Thursday, August 21, 2008

புதுப்பட்டினம் சம்பவம்: ஜாதி மோதல் அல்ல: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம்

புதுப்பட்டினம் சம்பவம்: ஜாதி மோதல் அல்ல: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம்


சென்னை, ஆக. 20: புதுப்பட்டினத்தில் நடந்த சம்பவம் போதையில் வந்தவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறே தவிர ஜாதி மோதல் அல்ல என்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அதன் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பு செயலாளர் புதுப்பட்டினம் எஸ்.ஜாகீர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், புதுப்பட்டினத்தில் இற ங்கி அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடு க்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டது.

உணவக உரிமையாளர் பாஷா உள்பட 5 பேர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தனர். முஸ்லிம்கள் நடத்தும் 15 கடைகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டன.

உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து கலவரம் செய்தவர்களை விரட்டி, நிலைமையைக் கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தனர். உடைமைகள் காப்பாற்றப்பட்டன.

இதுபற்றி அறிந்த தலைவர் கே.எம்.காதர் முகைதின் என்னிடம் நிலைமையைக் கேட்டறிந்தார்.

இச்சம்பவம் போதையில் வந்தவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே தவிர சாதி மோதல் அல்ல. இதைத் தெளிவுபடுத்திய வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கு நன்றி.

பாதிக்கப்பட்ட வியாபாரிகள், படுகாயமடைந்தவர்கள் அனைவருக்கும் முதல்வர் உதவ வேண்டும் என்றும் ஜாகீர் கோரியுள்ளார்.