பாராளுமன்றத் தேர்தலிலே நமது இலக்கு தெளிவானது.

களத்திலே நாம் காணும் எதிரி அனைவருக்கும் பொதுவே.

மீசையை முறுக்குவதற்கும், தொடை தட்டி சுய பலம் பறை சாற்றுவதற்கும், தனித்து நின்று ஓட்டுகளைப் பிரித்து சட்டமன்றத் தேர்தல் சமயம் கூட்டணி பேரத்தில் கூடுதல் பலம் காட்டுவதற்கும் இது வல்ல நேரம்.

அதற்கெல்லாம் களங்கள் பல காத்திருக்கின்றன.

அகழ் யுத்தப் பாறைகள் ஒவ்வொன்றும் பிளக்கப்பட்ட போது, அகண்ட சாம்ராஜ்யங்களைக் கொண்டு அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸஹாபாப் பெருமக்களுக்கு நன்மாராயம் சொன்னார்கள்.

அந்த நன்மாராயங்கள் அப்பெருமக்களின் வழி வந்த நமக்கும் சேர்த்துத் தான்!

அவர்கள் போர்க் களம் கண்டார்கள்! நாம் தேர்தல் களத்திலே நிற்கின்றோம்!!

சில நூறு பேரோடு போனார்கள். பல ஆயிரம் பேரை வென்றார்கள்.

எண்ணிக்கை கொண்டு நாம் பலகீனமானவர்களல்ல.அது மட்டுமே நமது லட்சியமுமல்ல.

ஆப்ரஹாவை அழித்த அபாபீல் பறவைகள் அதைத் தான் நமக்கு சொல்லித் தருகின்றன.

கடந்த காலங்களில் பெற்ற பாடங்களின் அடிப்படையிலும், நிகழ்கால அரசியலின் நிதர்சன அளவுகோளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெளிவான அரசியல் பாதை அமைத்திருக்கின்றது.

மத சார்பற்ற கட்சிகளின் சுய கவுரவப் போராட்டம் , என்றுமே பாசிச சக்திகளுக்குக் கொண்டாட்டமாகும் என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து தேர்தல் பணியாற்ற வேண்டிய இன்றியமையாமை இன்றைய கால கட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

ஆகவே தான் ,திமுக , காங்கிரஸ் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்றுள்ள அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் வெற்றிக் கனி ஈட்ட பாடுபடுவோம்! மத பயங்கரவாத்தை வேரறுப்போம்!!தாய்த் திரு நாட்டின் இறையாண்மையைக் காப்போம்!!!

ஹமீதுர் ரஹ்மான், இணைச் செயலாளர், காயிதே மில்லத் பேரவை, யு.ஏ.இ.