Wednesday, December 17, 2008
மத நல்லிணக்கம் வளர்க்க பல்கலைக்கழகம்! பாராளுமன்றத்தில் பேராசிரியர் கோரிக்கை!!
மதநல்லிணக்கத்தை உருவாக்கி வளர்க்கும் வகையில் மத்திய அரசு (ஹார்மனி இந்திய யூனிவர் சிட்டி) மதநல்லிணக்க இந்திய பல்கலைக்கழகம், ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
வெள்ளியன்று (12-ந் தேதி) நாடாளுமன்ற கேள்வி பதில் நேரத்திற்கு பின்னர் பூஜ்ஜிய நேரத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது:-
நமது இந்தியத் திருநாட்டில் மதநல்லிணக்கத்தை நல்ல முறையில் வளர்க்கும் விதமாக மதநல்லிணக்க இந்திய பல்கலைக்கழகம் ஒன்றினை மத்திய அரசு அமைத்திட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இப்படி அமையும் மத நல்லிணக்க இந்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து மதங்களிலும் உள்ள மத நல்லிணக்கம் அமைதி பற்றிய பொதுவான தத்துவங்கள் தொகுக்கப்பட்டு போதிக்கப்படவேண்டும்.
பகவத் கீதை, திருக்குர்ஆன், பைபிள் மற்றும் திருக்குறள் ஆகிய நூல்களில் அடங்கியுள்ள பொதுவான தத்துவங்கள் அனைத்தையும் பாடங்களாக பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்பட வேண்டும்., இதன் மூலம் நமது நாட்டில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் மற்றொரு மதத்தின் தத்துவங்களை - போதனைகளை நல்ல முறையில் புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் அன்பு செலுத்தவும் - மரியாதை செலுத்தவும் வாய்ப்பு அமையும்., இதன் மூலம் நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் தழைத்தோங்கும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.