Wednesday, April 8, 2009

கோரக்பூரின் கொடிய முகம் : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

கோரக்பூரின் கொடிய முகம் : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
திரு யோகி ஆதித்யநாத்.

உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கோரக்பூர் நகர் கோரக்நாத் மடத்து தலைமைப் பூசாரி.

முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைச் சம்பவங்களைத் திட்டமிட்டு இப்பகுதியில் செய்து வரும் ஹிந்து யுவ வாஹினி என்ற வன்முறைக் கும்பலுக்கு உந்து சக்தியாகவும், பின்புலமாகவும் இயங்கி வருபவர் என்ற கூடுதல் தகுதியும் உண்டு.

2007 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் அப்பகுதியிலுள்ள முஸ்லிம் தர்ஹாவை இடித்ததற்காக சிறைவாசம் அனுபவித்தவர்.

இப்பகுதியிலுள்ள முஸ்லிம்களை, எப்போது வேண்டுமானாலும் வகுப்பு கலவரம் வரலாம் என்ற மனோதத்துவ ரீதியிலான பயத்தில், வைத்திருப்பதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.
தேர்தல் நெருங்கி விட்டால் இத்தகைய பயத்தை அதிகப்படுத்தி, தங்களது வெறியூட்டும் பேச்சுக்களால் சகோதர சமுதாயங்களுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணி, அதை அகலப்படுத்தியும் , ஆழப்படுத்தியும் தங்களது பதவிப் பசியைத் தீர்த்துக் கொள்வோருக்குச் சிறந்த முன்மாதிரி இவர்.

14,32,002 வாக்காளர்களைக் கொண்ட கோரக்பூர் தொகுதியின் பிஜேபி நாடாளுமன்ற வேட்பாளரும் இவரே!

1989 முதல் 1996 வரை தொடர்ந்து மூன்று முறை இவர் சார்ந்துள்ள மடத்திலிருந்து தான் இத்தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய தகுதிகள் கொண்டவர்களைத் தான் பிஜேபி நாடெங்கிலும் தன்னுடைய வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவர்களெல்லாம் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தால் நாடு என்னவாகும் என்று நாட்டின் நலனில் அக்கறையுள்ள நன்மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.
இதனிடையில் சில தினங்களாக நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக விவாதிக்கப்பட்டு வருகின்ற வருண் காந்தியின் விஷம் தோய்ந்த வகுப்பு வெறிப் பேச்சும், அதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட அவரது நீதிமன்ற கைதும், அதை ஊதிப் பெரிதாக்கும் வண்ணம் நடந்தேறிய நாடகங்களும் நம் சமுதாயம் உற்று நோக்க வேண்டிய விஷயங்களாகும்.

பிஜேபியும், மாயாவதியின் பிஎஸ்பியும் பரஸ்பரம் கொண்டுள்ள அரசியல் புரிந்துணர்வு தான் வருண் காந்தி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் செய்யப்படுவதற்கு காரணம் என்ற உச்ச நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அவர்களின் கூற்று கவனிக்கப்படத்தக்கது.
வாக்காளர்களை மதரீதியாகப் பிரிப்பது ஒன்று தான் தங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று திட்டமிட்டு சங் பரிவாரம் செயலாற்றி வருவது கண் கூடு.
மேற்கொள்ளும் பிரச்சாரங்களும், தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளர்களும் அதற்கு கட்டியம் கூறுகின்றன.

இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி, அதை ஊதிப் பெருதாக்கி, மதச் சார்பற்ற அரசியல் கட்சிகளை பெரும்பான்மை சமுதாயத்தின் விரோதிகளாக உருவகப்படுத்துவதன் மூலம், மதரீதியில் மக்களைப் பிளக்கும் தங்களின் முயற்சியில் வெற்றி பெற்று, ஆட்சிக் கட்டிலில் அத்வானியை உட்கார வைக்கும் மாபெரும் சதித் திட்டத்தின் சிறு முடிச்சை, கபில் சிபல் அவர்கள் அவிழ்த்துக் காட்டியிருக்கின்றார்.

காங்கிரஸை பலவீனப்படுத்தி உத்தரப் பிரதேசத்தில் அதிக எம்பிக்களைப் பெற்றால் மாயாவதியின் பிரதமர் ஆசை பலிக்கக் கூடும்.

காங்கிரஸ் வீழ்ந்தது தன்னால் தான் என்று பிரகாஷ் காரத் அவர்கள் பெருமிதப்படக் கூடும்.
ஆனால் தேர்தல் முடிந்த பிறகு, மாயாவதி அவர்கள் பிஜேபிக்கு ஆதரவளிக்க மாட்டார் என்று அவர் உத்தரவாதம் அளிக்க முடியாது.

இதே போல் தான் கம்யூனிஸ்டு நண்பர்கள் தமிழகத்தில் அமைத்துள்ள கூட்டணியின் தலைவர் ஜெயலலிதாவும்!

காங்கிரஸுடன் கொண்ட அரசியல் வேற்றுமைகளை, சுய கவுரவப் பிரச்சினையாக எடுத்துக்
கொண்ட பிரகாஷ் காரத் போன்ற தலைவர்கள், நாடெங்கிலும் மதச் சார்பற்ற ஓட்டுகளை கூறு போட்டு வருகின்றனர்.

நாட்டின் ஸ்திரத் தன்மைக்கு அபாயச் சங்கு ஊதுகின்ற தலையாய பிரச்சினைகளைப் புறம் தள்ளி விட்டு, பிரதமர் நாற்காலியை மட்டும் பிரதானமாகக் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் வித விதமான தலைப்புகளில் கூட்டணிகள் உருவாகியுள்ளன.
அவற்றில் ஒன்று தான் தமிழகத்தில் அமைந்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணி.
சமுதாயப் பெரியோர்களே! இளைஞர்களே!! தாய்மார்களே!!!

2009 பாராளுமன்றத் தேர்தலில் மத வெறி சக்திகள் மீள முடியாத தோல்வி அடைய வேண்டும்.

அதற்கு நம் வாக்குகள் முறையாக அளிக்கப்பட வேண்டும்.
மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற வட மாநிலங்களில் பிஜேபி கூடுதல் பலத்துடனிருப்பதை நாம் மறந்து விடலாகாது.

அங்கெல்லாம் அப்படி ஒரு அரசியல் விபத்து ஏற்பட்டு விடுமானால், அதைச் சமன் செய்யும் வல்லமை நம் தமிழகத்து வாக்குகளுக்கு உண்டு.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான அணிக்கு நாம் அளிக்கும் ஒவ்வோரு வாக்கும், யோகி ஆதித்ய நாத் போன்ற அரசியல் விஷ ஜந்துக்கள் பாராளுமன்றத்திலிருந்து விரட்டப்படுவதற்கு வைக்கப்படும் வேட்டாகும்.

மாநில மாச்சரியங்களை மறப்போம்! மத வாதத்தை வேரறுப்போம்!!

ஹமீதுர் ரஹ்மான், இணைச் செயலாளர், காயிதே மில்லத் பேரவை, யு.ஏ.இ.