Friday, August 22, 2008

தேசிய ஒற்றுமையை பாதுகாக்க தியாகம் செய்வதே எங்கள் கடமை! துக்ளக் வார இதழுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் பேட்டி

தேசிய ஒற்றுமையை பாதுகாக்க தியாகம் செய்வதே எங்கள் கடமை! துக்ளக் வார இதழுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேட்டி
http://www.muslimleaguetn.com/news.asp?id=178

போராட்ட அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமைதியான சக வாழ்வையே நாங்கள் விரும்புகிறோம். தீவிரவாதத்ததை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. தேசிய ஒற்றுமையை பாதுகாக்கவும் அதற்காக தியாகம் செய்வது எங்கள் கடமை என்று நாங்கள் கருதுகிறோம் என்று பேராசிரியர் ஆகஸ்ட் 27ஆம் தேதி துக்ளக் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். பேட்டி விபரம் பின்வருமாறு:-

கேள்வி:
இந்திய முஸ்லிம் லீக், முன்பு மத்தியிலும், மாநிலத்திலும் வலுவாகவும், செல்வாக்கான கட்சியாகவும் இருந்தது. இப்போது வேறு கட்சிகளைப் பெரிதும் சார்ந்திருக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலைக்கு என்ன காரணம்?

பதில்:
தமிழகத்தில் முஸ்லிம் லீக் முன்பை விட, தற்போது பலம் கூடியதாகவே உள்ளது. தற்போது முஸ்லிம்கள் மத்தியில் 58 இயக்கங்கள் உள்ளன. அவற்றுள் பல லெட்டர் பேட் அமைப்புகள்தான்.

60 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், இப்போதுதான் முதன்முறையாக முஸ்லிம் லீகைச் சேர்ந்த ஒருவர், மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராவதற்கான (இ.அஹமது) வாய்ப்பை பெற்றுள்ளார். இதன் மூலம் தேசிய அளவிலும், உலக அளவிலும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெரும்பாலான முஸ்லிம் மக்கள், எங்கள் இயக்கத்தை ஆதரிக்கிறார்கள்.

எங்கள் அமைப்பின் கூட்டங்களுக்கு ஆட்கள் குறைவாக வரலாம்... போராட்ட அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமைதியான சகவாழ்வை நாங்கள் விரும்புகிறோம். முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள், ஒரு நிய+ஸென்ஸ் கேஸில் கூட சம்பந்தப்படக்கூடாது என்று காயிதெமில்லத் சொன்னார். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். முஸ்லிம் லீகின் மணி விழாவை ஒட்டிய மாநில மாநாட்டில் மூன்று லட்சம் பேர் பங்கேற்றார்கள். நாங்கள் சரியான பாதையில் செயல்படுகிறோம்.

கேள்வி:
த.மு.மு.க., தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகளின் பக்கம், முஸ்லிம் இளைஞர்கள் போவதற்கு என்ன காரணம்?

பதில்:
எதையுமே தீவிரமாகப் பேசக்கூடியவர்களாகவும், அணுகக்கூடியவர்களாகவும் ஒரு சாரார் இருக்கிறார்கள் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்பினர், சமுதாயத்தில் இவர்கள் ஒரு மிகச்சிறிய குழுதான்.

அடுத்ததாக, இஸ்லாமியக் கொள்கைகளை, மதக்கோட்பாடுகளை தாங்களும் தவறாக புரிந்து கொண்டு, இளைஞர்களையும் குழப்புகிறவர்கள் நீங்கள் குறிப்பிட்ட அமைப்புகள். உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் - ஜனநாயகம், தேசியம் . இதெல்லாம் தேவையில்லை என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி இவர்கள் இயங்குகிறார்கள்.

மூன்றாவது பிரிவு, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக். இஸ்லாம் - ஒரு உயர்ந்த மார்க்கம். அதைப் பின்பற்றும் மக்கள் உலகத்தின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள். அந்தந்த நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அவர்கள் வாழ வேண்டும். ஜனநாயகம் என்பது இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது அல்ல. சொல்லப் போனால் நபிகள் நாயகத்தின் போதனைகள், ஜனநாயக மரபுகளை ஒட்டியவைதான். தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதும், அதற்கான தியாகம் செய்வதும் எங்கள் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.

முஸ்லிம்களின் வேதமான குர்ஆன், நபிகளுடைய வாக்கு மற்றும் வழிமுறைகள் என்று சொல்லக்கூடிய ஹதீஸ் மற்றும் 1400 ஆண்டுகளாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், இஸ்லாமிய இலக்கியங்களும் வலியுறுத்திய கருத்துக்கள்தான் - இஸ்லாமியர்களுடைய வாழ்க்கை முறைக்கு வழி காட்டியாக இருக்க முடியும். இவற்றில் சொல்லப்பட்ட கருத்துக்கள், ஜனநாயகத்தின்பாற்பட்ட கருத்துக்கள்தானே தவிர, வேறு வழிமுறைகளை மார்க்கம் போதிக்கவில்லை.

ஆகவே, நாங்கள் தேசியத்தை நம்புகிறோம். 95 சதவிகித இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். தேசியப் பண்புகளை வளர்ப்பதோடு, பன்முகத்தன்மை கொண்ட இந்திய சமூகத்தில் ஒருவரை ஒருவர் மதித்து, சமூக நல்லிணக்கத்திற்குப் பாடுபடுவதை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தனது கடமையாகக் கொண்டுள்ளது.

பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள முஸ்லிம் குடும்பங்களை மார்க்கரீதியாக இணைக்கின்ற வகையில், தமிழகத்தில் 11 ஆயிரம் மஹல்லா ஜமாஅத்கள் இயங்கி வருகின்றன. நபிகள் நாயகம் கூறிய போதனைகளின் அடிப்படையில் இயங்கும் அமைப்புகள் இவை. தற்போது இதற்கு எதிராகப் போட்டி பள்ளிவாசல்களை த.மு.மு.க., தவ்ஹீத் அமைப்புகள் ஆங்காங்கு உருவாக்கியுள்ளன. அப்படி சுமார் 50 பள்ளிவாசல்கள் இருக்கும். பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்கள் சிலவற்றை இந்த அமைப்பினர் கடைப்பிடிப்பதில்லை.

உதாரணமாக, பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக போகும்போது தொப்பி அணிய மாட்டார்கள். ஜெயிலுக்குப் போகும்போது மட்டும் தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டு, கையை ஆட்டுகிறார்கள். இது என்ன பெருமையான செயலா? இளைஞர்கள் தவறான பாதையில் திசை திருப்பப்படக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம்.

கேள்வி:
குண்டு வெடிப்புச் சம்பவங்கள், சதிகள் தொடர்பாக இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைது என்று செய்தி வெளியாகும்போது, அதைக் கண்டிக்கிறீர்கள். ஆனால், மதத்தின் பெயரால் இப்படி தீவிரவாதச் செயல்கள் நடைபெறுவதை எதிர்த்து ஒரு தொடர் இயக்கமோ, பிரச்சாரமோ நீங்கள் செய்வதில்லையே?

பதில்:
கடந்த 3 மாதங்களில் நான் சுமார் 200 கூட்டங்களில் இது பற்றிப் பேசியிருக்கிறேன். விளம்பரப்படுத்தி, அறிவித்துவிட்டு யாத்திரை மாதிரி செய்ய வேண்டும் என்கிறீர்கள். அப்படிச் செய்யவில்லைதான். ஆனால், எல்லா பள்ளிவாசல்களிலும், வன்முறையை மார்க்கம் ஏற்கவில்லை என்று எடுத்துச் சொல்லும்படி நாங்கள் கேட்டுக் கொண்டு, அவர்களும் (இமாம்கள், ஆலிம்கள்) தொழுகை முடிந்தவுடன், குத்பா பிரச்சாரத்தின்போது, இதுபற்றிப் பேசுகிறார்கள். அமைதியையும், பிற மனிதர்களுடன் ஒற்றுமையையும்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறதே தவிர, தீவிரவாதத்தை இஸ்லாமிய மார்க்கம் ஆதரிக்கவில்லை.

அதேசமயம் எல்லா வன்முறைச் சம்பவங்களையும் முஸ்லிம் கண்ணோட்டத்துடனேயே போலீசும், மீடியாவும் அணுகக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். காரணம், தமிழகத்தில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள்... என பல குழுக்கள் இயங்கி வருகின்றன.

கேள்வி:
மதம் வன்முறையைப் போதிக்கவில்லை என்கிறீர்கள். ஆனால், தீவிரவாதிகள் ஜிஹாத் என்றும், இறைவனின் கட்டளை என்றும் பேசுகிறார்கள்.

பதில்:
மதத்தின் போதனையை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, தவறான காரியத்தில் ஈடுபடுகிறார்கள். தீவிரவாதத்தில் ஈடுபடுகிறவர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு இழுக்குத் தேடித்தரு கிறார்கள்.

கேள்வி:
சிமி மீதான தடை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
ஆதாரங்கள் இல்லாமலா அரசு தடை செய்திருக்கும்? பல பெயர்களில் செயல்படும் இஸ்லாமிய அமைப்புகள் பற்றி, புலனாய்வு அமைப்புகளை கொண்டு ஆராய்ந்து, விரிவான ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நான் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். காரணம், என்னென்னமோ சொல்கிறார்கள். இறைவன் ஒருவனே என்ற பெயரில் ஒரு இயக்கமாம். நான் மட்டும் என்ன, இறைவன் என்பது இரண்டு, மூன்று பேர் என்றா சொல்கிறேன்? அடுத்து இஸ்லாமியப் பாதுகாப்பு இயக்கம் என்றொரு அமைப்பு. நானும் இஸ்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

ஒரு சிலரால், மார்க்கத்துக்கே கெட்ட பெயர் வரக் கூடாது. ஆகவே, எந்தெந்த, அமைப்பு எப்படிப்பட்டது என்று தமிழக அரசு ஆராய்ந்து அறிவித்தால் நான் வரவேற்பேன். வன்முறையைத் தூண்டுபவர்கள், மதத்தின் பெயரால் துவேஷத்தைப் பரப்புகிறவர்கள், எந்த மதத்தவராயினும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உதாரணமாக அமர்நாத் பிரச்சினை - அந்த மாநிலத்தில் பேசி தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதற்காக இங்கே சிலர் ஆர்ப்பாட்டம் என்று ஏன் நடத்த வேண்டும்? இங்கே கும்பகோணம் மகாமகத்தின்போது, முஸ்லிகள் தண்ணீர்ப்பந்தல் வைப்பதுண்டு. பிரகதீஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டபோது, நாங்கள் 2 ஆம்புலன்சுகளை அனுப்பி, சுமார் 250 பேர் காப்பாற்றப்பட உதவினோம். இந்தப் பரஸ்பர நல்லுறவு நீடிக்க வேண்டும். அரசியலுக்காக மத உணர்ச்சிகளைத் தூண்டி விடுபவர்களால் அமைதி குலையும். எந்தத் தரப்பினர் இதைச் செய்தாலும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி:
சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு, முஸ்லிம்களுக்குப் பயனளிப்பதாக இல்லை என்று உங்கள் சமூகத்திலேயே ஒரு சாரார் கூறியுள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:
பயனே இல்லை என்று சொல்லி விட முடியாது. இதுவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 147 பிரிவுகளோடு முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டிருந்தனர். அது கடலில் கரைந்த பெருங்காயம் மாதிரி. இப்போது முஸ்லிம்களுக்கு தனியாக 3.5 சதவிகிதம் எனும்போது, மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் பல இடங்கள் கிடைப்பது நிச்சயம் என்பது ஒரு பலன்தானே? முதலில் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு இடம் என்றிருந்தது போய், பிற கல்லூரிகளிலும் இடம் கிடைப்பதற்கு உத்தரவாதம் வந்துள்ளது. இதனால் பாதிப்பு முஸ்லிம் கல்வி நிறுவனங்களுக்குத்தான். இந்த ஒதுக்கீடு போதும் என்று சொல்வி விட முடியாது. ஆனால் பயன் அளிப்பதுதான்.

கேள்வி:
இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு ஒருவர் மாறினால், அவருடைய ஜாதி இழிவு நீங்கி விடுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், முஸ்லிம்களிலும் பின் தங்கியவர்கள் என்று சொல்லிச் சலுகை கோரப்படுகிறது. இது முரண்பாடு இல்லையா?

பதில்:
இஸ்லாம் மார்க்கத்தில் ஜாதி என்ற அமைப்பு இல்லை. வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்குள் ஜாதி அமைப்பு உள்ளது. தமிழகத்தில் இல்லை. ராவுத்தர், தக்னி, மரைக்காயர், லப்பை போன்ற பல பெயர்களில் முஸ்லிம்கள் இருப்பதாக, பெயர்க்காரணங்கள் உண்டு. குதிரை வியாபாரம் செய்தவர்கள் ராவுத்தர்கள்., மரக்கலங்களைச் செலுத்தி கரையோரம் வசித்தவர்கள், மரக்காயர்கள் - இப்படி பெயர்கள் வந்தன. இதை ஜாதியாக்கியது அரசியலும், இடஒதுக்கீடும்தான்.

பள்ளிவாசல்களில் வேலை செய்பவர்கள் லெவை எனப்படுவோர். ஆரம்பத்தில் அவர்களுக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு இருந்தது. பிறகு லப்பைகளுக்கும், மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு விட்டது.

கேள்வி:
முஸ்லிம்கள் நடத்துகிற ரமளான் நிகழ்ச்சியில், இந்துக்கள் விரதம் இருப்பதை முதல்வர் கலைஞர் கேலி பேசுகிறார். இந்து கடவுள்களை விமர்சிக்கிறார். இத்தகைய பேச்சுக்களை உங்களைப் போன்றோர், கண்டனம் செய்தால், மத நல்லிணக்கத்திற்கு உதவும் அல்லவா?

பதில்:
நாங்கள் ரமளான் நோன்பு திறப்பு நடத்தவில்லை. எங்களது எந்த நிகழ்ச்சியிலும் அவர் இந்து மதத்தைக் கிண்டல் செய்யவில்லை. சேது சமுத்திரத் திட்டம் பற்றிப் பேசும்போது, ராமரைப் பற்றி சில கருத்துக்கள் கூறினார். ஆனால், எங்களைப் பொருத்த வரை, பிற மதத்தினரின் நம்பிக்கைகளை மதிக்கிறோம். அதைக் குறை சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை. ராமரைப் பற்றி, முஹம்மது இக்பால் என்ற கவிஞர், இமாம் ஏ ஹிந்த் . அதாவது ~இந்தியாவின் ஆன்மீக குரு என்று புகழ்ந்து பாடி இருக்கிறார். இதை நான், பேராசிரியர் அன்பழகன் உட்கார்ந்திருந்த மேடையிலேயே எடுத்துக் கூறிப் பேசினேன்.

கேள்வி:
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், முஸ்லிம்களுக்கு எதிரானது என்று மாயாவதியும், இன்னும் சிலரும் பிரச்சாரம் செய்தது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:
இது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு அரசு, இன்னொரு நாட்டு அரசுடன் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தத்தை, மதத்துடன் தொடர்பு படுத்திக் கொச்சைப் படுத்தக் கூடாது. இந்த ஒப்பந்தம் குறித்த எங்களது சில ஐயங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, திருப்தி அளிக்கும் வகையில் விளக்கங்கள் தந்தார். இந்த ஒப்பந்தத்தால், நமது அணு ஆயுத சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.

அமெரிக்க ஆதிக்கம் என்கிறார்கள். அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் இப்போது இல்லை. சீனா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற பல நாடுகள் வலுவடைந்து வருகின்றன. இன்னும் 10 ஆண்டுகளில் நாம் சீனாவை முந்தி விடுவோம் என்று ஜெர்மானிய பத்திரிகை ஒன்று கணிக்கிறது. ஆகவே, அமெரிக்காவின் ஆதிக்கம் என்பதே அர்த்தமற்றது.

கேள்வி:
தமிழகத்தில் தி.மு.க.வுடன் இடதுசாரிகள் நீடிப்பது சந்தேகமாகி விட்டது. இடதுசாரிகளுடன் முஸ்லிம் லீகிற்கு நல்லுறவு உண்டு. முஸ்லிம் லீக் தி.மு.க. அணியில் தொடருமா? மூன்றாவது அணி பற்றிப் பரிசீலிக்குமா?

பதில்:
தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அணியிலும் - இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தொடரும். மூன்றாவது அணி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதே எங்கள் கருத்து.

-இவ்வாறு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் பேட்டியில் கூறியுள்ளார்.

பேட்டி: எஸ்.ரமேஷ்
நன்றி: துக்ளக்