பாங்காக் காயல் நல மன்றம் கட்டிக்கொடுத்துள்ள காயல்பட்டினம் கே.எம்.டி.மருத்துவமனையில் புதிய பிரசவ வார்டு தேசிய தலைவர் இ.அஹ்மத் திறந்து வைத்தார்!
காயல்பட்டணம் மருத்துவ அறக்கட்டளை – கே.எம்.டி. மருத்துவமனையில் பாங்காக் காயல் நல மன்றம் சார்பில் ரூ.18 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பிரசவ வார்டு திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ தலைமை தாங்கினார்.
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், பாங்காக் காயல் நல மன்றத் தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் அமீர் சுல்தான் கிராஅத் ஓதினார். கே.எம்.டி. மருத்துவமனை செயலாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வரவேற்றுப் பேசினார். திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து, மத்திய இரயில்வே துறை இணையமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவருமான இ.அஹ்மத் ஸாஹிப் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது:-
காயல்பட்டினம் பெருநகரில் சிறப்பிற்குரிய மருத்துவமனையில் இந்த பிரசவ வார்டு திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் இந்தியாவில் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே நமது லட்சியம். இன்று இருக்கக் கூடிய டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசாகட்டும்... தமிழ்நாட்டில் டாக்டர் கலைஞர் தலைமையிலான மாநில அரசாகட்டும... சிறுபான்மை முஸ்லிம்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். நம் சமுதாயத்தினர் இத்திட்டங்களை பயன்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கக்கூடிய அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு எனது சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவரது வெற்றிக்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவரும், தேசிய பொதுச் செயலாளருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், முஸ்லிம் லீக் தொண்டர்கள் அயராது உழைத்திருப்பதையறிந்து நான் மெத்த மகிழ்ச்சியடைந்தேன். இதற்காக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் காதர் மொகிதீனை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்ததையும் நான் அறிவேன்.
நான் இன்று காலையில் காயல்பட்டினத்திற்கு வந்தபோது சகோதரர் அனிதா ராதாகிருஷ்ணன் பற்றி எனக்குத் தெரிவித்தார்கள். நான் அவரை நேரில் காண்பது இதுவே முதல்முறை என்றாலும், தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அவரைப்பற்றி தொடராக வந்துகொண்டிருந்த செய்திகள் மூலம், நிச்சயம் அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்று அப்போதே நான் எண்ணினேன். அது இப்போது நிறைவேறியிருக்கிறது. தொகுதிக்கு நன்மைகள் செய்வதில் தனியார்வம் கொண்டுள்ள இவரைப் போன்றவர்கள்தான் இன்றைய அரசியலுக்கு மிகவும் தேவையானவர்கள். அவரது பணி தொடர எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று காலையில் காயல்பட்டினம் இரயில்வே நிலையத்திற்குத் தேவையான பல கோரிக்கைகள் என் முன் வைக்கப்பட்டது. அவற்றில் பலவற்றை நான் நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அதன் தொடர்ச்சியாக இப்போது உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், செந்தூர் விரைவு வண்டியை தினசரி சேவையாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். துறை நிர்வாகிகளிடம் கலந்தாலோசனை செய்து, இக்கோரிக்கையை நிறைவேற்ற நான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என இவ்விழாவின் வாயிலாக நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு இ.அஹ்மத் ஸாஹிப் பேசினார்.
கே.எம்.டி.மருத்துவமனை மேலாளர் கே.அப்துல் லத்தீஃப் நன்றி கூறினார். ஹாஜி எம்.ஏ.அபுல்ஹஸன் ஷாதுலீ ஆலிம் ஃபாஸீயின் துஆவுடன் திறப்பு விழா நிறைவுற்றது.