December 17, 2008
தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது! -நாடாளுமன்றத்தில் பேராசிரியர்
தீவிரவாதத்தை எந்த மதத்துடனும் இணைத்துப் பேசக்கூடாது. தீவிரவாதம் குறித்த வெள்ளை அறிக்கை, ஒன்றினை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என தலைவர் பேராசிரியர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
அஸ்ஸாம் மாநில வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே. எம். காதர்மொகிதீன் பேசியதாவது:-
அஸ்ஸாம் மாநில வெடிகுண்டு சம்பவம் தொடர்பான இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்க எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு முதலில் மகிழ்ச்சியை தெரிவித்துகொள்கிறேன்.
தீவிரவாதம் என்பது நமது இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும், சர்வதேச அளவிலும் மிகப் பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. மனித நேயத்திற்கு எதிரான, செயலாக அது இருந்து வருகிறது.
குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த அக்டோபரில் 4 மாவட்டங்களில் நடைபெற்ற கார் மற்றும் மோட்டார் வெடிகுண்டு தாக்குதலில் 80 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்., இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்த இடத்திலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் உடனடியாக இந்த சம்பவத்திற்கு முஸ்லிம்களே காரணம் என முஸ்லிம் சமுதாயத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இஸ்லாமிய பயங்கரவாதம், என்ற சொல்லாடல், கையாளப்பட்டது.
உண்மையில் பயங்கரவாதம் எந்த மதத்துடனும் தொடர்புடையதல்ல. பயங்கரவாதம் என்பதே ஒரு தனி மதமாகத்தான் இருந்து வருகிறது.
நாம் முஸ்லிம் பயங்கரவாதம் என்றோ அல்லது இந்து பயங்கரவாதம் என்றோ அல்லது கிறிஸ்தவ பயங்கரவாதம் என்றோ, சீக்கிய பயங்கரவாதம் என்றோ அழைக்கக் கூடாது. பயங்கரவாதம் என்பதை ஒரு தனி இனமாக - மதமாக அடையாளப்படுத்த வேண்டும்.,
பயங்கரவாதம் ஒரு குற்றம் சார்ந்த மதம். மனித நேயமற்ற மதம் மற்றும் அது ஷைத்தானுடைய மதம். அந்த பயங்கரவாத மதத்தை மற்ற எந்த மதங்களுடனோ அல்லது சமுதாயத்துடனோ ஒப்பிடக்கூடாது.
சமீபத்திலே மலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாத தொடர்பான விசாரணையில் இந்து மத, துறவிகளும், பெண் துறவிகளும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், நாம் அவர்களை இந்து பயங்கரவாதிகள் என்று அழைக்கவில்லை. அப்படி அழைப்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்து பயங்கரவாதம், முஸ்லிம் பயங்கரவாதம், கிறிஸ்துவ - சீக்கிய பயங்கரவாதம், இது போன்ற வார்த்தை பிரயோகங்களை ஆட்சேபிக்கிறேன்.
அஸ்ஸாம் மாநிலத்தில் நாம் கவனம் செலுத்தும்போது, சுமார் 1500 சம்பவங்கள் கடந்த ஆண்டுகளில் மாநிலத்தின் பல இடங்களில் நடைபெற்றுள்ளன. அதில் மிக முக்கியமானதாக இந்த தொடர் வெடிகுண்டு சம்பவம் அமைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இந்த சம்பவம்தான் மிகவும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சமீபத்தில் வெளியான மில்லி கெஜட் என்ற பேப்பரிலே குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளில் நமது நாட்டில் மட்டுமே 174 குழுக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு-கஷ்மீரில் 32ஆம், பஞ்சாபில் 12ஆம், மணிப்பூரில் 40ஆம், அஸ்ஸாமில் -36ஆம், திரிபுராவில் 30ஆம், நாக்பூரில் 3ஆம், மேகாலயாவில் 4ஆம் மிசோரமில் 2ஆம், அருணாச்சலப்பிரதேசத்தில் 1ஆம் பயங்கரவாத அமைப்புகளாக கண்டறியப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
நமது மேன்மை தங்கிய உள்துறை அமைச்சர் பயங்கரவாதம் குறித்த விவாதத்தின் போதெல்லாம், மனிதநேயத்தை நாம் வளர்க்க வேண்டும் (அப் லிஃப்ட் ஆப் ஆம் ஆத்மி) என்று குறிப்பிடுகிறார்.
ஆனால், இன்றைய முக்கியத் தேவை நாட்டிலிருந்து வெடிகுண்டு கலாசாரத்தை வேரோடு பிடுங்கி எறிவதே ஆகும். (அப்ரூட் தி ஷபாம் ஆத்மி).
பயங்கரவாதம் தொடர்பான விவாதத்தின்போதெல்லாம் நான் ஒவ்வொரு முறையும் வலியுறுத்தி கேட்கிறேன். நமது நாட்டிலுள்ள பயங்கரவாத குழுக்கள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்யவேண்டும்.
அந்த பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் யார்? அவர்களின் கொள்கைகள் என்ன? அவர்கள் நமது நாட்டில் எங்கெல்லாம் உள்ளார்கள்? என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பது குறித்த அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்க வேண்டும்., அப்போதுதான் மக்கள் அவர்கள் யார் மற்றும் எப்படிப்பட்டவர்கள் என்பதை அடையாளம் காண முடியும்.
அஸ்ஸாம் என்றால் அரபி மொழியின்படி ஷமரணம் என்று அர்த்தம். ஆனால், இன்று அஸ்ஸாம் பிணங்களின் குவியல் அறையாகவே மாறி காட்சியளிக்கிறது. அந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் தொடர் குண்டுவெடிப்புகளின் காரணங்களால் ஏராளமான பொது மக்கள் செத்து மடிந்துள்ளார்கள்.
இந்த வெடிகுண்டு தாக்குதலை நமது இந்திய மண்ணிலிருந்து வேரோடு, பிடுங்கி எறிந்தே ஆக வேண்டும்.,
நமது இந்திய தேசம் பல மொழி, இன, மத, கலாசாரங்களை உள்ளடக்கிய பன்மைத்துவ சமுதாயமாக திகழ்ந்து வருகிறது. அனைத்து, மதத்தைச் சேர்ந்தவரும், அனைத்து, இனத்தவரும் சங்கமித்து வாழும் தேசமாக உள்ளது.
இங்குள்ள ஒவ்வொருவரும் இந்தியாவுக்கு சொந்தமானவர்களே. அஸ்ஸாம் மாநிலத்தை பொறுத்தவரை அங்குள்ள முஸ்லிம்களை குறித்த ஒரு தவறான பிரச்சாரம் நெடுங் காலமாக பரப்பப்பட்டு வருகிறது., நாம் அந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
அஸ்ஸாம் முஸ்லிம்கள் பெங்காலி மொழி பேசுவதன் காரணமாக அவர்கள் வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் மற்றும் அந்நியர்கள் என குற்றம் சாட்டப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு வந்த இந்த 4 ஆண்டு காலத்தில் பலமுறை அஸ்ஸாம் முஸ்லிம் பிரச்சினை தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
இங்கே உள்ள அஸ்ஸாம் முஸ்லிம்கள், ஒவ்வொருவரும் இந்த தேசத்தை சார்ந்தவர்கள் தான். அவர்களை, நாம் நமது இந்திய குடிமக்களாகவே நடத்திட வேண்டும். அந்த மக்கள் வேற்று நாட்டினர் அல்ல. வெளியிலிருந்து அவர்கள் குடியேறவில்லை. அவர்களை அந்தியர்களாக சித்தரிப்பதும், அப்படி நடத்துவதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.
நான் இன்னமும் உறுதியாக சொல்வேன். அந்த மக்கள் (அஸ்ஸாமியர்) நமது நாட்டின் மற்ற மக்களிடமிருந்து எந்த வகையிலும் வேறுபட்டவர்கள் இல்லை.
அஸ்ஸாம் முஸ்லிம்களில் ஒரு சிலர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது துணை போயிருக்கலாம். அவர்களை நாம் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டுமே தவிர அதற்காக அஸ்ஸாம் முஸ்லிம்கள், அனைவரையுமே பயங்கரவாதிகள் என்றோ அல்லது பயங்கரவாதத்திற்கு துணை போகிறார்கள் என்றோ அல்லது அந்நியர்கள் என்றோ சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நான் மிகவும் வலி யுறுத்தி கூறும் இந்த முக்கிய விஷயத்தை ஒவ்வொருவரும் சற்று உற்று கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நமது நாட்டில் உள்ள எந்த ஒரு நபரையும், எந்த ஒரு குடிமகனையும் அந்நியர்களாகவோ, வந்தேறிகளாகவோ நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நமது அரசுக்கு மிக முக்கியமான கடமை ஒன்று உண்டு. நமது நாட்டில் எவரெல்லாம் வெளிநாட்டினர், எவரெல்லாம் வந்தேறிகள் என்பதை கண்டறிந்து அடையாளப்படுத்த வேண்டும். நான் மறுபடியும் வலியுறுத்துகின்றேன். இது நமது அரசின் உரிமைசார்ந்த, முக்கியமான ஒன்றாகும்.
உலகில் உள்ள தேசங்களிலெல்லாம் மிகச்சிறந்த உன்னதமான தேசம் நமது இந்திய தேசம் என்று கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கின்றேன்
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.
பேராசிரியர், உரையாற்றிக் கொண்டிருக்கும்போது சுமார் 8 முறை எதிர்க்கட்சியினர் குறுக்கீடு செய்து இடையூறு விளைவித்தனர். ஆனாலும், பேராசிரியர், தொடர்ந்து தனது ஆணித்தரமான கருத்துக்களை பதிவு செய்தார்.