Saturday, May 9, 2009

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தவர் கருணாநிதி: மத்திய அமைச்சர் அஹமத் பேச்சு

இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தவர் கருணாநிதி: மத்திய அமைச்சர் அஹமத் பேச்சு


ஆம்பூர், மே 8: இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி என மத்திய வெளிவிவகாரத் துறை இணை அமைச்சரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவருமான அஹமத் கூறினார்.

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பார் எம்.அப்துல் ரகுமானை ஆதரித்து, ஆம்பூரில் வியாழக்கிழமை இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணியாகும். இஸ்லாமியர்களை மதிக்கக் கூடியவர் முதல்வர் கருணாநிதி. அதனால்தான் அவரது ஆட்சிக்காலத்தில் இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைத்தது.

முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறது.

திமுகவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வைத்திருக்கும் உறவு காயிதே மில்லத், அறிஞர் அண்ணா காலத்து உறவாகும்.

சிறுபான்மையினருக்கு என தனியாக அமைச்சரை மத்திய அரசு நியமித்தது. சச்சார், மிஸ்ரா கமிஷன் அமைக்கப்பட்டு அவைகள் அளித்த பரிந்துரைகளைச் செயல்படுத்த மத்திய அரசு சுமார் ரூ.1400 கோடி செலவிட்டுள்ளது என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், எம்எல்ஏ ஹெச்.அப்துல்பாசித், நகரத் தலைவர் கே. இக்பால் அஹமத், திமுக நிர்வாகி எம்.ஆர்.ஆறுமுகம், நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத், காங்கிரஸ் குப்புசாமி, சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.