Sunday, October 24, 2010

சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்

சாதனை படைத்த "காயிதே மில்லத்" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்

Chennai சனிக்கிழமை, மே 08, 10:45 AM IST

இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.

அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.

அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896_ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார்.

திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார்.

பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920_ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.

1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1946 முதல் 52_ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952_ம் ஆண்டு முதல் 58_ம் ஆண்டு வரை டெல்லி மேல்_சபை உறுப்பினராக பதவி வகித்தார்.

1962_ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.

இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி. இவர் 1962_ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான்.

"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபுக்கு 1972 மார்ச் 25_ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்றில் கடுமையாக வலி ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

குடல் புண் (அல்சர்) நோய்க்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். 31_ந்தேதி காலை அவர் ரத்த வாந்தி எடுத்தார். கல்லீரலும் சரிவர வேலை செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து உணர்வு இழந்தார். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

ஏப்ரல் 4_ந்தேதி சிறுநீரகம் சரிவர இயங்கவில்லை. அதை சீராக்க ஒரு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது. ஆயினும் அவர் உடல் நிலை தேறவில்லை. தொடர்ந்து மோசம் அடைந்தது.

முதல்_அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்த்தனர். முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற, பாராளு மன்ற உறுப்பினர்களும், பிரமுகர்களும் ஆஸ்பத்திரியிலேயே இருந்தனர்.

அன்றைய தினம் (4_4_1972) இரவு 10 மணி அளவில் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்து "குர்ஆன்" ஓதினார்கள்.

நள்ளிரவு 1_15 மணிக்கு இஸ்மாயில் சாகிப் மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது, அவருடைய மகன் மியாகான், மருமகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் இருந்தனர்.

இஸ்மாயில் சாகிப் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு காரில் கொண்டு போகப்பட்டது. மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.

மறுநாள் (5_ந்தேதி) காலை பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வசதியாக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. கல்லூரியின் கலை அரங்கின் மத்தியில் ஒரு மேடை அமைத்து அதில் இஸ்மாயில் சாகிப் உடல் வைக்கப்பட்டது. உடல், முஸ்லிம் லீக் கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து, இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

முதல்_அமைச்சர் கருணாநிதி, காலை 8_25 மணிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மற்றும் அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், மாதவன், ப.உ.சண்முகம், சத்தியவாணிமுத்து அம்மையார், சாதிக்பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், மன்னை நாராயணசாமி, ராமச்சந்திரன், ஓ.பி.ராமன், கண்ணப்பன் ஆகியோரும் மலர் மாலை வைத்தனர்.

பிற்பகலில் திராவிட கழக தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். இஸ்மாயில் சாகிப்பின் மகன் மியாகானுக்கு ஆறுதல் கூறினார்.

பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், சபாநாயகர் மதியழகன், மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, தமிழரசு கழக தலைவர் ம.பொ.சிவஞானம், முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், நீதிபதி இஸ்மாயில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொன்னப்ப நாடார், ராஜாராம் நாயுடு ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் புறப்படுவதற்கு முன் முதல்_அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள் நடந்து சென்றனர்.

தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆரும் நடந்து போனார். ஊர்வலத்தில் போனவர்கள் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் கேரள கல்வி மந்திரி முகமது கோயா, ஊராட்சி மந்திரி அவுக்காதல் குட்டிநகா, பொதுப்பணி மந்திரி திவாகரன், ரெவினிï மந்திரி பேபி ஜான், சபாநாயகர் மொகிதீன் குட்டி, புதுச்சேரி மந்திரி ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரத்தில், அண்ணாவை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் "காயிதே மில்லத்" கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிக்கொண்டிருப்பது அப்துல் சமது (1962). ஊர்வலம் பீட்டர்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு வழியாக, திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் உடல், முஸ்லிம் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் நடந்தபோது கூடி இருந்தவர்கள் "அல்லாஹ் _ அக்பர்" என்று குரல் எழுப்பினார்கள்.

இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-

"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல _ இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது.

எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்."

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் முகமது கோயா, திவாகரன், பாண்டிச்சேரி அமைச்சர் ராமசாமி, சபாநாயகர் மதியழகன், தி.மு.க. பொருளாளர் எம்.ஜி.ஆர்., கேரள முஸ்லிம் லீக் தலைவர் தங்கல், இந்திய முஸ்லிம் லீக் செயலாளர் இப்ராகிம் சுலைமான் சேட், அப்துல் சமது, பீர்முகமது, திருப்பூர் மொய்தீன் மற்றும் பலர் பேசினார்கள்.

இஸ்மாயில் சாகிப் மறைவுக்கு ஜனாதிபதி வி.வி.கிரி, தமிழக கவர்னர் கே.கே.ஷா, திராவிட கழக தலைவர் பெரியார், சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், கேரள முதல்_மந்திரி அச்சுதமேனன் உள்பட ஏராளமான தலைவர்கள் அனுதாப செய்தி வெளியிட்டார்கள்.

டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர் களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் லீக் !

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம் லீக் !

இந்திய திருநாட்டை 800 ஆண்டு காலம் ஆண்டது இஸ்லாமிய சமுதாயம். அதே நேரத்தில் அடிமை இந்தியாவை சுதந்திர இந்தி யாவாக மாற்றியது இஸ்லாமியர்கள். நம்மவர்கள் இந்நாட்டை ஆண்டார்கள் என்பதற்கு சான்றாக ‘இந்நாளும் எந்நாளும் தாஜ்மஹால் சாட்சி சொல்லும் அதுவன்றி குதுப்மினார் சின்னமுண்டு’ இந்த சுதந்திரத்தை அடைவதற்காக நமது தேசத் தலைவர்கள், முஸ்லிம் லீக் தலைவர்கள், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் தலைவர்கள் இன்னும் ஏனைய சமுதாயத்தினர் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த நாட்டிற்காக சுதந்திர வேட்கையால் பல முஸ்லிம் லீக் தலைவர்கள், உலமாக்கள், பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் தியாகம் செய்த வரலாற்று சம்பவங்களை இந்த நாடு மறந்து விட்டதா ?

காங்கிரஸ் புகழாரம்

இந்நாட்டில் எந்த இயக்கம் தோன்றவில்லை என்றால் சுதந்திரம் இல்லையே என்று வரலாற்றில் வர்ணிக்கப்படுகிறதோ அந்த காங்கிரஸ் அதன் தலைவர் இவ்வாறு கூறுகிறார். இந்திய முஸ்லிம் லீக் தலைமையில் 1923- ஆம் ஆண்டு ஜனவரி 23 – ம்தேதி சென்னை சவுக்கார்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் சுயசரிதை வெளியிடுதல் மற்றும் மனிதருள் மாணிக்கம் மெளலானா முஹம்மது அலியின் சுயசரிதை வெளியீடு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகிறார். இவ்வாறு எங்களுக்கு கிலாபத் இயக்கத்தினை தோற்றுவித்ததின் தாக்கம்தான் இந்நாட்டில் எங்களுக்கு சுதந்திர கிளர்ச்சியையும், உணர்ச்சியையும், புரட்சியையும், சுதந்திர தாகத்தையும் எங்களுக்கு ஏற்படுத்தியது என்று தனது உரையில் கூறினார். இங்கு கவனிக்கப்பட வேண்டியது எது என்றால் வெள்ளையர் களால் சூளுரைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப்போர் ‘சிப்பாய் கலகம்’ 1857 –ம் ஆண்டு ஏற்படுத்திய நிகழ்ச்சியின் எழுச்சியைக் குறிப்பிடுவதுண்டு. ஆனால், அது வடநாடு சம்பந்தப்பட்ட ஒரு எழுச்சியாகவே முடிந்தது. ஆனால் இமயம் முதல் குமரி வரை உள்ள இந்தியப் பெருமக்களின் இதயங்களினால் சுதந்திர உணர்ச்சியை தேசிய உணர்ச்சியாக கனன்றெழுந்தது – ‘கிலாபத்’ இயக்கத்தின்போது தான். ஆக அகில இந்திய அளவிலும், அரசியல் எழுச்சியையும், உணர்ச்சியையும் ஊட்டியது முஸ்லிம் லீக் தலைவர்கள் தோற்றுவித்த ‘கிலாபத் இயக்கம்’

இந்திய தேசிய ராணுவம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ‘இந்திய தேசிய ராணுவத்தை’ உருவாக்கி நம் மண், பொன் மீது வெறி கொண்ட வெள்ளை அரசை தூங்க விடாமல் துளைத்தெடுக்கவும், துரத்தி அடிக்கவும் செய்தார். அந்த நேரத்தில் நேதாஜியின் படையில் பல்வேறு சமுதாயத்தினர் இருந்தாலும் அதில் பல முஸ்லிம் ஜெனரல்கள், கர்னல், லெப்டினென்ட் கர்னல்கள், முஸ்லிம் சிப்பாய்கள் பல பேர் இருந்தனர். இதில் நேதாஜியுடன் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் முஸ்லிம் லீகை சேர்ந்த பள்ளப்பட்டி மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி அவர்கள். நேதாஜி அவர்களுடன் இந்திய நாட்டு விடுதலைக்காக 1941 முதல்1945 வரை வெளிநாட்டிலே பெரும்பாலும் குறிப்பாக இந்தோ – சீனாவில் இருந்து செயலாற்றிய பெருமைக்குரியவர். சைக்கோன் ரேடியோவில் மூன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நேதாஜி அவ்வப்போது பேசி வந்துள்ளார். அந்த பேச்சுக்களை தமிழ் மூலம் மணிமொழி மெளலானா எம்.ஜி. கலீல் ரஹ்மான் பாகவி பிரச்சாரம் செய்து வந்துள்ளார். இது இந்திய தமிழ் வாலிபர்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் எழுச்சியையும் தந்தது.

வட்ட மேஜை மாநாட்டில் முஸ்லிம் லீக் பங்களிப்பு

முதல் வட்ட மேஜை மாநாடு (1930-32) லண்டனில் நடந்தது. இந்த மாநாட்டில் கிலாபத் இயக்கத்தின் தலைவரும், முஸ்லிம் லீக் தலைவரான மெளலானா முஹம்மது அலி பங்கேற்றார்.

உணர்ச்சியுடன் பேசினால் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்று மருத்துவர்கள் தடுத்துங்கூட மெளலானா அவர்கள் ‘என் உள்ளத்திலுள்ளதை வெளியிடாமல் இருப்பதை விட வெளியிட்டு இறந்து விடுகிறேன். இல்லையேல் சுதந்திரம் பெற்ற இந்நாட்டிலே ஒரு புதைகுழியைக் கொடுங்கள்’ என விடுதலை தாகத்தை வெளியிட்டார். எனவே, மெளலானாவின் தேசப்பற்றையும், விடுதலை வேட்கையும், மெய்சிலிர்க்க வைக்கிறது.

நம்நாடு விடுதலையான அந்த நேரத்தில் அந்த நடுநிசியில், அதாவது நிசப்தம் நிலவிய வேளையில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15 ஆம் தேதி அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மத்திய மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபையின் அத்தனை உறுப்பினர்களுடன் கூடி இருந்த நிசப்தம் நிலவிய வேளையில் அந்த நேரத்தில் இந்தியா விடுதலை பிறந்தது என்பதற்காக அறிகுறியாக பன்னிரெண்டு மணி அடித்து ஓய்ந்த அந்த வேளையில் கணீரென ஒலித்த சுதந்திர கீதம் நாம் தற்போது பாடக்கூடிய தேசிய கீதம் ‘ஜனகனமண’ அல்ல: தேசிய கீதமாக ஒலித்தது முஸ்லிம் லீக் தலைமையேற்று வழிநடத்திய தலைவரான அமரகவி அல்லாமா இக்பாலின்

’ஸாரே ஜஹான்ஸே அச்சா
ஹிந்துஸ்தான் ஹமாரா ‘

எனவே, இந்நாட்டில் முதல் தேசிய கீதமாக இந்த பாடல்தான் பாடப்பட்டது. ஆக இந்த கீதத்தை தான் தேசிய கீதமாக இந்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், இந்த கீதத்தைத்தான் இன்று நம் முப்படையின் வீரர்கள் அணி வகுக்கும் போது எடுப்பான குரலில் இசையுடன் பாடுகிறார்கள்.

சங்கைக்குரிய உலமா பெருமக்களே !
முஸ்லிம் சமுதாய சான்றோர்களே !
தங்க நிகர் சமுதாயத்தின் சிங்கநிகர்
இளைஞர் பட்டாளமே !
மாணவச் செல்வங்களே !

இந்திய விடுதலையின்
முஸ்லிம் லீகின் தியாக வரலாறு
உலகெங்கும் ஒலிக்கட்டும் !
-எம் அப்துல் பாஸித், தேவதானப்பட்டி

நன்றி : பிறைமேடை மாதமிருமுறை இதழ்

Friday, October 22, 2010

2010 டிசம்பர் 11 முஸ்லிம் லீக் மாநில மாநாடு

2010 டிசம்பர் 11 முஸ்லிம் லீக் மாநில மாநாடு எழுச்சியின் தொடர்ச்சி -
தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
தலைவர், அமெரிக்க காயிதே மில்லத் பேரவை


டிசம்பர் மாதம் என்றால் நம் சமுதாய மக்களிடம் பீதியும், தேவையில்லாத பதட்டமும் தான் இத்தனை காலமாக இருந்து வந்தது. அயோத்தி பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை காட்டி சமுதாயத்தின் பெயரில் ஆதாயத்திற்கு என்றே வீடுகளில் அடைந்து கிடந்தவர்களை எல்லாம் வீதியில் வந்து போராட செய்தோம் என்று பெருமை பேசி வந்தவர்கள் நம் சமுதாயத்தின் இளைஞர்களை நீதிமன்றங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் தொடர்ந்து அனுப்பி கொண்டு இருந்தார்கள்.

பல்வேறு மத, இன வேறுபாடுகளை புறம்தள்ளி சகோதரத்துவத்துடன் வாழ்ந்த காலத்தை வீண் செய்து நம் சமுதாய குடும்பங்களில் நிம்மதி அற்ற தன்மையை பெறச் செய்தார்கள். ஒருவருக்கு ஒருவர் விரோதியாக இருக்கும் நிலைக்கு ஆளாக்கினார்கள். ஆனால், தங்களை மட்டும் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்கள்.

இவர்களின் வீவேகமற்ற வழிகாட்டு தலில் எண்ணற்ற குடும்பங்கள் சீரழிந்து போய்விட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது. டிசம்பர் போராட்டங்களால் சாதித்தது என்ன என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

அன்று முதல் இன்று வரை சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பேரியக்கம் ஒன்று மட்டுமே பல்நோக்கு பார்வையுடன் மார்க்க நெறிக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் சமூக சமய நல்லிணக்கத்திற்கும் செயலாற்றி மற்றவர் களுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தன் மனசாட்சிக்கும் இறை பயபக்திக்கும் உகந்த வகையில் சான்று தருவார்கள்.

இதோ அடுத்தவர்களின் மன உணர்வுகளையும் ஏக் கத்தையும் அறிந்து, நாளை வல்ல அல்லாஹ்விடம் திருப்பொருத்ததை பெற வேண்டும் என்ற உயர்வான நோக்கத்தில் எத்தனையோ இன்னல்களை சமுதாயத் திற்காகவும், அல்லாஹ்விற்காகவும் பொறுமையுடன் சந்தித்த ஆற்றல்மிக்க பாராம்பரியத்திற்கு சொந்தகாரர்கள் முஸ்லிம் லீகர்கள்.

இந்த தியாக சீலர்களான இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களின் பேச்சும் செயலும் வரும் டிசம்பர்-11ஐ முன்நிறுத்தி நமது தலைவர்கள் வழிகாட்டிய வழியில் சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்! சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்!�� என்ற மாநில மாநாட்டின் நோக்கத்தை உலகிற்கு பறைசாட்டுவதுடன்நம்முடைய குரல் எத்திசையி லும் எதிரோலிக்க செய்ய வேண்டும். கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்களின் வழியில் சிராஜுல் மில்லத், மூனீருல் மில்லத் என்ற தன்னலமற்ற தலைவர்களின் வழிகாட்டுதல் தான் நம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மூலதனம்.

முஸ்லிம் லீக் என்றால் இளைஞர்களே இல்லை என்று பிரச்சாரம் செய்தவர்களுக்கு பெரும் அடியாக மணிவிழா மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதும் இளைஞர்களின் பட்டாளம் வந்து சென்னை மாநகரத்தையே திகைக்க வைத்தது.

இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் மணிவிழா மாநாட்டு மேடையிலேயே எங்கள் கட்சிக்கு நிகரான கட்சி இது, சமுதாய மக்களின் பலத்தை முஸ்லிம் லீக் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் பெற்றுள்ளார்கள் என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.

டிசம்பர் 11-ல் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்தும் முஸ்லிம் லீகர்கள் திரளாக வருவதற்கு இப்போதே திட்டம் வகுத்து செயல் படுகிறார்கள் என்று அறியும்போது மகிழ்ச்சியும், மனநிறைவும் ஏற்படுகிறது.

தமிழகம் முழுவதும் மாநில மாநாட்டுக்கு வர அழைப்பும் ஏற்பாடுகளையும் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊர் பிரைமரிகள் செய்ய தொடங்கி விட்டன என்ற செய்தி மாநில தலைமைக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.

டிசம்பர் 11-ல் நடக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நேரடி ஒளிப்பரப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்க காயிதே மில்லத் பேரவை கூட்டாக முஸ்லிம் லீக் இணையதளம் மூலம் ஒளிப்பரப்ப இருக்கிறது.

இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற வேண்டுகோளை உலகம் முழுவதும் உள்ள தமிழக முஸ்லிம்கள் தங்களின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கும் பணியை வெளிநாடு வாழ் தமிழக முஸ்லிம்கள் செய்ய தொடங்கி உள்ளனர்.

வல்ல அல்லாஹ்வின் திருவேதத்தையும், இறுதி தூதர் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் என்றும் சமுதாய அரசியல் பொது வாழ்வில் பேணிநடக்கும் இயக்கமாக இருக்கிறது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

இந்த இயக்கம் யாருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல-ஒவ்வொரு முஸ்லிமின் உரிமைமிக்க இயக்கம்.

அதனால் தான் அதனை தாய்ச் சபை"" என்று எல்லோரும் போற்றி பேணி அன்பு காட்டி அழைக்கிறோம்.

மாநில மாநாடு சிறக்க வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து ஒற்றுமையுடன் களப்பணியாற்றி மாநாடு வெற்றி பெற செய்வோம். இந்த மாநாட்டின் மூலம் நம் சமுதாயத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கட்டும்.

முனைப்புடன் செயல்படுவோம்-மாநாடு வெற்றிக்கு முழு மூச்சுடன் பாடுபடுவோம்.

சமுதாயம் தாம்பரத்தில் சங்கமம் ஆகட்டும்!
http://muslimleaguetn.com/news.asp?id=1935

Wednesday, October 6, 2010

முஸ்லிம் லீக் அகில இந்திய செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

முஸ்லிம் லீக் அகில இந்திய செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயலாளர் ஜனாப் குர்ரம் அனீஸ் உமர் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது.

நிகழ்விற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்குகிறார்.

பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்வில் வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினரும், பிறைமேடை மாதமிருமுறை ஆசிரியருமான எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

மேலும் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் பலர் கருத்துரை வழங்குகின்றனர்.

இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு : 050 467 4399 / 050 51 96 433

முஸ்லிம் லீக் இணையத்தளங்கள் :
http://www.indianunionmuslimleague.in
http://muslimleaguetn.com

Monday, October 4, 2010

அயோத்தி தீர்ப்பு: பேராசிரியர் காதர் மொகிதீன் அறிக்கை.

அயோத்தி தீர்ப்பு: பேராசிரியர் காதர் மொகிதீன் அறிக்கை.
அயோத்தி தீர்ப்பு சம்மந்தமாக இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளராரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கை:

30-09-2010 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியள வில் பாபரி மஸ்ஜித் - ராமஜென்மபூமி சம்பந்தப்பட்ட ஒரு சில வழக்குகளின் தீர்ப்பை அலகாபாத்தில் உள்ள உயர்நீதிமன்ற லக்னோ சிறப்பு மன்றம் வழங்கியுள்ளது.

1992 டிசம்பர் 6-இல் பாபரி மஸ்ஜிது என்று கூறப்பட்டு வந்த கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது. அதனால் நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் மூண்டன; மக்கள் மாண்டனர்; அரசுகளின் போக்குகளும் - நோக்குகளும் நாட்டு மக்களுக்கு வெளிச்சமாயின. அன்றிலிருந்து நேற்றுவரை டிசம்பர் 6 ஒரு சரித்திர சம்பவ நாளாக அனுசரிக்கப்ட்டு வநதுள்ளது.

இனி, அந்த நாள் நினைவில் இருந்து மறைந்து 30-09-2010-ஆம் நாள் பற்றி பேசும்படியான ஒரு தீர்ப்பை நாடு பெற்றிருக்கிறது. மூன்று நீதிபதிகளில் இருவர் கருத்தையும், மூன்றாவது நீதிபதியின் ஒரு சில கருத்தையும் இணைத்துப் பார்க்கும் போது, அயோத்தி பிரச்சினைக்கு அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது தீர்ப்பு என்று கூறுவதைவிட, சிலரின் நம்பிக்கையை நிலைநாட்டும் நீதிமன்ற அறிவிப்பு என்பதே பொருத்தமானதாக அமையும் எனலாம்.

இந்தத் தீர்ப்பை - அறிவிப்பை, வழக்குத் தொடுத்தவர் கள் முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள் எனில், அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் கருத்துக் கூறுவது தேவையற்றதாகி விடும்.

வழக்குத் தொடுத்தவர்கள், வந்த தீர்ப்பை முழுமையாக ஏற்க இயலாத நிலை ஏற்படும் போது, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் அதில் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யப்படும் போது, அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் எது கூறினாலும் அதனால் நீதிமன்றத் தீர்ப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்து விட முடியாது.

இந்த எதார்த்த நிலைமையைச் சரியாகப் புரிந்து 1989 முதலே இந்த அயோத்தி விவகாரம் பற்றிய ஒரு தெளிவான - தீர்க்கமான - தூரநோக்குடன் ஆன அணுகுமுறையை வகுத்தளித்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கே உண்டு.

பாபரி மஸ்ஜித் விவகாரம், ராமஜென்ம பூமி பிரச்சினை என்று மாற்றப்பட்டு மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, ஒரு மதப் பிரச்சினை யாகவும், பின்னர் இந்து - முஸ்லிம் பிரச்சினையாகவும் படிப்படியாக வளர்க்கப்பட்டு, கலவரங்களுக்கு வழி காட்டப்பட்டு வந்த நேரத்தில் முஜாஹிதே மில்லத் ஜி.எம். பனாத்வாலா கூறினார்:

``பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி பிரச்சினையை கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டும்; ரோட்டில் தீர்க்க முடியாது. ரோட்டுக்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்கிறவர்கள் நாட்டுக்கு நன்மை செய்ய வில்லை; முஸ்லிம் சமுதாயத்துக்கும் நலன் கருத வில்லை’’ என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்தார் பனாத்வாலா.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் வகுத்தளித்த வழியைப் பின்பற்றியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது கருத்தைத் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளது.

இன்னும் ஒருபடி மேலே சென்று, அவர் கூறினார்:

``பாபரி மஸ்ஜிது - ராமஜென்ம பூமி சம்பந்தப்பட்ட வழக்குகள் பல கோர்ட்டுகளில் 88 உள்ளன. எல்லா வழக்குகளையும் ஒருசேர, உச்சநீதிமன்றத்தில் கொண்டு செல்லப்பட்டு, அனைத்து வழக்குகளையும் ஒருசேர விசாரித்துத் தீர்ப்பு வழங்கட்டும். அந்தத் தீர்ப்பு எதுவா னாலும் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல. நாட்டில் உள்ள சமுதாயங்கள் அனைத்துமே அந்தத் தீர்ப்பை ஏற்றாக வேண்டும். இந்த நிலையை உருவாக்க வேண்டு மானால் இந்திய அரசு அரசியல் சட்டத்தில் உள்ள 143(2) பிரிவின்படி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்’’ என்றெல்லாம் விளக்கம் அளித்தார்.

இன்றைக்கு தீர்ப்பு பற்றிப் பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும் கூறிவரும் கருத்தைப் படிக்கும் போது, பனாத்வாலா எத்தகைய தூர நோக்குடையவராகத் திகழ்ந்துள்ளார் என்பதை உணர முடிகிறது. நீதிமன்றத் தீர்ப்பை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று இப் பொழுது எல்லோருமே பேசுகின்றனர்.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிக் கூறிய தவான் என்னும் அறிஞர், இது நாட்டுப்புறப் பஞ்சாயத் தார் அளித்துள்ள தீர்ப்பு போன்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

எது எப்படி கூறப்பட்டாலும் நீதிமன்றம் கூறுவது தான் ஏற்கப்பட வேண்டிய ஒன்றாகி விடுகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து எல்லாத் தரப்பினரும் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்தும் நீதிமன்ற முயற்சிதான் இந்தத் தீர்ப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருப்தி ஆகிறார்களா? இல்லையா? என்பது போகப் போகத் தெரியும்.

ஆனால், ஒரு பெரும் உண்மை எதுவெனில், இந்திய நாட்டு மக்கள் இந்தத் தீர்ப்பால் எவ்வித ஆர்ப்பாட்டம் - போர்ப்பாட்டமும் நிகழவில்லை என்பதை உணர்ந்து திருப்தி அடைந்துள்ளனர் என்பதே.

நாட்டு மக்கள் மத்தியில் அமைதியும், சுமூகமும், நட்பும், நேசமும், நல்லிணக்கமும் ஓங்குவதற்கு எல்லோரும் உறுதி ஏற்க வேண்டும் என்பதே இந்தத் தீர்ப்பின் தாக்கமாகி யிருக்கிறது.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிறைமேடை தலையங்கம் - சமுதாயம் தலைநிமிரட்டும்! தனிச் சிறப்பு தழைத்தோங்கட்டும்!!

பிறைமேடை தலையங்கம் - சமுதாயம் தலைநிமிரட்டும்! தனிச் சிறப்பு தழைத்தோங்கட்டும்!!


பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!

வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் இலங்கட்டுமாக!

அக்டோபர் திங்கள் 4 ஆம் நாள்;

வல்ல இறைவனை வணங்கி வாழ்வோம்
இல்லாதார்க்கு வழங்கி வாழ்வோம்

எல்லோருடனும் இணங்கி வாழ்வோம், இந்த அழகிய மனிதநேய முழக்கத்தை செயல்வடிவமாக்கி வாழ்வதே இஸ்லாத்தின் விழுமிய இலக்கணம் என்று மாற்றார்க்கும் மருவிலா மாண்புதனை எடுத்துரைத்த நம் சிந்தனையெல்லாம் நிறைந்து நிற்கும் சந்தனத் தமிழ்ப் பேச்சாளர், மத நல்லிணக்க மாண்பாளர், மதங்களைத் தாண்டி மனங்களை வென்ற மறைந்த நம் மாபெரும் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் இந்த மண்ணுலகில் மலர்ந்த நாள்.

தன் சுய வாழ்வின் சுகத்தை மட்டும், கொஞ்சமே பார்த்திருந்தாலும்கூட பலதரப்பட்ட பதவிகளும் வந்து கொஞ்சும் காட்சியைக் கண்டிருக்க முடியும்; கண் இமை ‘ஆம்’ என்று மட்டும் சாடை காட்டியிருந்தால் கவர்னர் பதவிகூட வீட்டு வாசலுக்கே வந்து காத்துக் கிடந்திருக்கும்; வல்லரசு நாடுகளே வியப்புக்கண் கொண்டு பார்த்த நம் பாரதப் பெருந்தலைவி இந்திரா அம்மையாரை எந்த முன் அனுமதியும் பெறாமல் பார்க்க இயலும் என்றிருந்த ஒரே முஸ்லிம் அரசியல் வித்தகர் அல்லவா தரணியெல்லாம் வலம் வந்த தகைமைசால் நம் தலைவர் அவர்கள்!

புறக்காட்சியிலே அழகு; அகக்காட்சியிலே ஆன்மீகம்; பேசினால் அழகு தமிழ், எழுதினால் எழில் மிகு இலக்கியம்; எதை விடுத்து எதை எழுத? வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் வாழுகின்ற தலைமுறைக்கும், வாழவிருக்கிற தலைமுறைக்கும் பாடமாக்கி மறைந்த தலைவர் அல்லவா நம் தலைவர்!

சந்தனத் தமிழே! உங்கள் வதனத்தில் வளர்ந்த தமிழ் வார்த்தைகள் சில உங்களால் மட்டுமே உச்சரிக்க முடியும் என்ற விந்தையைத் தந்த வரலாறல்லவா நீங்கள்.

‘மனித நேயத்தின் தென்னகத்துத் திருத்தூதர் மறைந்தார்’ என்று உங்கள் மரணத்தை மனக்கலக்கத்தோடு எழுதியதே ‘தினமணி’ நாளேடு; வேறு யாருக்குக் கிட்டியது இந்த உயரிய தகைமை?

ஆம்; வல்ல அல்லாஹ்வின் அருள் மறையைத் தமிழ் எனும் தாய்மொழியால் உணர வைக்க, தன் விரல் கொண்டே விடிய, விடிய விழித்தும், நெடிய பொழுதைக் கழித்தும் எழுதி முடித்த பாக்கியம் நிறைந்த நீங்கள் இவ்வுலகிலும் மறுஉலகிலும் ஏற்றமிகும் சிறப்பைப் பெற்றுவிட்டீர்கள் என்பது இறைவன்புறத்து நீங்கள் பெற்றப் பேரருள். அந்தப் பேரருளை எண்ணி, எண்ணி மகிழ்கிறோம்; வல்ல இறைவனைப் புகழ்கிறோம்.

இத்தகைய தூய தலைமைதான் நம் பேரியக்கம் முஸ்லிம் லீக் பெற்றிருக்கும்பேறு கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள் தொடங்கி இன்றைய நம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் வரை சொல்லாலும் செயலாலும் சிந்தனையாலும் அரசியல் பிரதேசத்தில் தூய்மையையும், வாய்மையையும் காட்டி வழி நடத்திய, வழி நடத்துகிற தலைமையல்லவா நம் தாய்ச் சபையின் தலைமை என் பிரியமுள்ள பிறை நெஞ்சே! இந்த அக்டோர் 4 ஆம் நாள் என்று மட்டுமல்ல; எந்த நாளிலும் நம் சமுதாயத்தின் பாரம்பரிய பெருமையை நிலைநாட்டி, எல்லா உரிமைகளையும் பெற்று நிலையான நிம்மதியுடன் வாழ நம் இயக்கத்தின் வளர்ச்சியும், அதன் அரசியல் வலிமையும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்கிற சீரிய சிந்தனை என்றென்றும் இருக்க இந்த நாளில் சபதம் ஏற்க வேண்டும்.

இந்த நாளை அடையாளப்படுத்திதான் ஆண்டுதோறும் தமிழகத்தில் மாநாடு நடத்தி மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விருதுகளைப் பலதரப்பட்ட சமூகச் சான்றோர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு ஒரே விருதாக அனைத்து சமூகத்தாரும் போற்றும் வகையில் ஏற்றத்தாழ்வுக்கிடமின்றி அனைவரையும் அரவணைத்து ஆதரவு நல்கி வரும் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ‘நல்லிணக்க நாயகர்’ விருது வழங்க நம் தாய்ச்சபை முடிவெடுத்து வருகிற டிசம்பர் திங்கள் 11 ஆம் நாள் அந்த மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இது வெறுமனே சாதாரண அரசியல் மாநாடா? அல்ல, அல்ல. நம் உணர்வும் உரிமையும் இரண்டறக் கலந்து நம் சமுதாயத்தின் இறையாண்மைப் பிரகடனத்தை ஓங்கி ஒலிக்கச் செய்யயும் மாநாடு. காலையில் கருத்தரங்கம், பகல் பொழுதில் பிறைக் கொடிப் பேரணி, மாலையில் மாநாட்டு நிகழ்வு என்று மிகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளை நம் தாய்ச்சபை மாநிலத் தலைமை முடுக்கிவிட்டிருக்கிறது.

இதில் என் பங்கு என்ன? என நீ கேட்பது எனக்குப் புரிகிறது. மாநாட்டின் வெற்றிக்கு உன்னால் இயன்ற பணிகள் அத்தனையும் நீ ஆற்றிட வேண்டும்; தமிழகமெங்கிலும் மாநாட்டுச் செய்தி பரவிட வேண்டும்; ஜமாஅத் பெருந்தகைகளை நேரில் சென்று சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்; எந்த அமைப்பில் இருக்கிறார்கள்? என்று யாரையும் பிரித்துப் பாராமல் அனைவரையும் அழைக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் அச்சிடப்பட்ட பிரசுரங்கள் மூலமாகவும், சுவர் விளம்பரங்கள் மூலமாகவும் சமூக மக்களுக்கு மாநாட்டு விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்; எத்தனை அதிக எண்ணிக்கையில் வாகனங்களை ஏற்பாடு செய்து அதிகமானோர் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிட இயலுமோ, அதனைச் செய்து காட்ட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மாநாட்டு ஏற்பாடுகளை முன்னின்று செயல்படுத்தும் தலைமை நிலையத்திற்கு நிதி திரட்டித் தரவேண்டும். இத்தனையும் எதற்கு? தனி நபர் வளத்திற்கா? சுயவிளம்பரம் தேடும் தன்னல பேராசைக்கா? இல்லை; இல்லை; இவை வேண்டுமானால் வசூலையே நாளெல்லாம் குறிக்கோளாகக் கொண்ட மற்ற சில அமைப்புகளுக்கு இருக்கலாம்; நமக்கல்ல. நம்முடைய கவலையெல்லாம் அரசியல் களத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்; நமக்கென உரித்தான தனிச்சிறப்பு தழைத்தோங்கி மிளிர வேண்டும்; நமது உரிமைகள் பறிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்;

அன்பு நெஞ்சே!

புறப்படு இன்றே புயலென ஆர்ப்பரிக்கும் வேகத்தில்; திறம்பட பணியாற்றும் உன் உத்வேகமும் உற்சாகமும் தாய்ச்சபை வரலாற்றில் இன்னும் ஒரு மகுடம் சூட்டட்டும்; இதுவே உன் பணி என பறைசாற்றிப் பணிபுரி; அதுவே சரி என அல்லாஹ்வும் ஏற்கட்டும்; ஆமீன்.

அன்புடன்,
மு. அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்

http://muslimleaguetn.com/news.asp?id=1901

அலகாபாத் தீர்ப்பு- நல்லிணக்கம் போற்றும் சமுதாயத்திற்கு ஏமாற்றம்..!

அலகாபாத் தீர்ப்பு- நல்லிணக்கம் போற்றும் சமுதாயத்திற்கு ஏமாற்றம்..!

-M.அப்துல் ரஹ்மான் எம்.பி.



"அயோத்தியில் பாபரி மஸ்ஜிது இடிக்கப்பட்டது ஓர் அநியாயச் செயல்;அக்கிரமச் சம்பவம்;இந் நிகழ்வுக்குக் காரணமாகவும்,பின்புலமாகவும் இருந்தவர்கள் மிகப்பெரும் அளவில் தண்டிக்கப்படவேண்டியவர்கள்."என்று லிபரான் கமிஷன் அறிக்கை மிகத் தெளிவாகக் கண்டித்திருக்கிறது.
சமய சார்பற்ற நிலையில் நல்லுள்ளம் கொண்டோர் அனைவரும் வரவேற்றனர் இந்தத் தீர்ப்பை.



பாரத நாட்டின் பாரம்பரியமிக்க பாராளுமன்றம் லிபரான் கமிஷனின் இந்த பார்போற்றும் தீர்ப்பைப் பாராட்டியதோடு,அறிக்கையில் பட்டியலிடப்பட்ட குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும் என்ற பலதரப்பட்ட குரல்களையும் இந்திய அரசின் கவனத்திற்குப் பதிவு செய்தது.
மஸ்ஜிது இருந்த அந்த இடத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக நிலை நிறுத்தும் வழக்கின் தீர்ப்பு இப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

" நீதி மன்றத்தின் தீர்ப்பு எதுவானாலும் அது மதிக்கப்பட வேண்டியது"என்பதில் நமக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஆனால் அநியாயமாகவும்,அக்கிரமமாகவும் வெறிச்செயலில் ஈடுபட்டுத் தகர்க்கப்பட்ட மஸ்ஜிது இருந்த இடத்தில் "ராமர் பிறந்த இடம்"என்று வம்பு செய்து அத்துமீறி சிலைகள் வைக்கப்பட்ட காரணத்தால் சட்டப்பூர்வமான எந்த பின்னணியும் இல்லாமல் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே அந்த இடம் ராமர் பிறந்ததாகச் சொல்லுகிறது இந்த தீர்ப்பு.மேலும் அந்தக் குறிப்பிட்ட இடமே ராமர் கோயில் கட்டத்தகுந்த இடம் என்றும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுத் தீர்ப்பு வெளியாகியிருப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விட்டதோ?என்கிற ஐயப்பாடு நாட்டில் நிலவுவதை மறுக்கவியலாது.
நீதிமன்றத் தீர்ப்பு என்பது ஆவணங்களின் அடிப்படையில் சட்டப்படியானத் தீர்வாகத்தான் இருக்க முடியும்.ஆவணங்கள் இல்லாத நிலையில் நிலத்தின் பயன்பாட்டுக் காலத்தையே பெரிதும் கவனத்திற்குரியதாக எடுத்துக் கொள்ளப்பட்டுத் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதைப் பரவலாகக் காண்கிறோம்.
ஆனால் இந்த அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு,பாதிக்கப்பட்ட உள்ளங்களின் நியாயமான எதிர்பார்ப்பை முழுமைப் படுத்துவதாக இல்லை என்பது பெருத்த ஏமாற்றம்தான்.



இது இப்போது மேல் முறையீடு என்ற உரிமையில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லுகிறது."காலம் நீட்டிக்கப்பட்டாலும் எதிர்பார்க்கப்படும் நியாயமான தீர்ப்பு இறுதியில் வெளிச்சத்துடன் வெளிவரும்"என்பது மனசாட்சியுள்ளோர் அனைவரும்,இந்தியாவின் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும், நீதிமன்றங்களில் சத்தியம் நிலை நிறுத்தப்படும் என்று நம்புவோர்கள் அனைவரும் மதம் கடந்து மனித நேயம் போற்றும் சான்றோர் யாவரும் எதிர்பார்க்கும் யதார்த்த நிலை.


தர்மத்தினை சூது கவ்வலாம்,ஆனால் இறுதியில் தர்மம் வெல்லுவதுதானே நியாயம்?அதுவே ஒரு நல்ல நிறைவான தீர்வாக அமையும்!.இந்த நல்ல நம்பிக்கையுடன் காத்திருப்போம்.!