சட்டமன்றங்களில் என்ன நடந்தது?
1937 –இல் ஒரிசா சட்டப்பேரவையில் ‘வந்தே மாதரம்’ தேசிய கீதமாகப் பாடப்பட்டது. சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. அமர்ந்தேயிருந்தனர். சட்டப் பேரவைத் தலைவரிடமும் முறையிடப் பட்டது. தேசிய கீதம் பாடும்போது உட்கார்ந்திருப்பதும் எழுந்திருப்பதும் அவரவர்களின் விருப்பம் என்று கூறிக் கழன்று கொண்டு விட்டார் சபாநாயகர்.
ஒரிசாவில் மட்டுமல்ல; அதே கால கட்டத்தில் (1938 –இல்) சென்னை மாநிலத்தில் என்ன நடந்தது? சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அப்பொழுது பிரதமர் (அப்பொழுது பிரதமர் என்று தான் பெயர்)
சட்டப் பேரவைத் தலைவராக இருந்தவர் ஆந்திரப்பகுதி – கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த புலூசு சாம்பமூர்த்தி – வழக்கறிஞர் – சுதந்திரப் போராட்டத்துக்காக அத்தொழிலை உதறி எறிந்தவர் – மேல் சட்டைகூட அணியாதவர்.
”வந்தே மாதரம்” பாடலை சட்டமன்றம் தொடக்கப்படும்போது பாடச் செய்ய வேண்டும் என்பது அவரின் ஆசை ! ஆசை நிறைவேற்றப் பட்டது. முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள்.
வறட்டுத்தனமாகக் கூச்சல் போடவில்லை அவர்கள்; வளமான காரணத்தையும் எடுத்துக் கூறினார்கள்.
இந்துக் கடவுள்களைப் போற்றித் துதிக்கும் ஒரு பாடலை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்க் கேள்வி வைத்தார்கள்.
பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய இந்து மத முத்தேவிகளும் அப்பாடலில் துதிக்கப்படுகிறார்கள், எனவேதான் இந்த எதிர்ப்பு.
ராஜாஜி பிரதம அமைச்சர் ஆயிற்றே ! இதற்கு ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டாமா? அப்படி செய்யாவிட்டால் அவர் எப்படி ‘ராஜதந்திரி’ யாவார்?
சபை அலுவல் தொடங்கும் நேரம் காலை 11 மணி; இதற்கு முன்னதாக ‘வந்தே மாதரம்’ பாடிவிடலாம்; மற்றவர்கள் இதற்குப்பின் சபைக்கு வரலாம் என்பதுதான் அந்த சமாதான நடவடிக்கை.
இன்னொன்றையும்கூட சேர்த்துக் கூறினார். வேண்டுமானால் வந்தே மாதரத்தோடு மற்ற மதங்களில் உள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம் என்று நரியை நனையாமல் குளிப்பாட்டப் பார்த்தார்.
ஆனால் முஸ்லிம்களிடம் அந்தப் பருப்பு வேகவில்லை. சட்டமன்றத் தில் குறிப்பிட்ட மதத்தின் கடவுள்கள் பெயரில் பாடல் இடம்பெறக் கூடாது என்பதிலே மிக உறுதியாக இருந்தார்கள்.
வேறு வழியில்லை, வந்தே மாதரம் கைவிடப்பட்டது.
சவுத்துப் போய்க் கிடக்கும் சங்பரிவார்க்கூடாரம் இதனைத் தூக்கிப் பிடித்து உயிர் தப்பித்துக் கொள்ளலாமா என்று முண்டிப் பார்க்கிறது. இது ஏதோ குறிப்பிட்ட முஸ்லிம்களின் பிரச்சினை மட்டுமல்ல;
மதசார்பற்ற சக்திகளின் மகத்தான பிரச்சினையாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்திலே உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் காப்பாற்றித் தீர வேண்டிய பிரச்சினையும்கூட !
நன்றி : சமரசம் ( டிசம்பர் 1 – 15 , 2009 )