Monday, April 27, 2009

விடியலைத் தருவாய் இறைவா…

விடியலைத் தருவாய் இறைவா…


அமைதியைத் தருவாய் இறைவா! – மக்கள்
அகங்களில் நிறைந்திடும் தலைவா!
அமைதியைத் தருவாய் இறைவா!

இந்திய நாட்டின் தெற்கே; இலங்கிடும் இலங்கைத் தீவில்
வெந்திடும் மக்களின் வாழ்வில்; விடியலைத் தருவாய் இறைவா (அமைதி…)


ஆதித் தந்தை ஆதம்; அருளடி பதித்த மண்ணில்
நாதியில் லாத மாந்தர்; நல்வாழ் வெய்திடச் செய்வாய்!
(அமைதி…)

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் மார்க்கப்பணி செய்த நாட்டைக்
காப்பாய்காப்பாய் இறைவா;கருணை மழையைப் பொழிவாய்!
(அமைதி…)

ராத்திப் ஜலாலிய் யாவின் இன்குரல் ஒலித்த மண்ணின்
நேர்த்தி மிகுந்த மக்கள்; நிம்மதி பெறச் செய் இறைவா!
(அமைதி…)

நீர்வளம் நிலவளம் எழிலை நிறைவாய்ப் பெற்ற இலங்கை
சீர்வளம் மீண்டும் எய்த; சிந்தை இரங்கிடு இறைவா!
(அமைதி…)

வேட்டுச் சத்தம் ஒடுங்கி விரியும் மலர்தா லாட்டின்
பாட்டுச் சத்தம் ஒலிக்க; பரிந்தருள் வாயே இறைவா!
(அமைதி…)

ஆன்மீகத்தின் தென்றல் அழகாய்த் தவழ்ந்த இலங்கை
வான்புகழ் சாந்தி பெறவே; வல்லான் இறையே அருள்வாய்!
(அமைதி…)

நாட்டை வீட்டை இழந்தே நலிவால் வாடும் மக்கள்
வாட்டம் அகன்றிட உந்தன்; வாஞ்சை பொழிந்திடு இறைவா!
(அமைதி…)

எங்கள் தாய்த்திரு நாடாம் இந்தி யாவை உலகில்
திங்கள் போலத் துலங்கத்; திருவருள் புரிவாய் இறைவா!
(அமைதி…)

பாரத மண்ணில் அமைதி பல்வளம் ஒற்றுமை ஓங்க
சீராய் உன்னருள் பொழிவாய்; சிந்தையில் வாழும் இறைவா!
(அமைதி…)

-கவிஞர் தேங்கை ஷரபுத்தீன் மிஸ்பாஹி


ந‌ன்றி : ம‌ணிச்சுட‌ர் த‌மிழ் நாளித‌ழ்