வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கு ஒதுக்கும் படி கேட்போம்
அப்துல் பாசித் எம்.எல்.ஏ. பேட்டி
வாணியம்பாடி,பிப்.23-
வேலூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் எங்கள் கட்சிக்கே ஒதுக்கும்படி தி.மு.க. விடம் கேட்போம் என அப்துல்பாசித் எம்.எல்.ஏ. கூறினார்.
வாணியம்பாடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அப்துல்பாசித் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனி நல வாரியம்
சமீபத்தில் நடைபெற்ற உலமாக்கள் மாநாட்டில் இந்திய ïனியன் முஸ்லீம் லீக் சார்பில் உலமாக்களுக்கு என தனிவாரியம் அமைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் நலவாரியம் அமைத்த தமிழக முதல்வருக்கும், உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மதரசா பள்ளிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு இலவச உணவு தொடர்ந்து வழங்க வேண்டும். மேலும் பள்ளிகளுக்கான மின்கட்டணம் சாதாரண வகையில் இணைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மசூதிகள் உள்ளது. இவற்றிக்கு மர்கஸ் என்ற தலைமை அமைப்பு உள்ளது. இவ்வமைப்பை கலந்து பேசிய பின்பு வக்பு வாரியம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
எங்கள் கட்சிக்கு ஒதுக்க கேட்போம்
இலங்கை பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் இலங்கை தமிழர்களுக்கு உதவும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தேவையில்லாமல் அரசை குறை கூறி வருகிறார். இது கண்டிக்க தக்கது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியை முஸ்லீம் லீக் கட்சிக்கும் மீண்டும் ஒதுக்ககோரி தி.மு.க. தலைமையிடம் கோருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.