ஊடகத்துறையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு தேவை !
( முதுவை ஹிதாயத்
ஊடகத்துறை பொறுப்பாளர், அமீரக காயிதெமில்லத் பேரவை,
ஐக்கிய அரபு அமீரகம் )
ஊடகத்துறை – இன்றைய உலகில் சாமான்யர் முதல் கோடீஸ்வரர் வரை எவரும் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் துறை.
இத்துறையில் நம்முடைய சமுதாய மக்களில் சிலர் ஆங்காங்கே ஈடுபட்டு வந்தாலும் இத்துறையினை முழுமையான அளவில் பயன்படுத்துவோர் மிகவும் குறைவு என்றே கூறலாம்.
உதாரணமாக சமுதாயம் குறித்த தவறான செய்திகள் நாளிதழ்களில் இடம்பெற்றால் ஏதோ வந்துள்ளது எனக் கருதி அசட்டையாக இருந்து விடாமல் சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு எழுதி விளக்கம் கேட்க வேண்டும். குறிப்பாக இவ்விஷயத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் எதிர்காலத்தில் அப்பத்திரிகைகள் சமுதாயம் குறித்த தவறான செய்திகளை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
மேலும் நமது சமுதாயம் குறித்து வெகுஜன இதழ்கள் தவறான தகவல்களை வெளியிடுவதற்குக் காரணம் என்ன ? இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு இல்லாததே இத்தகைய நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதனைப் போக்க அவ்வப்பகுதிகளில் உள்ள ஜமாஅத்துகள், முஸ்லிம் லீக் இளைஞர் அமைப்புகள் பத்திரிகையாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து அவர்களுடன் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதற்குரிய வழிமுறைகளைச் செய்ய வேண்டும்.
இஸ்லாம் குறித்த அடிப்படைகளை தெரிந்து கொள்ளும் விதமாக நூல்களை வழங்கிட வேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள இளைஞர்கள் நமக்கேன் என இருந்து விடாமல் அந்தந்தப் பகுதியில் உள்ள பொதுவான பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு எடுத்துச் செல்ல பத்திரிகையினைப் பயன்படுத்த வேண்டும்.
இதன் மூலம் பொதுவான பிரச்சனைகளை பத்திரிகைகள் மூலம் தீர்த்து வைத்து பொதுமக்களுக்கு உதவலாம்.
ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் சமுதாய நிகழ்வுகள் நாளிதழ்களில் வெளிவர அந்தந்தப் பகுதி செய்தியாளர்களிடம் பத்திரிகைக் குறிப்புகளை வழங்கிட வேண்டும். நமது நிகழ்வுகள் பதிவுகளாக்கப்பட வேண்டும். ஏதோ நடந்தது இன்றில்லாமல் ஊடகத்துறையில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பினைச் செய்ய வேண்டும்.
சமுதாய அமைப்புகளின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் அதிக பொருட்செலவில் நடத்தப்பட்டு வந்தாலும் அந்நிகழ்வு குறித்த செய்திகள் நாளிதழ்களில் வெளிவருவதற்காக நம்மவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் மிகவும் குறைவே. நிகழ்ச்சி நடந்த ஓரிரு நாட்களுக்குள் அந்நிகழ்வு குறித்த பத்திரிகைக் குறிப்பினை பத்திரிகை நிருபர்களுக்கு வழங்கிட வேண்டும். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் டிஜிட்டல் யுகத்தில் உள்ள நாம் முடிந்தவரை நிகழ்ச்சி நடந்த அன்றே செய்திகளை வழங்கிடவும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
கல்லூரியில் படிக்கும் அல்லது படித்து முடித்த இளைஞர்கள் ஊடகத்துறையில் முழுநேரமாக இல்லாமல் பகுதிநேர செய்தியாளர்களாகவும் பணிபுரிந்து தங்களது திறமையினை அதிகரித்துக் கொள்ளலாம்.
இதுமட்டுமல்லாது கட்டுரைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
இன்றைய விஞ்ஞான யுகத்தில் இணையத்தளத்தின் சேவையினைப் பயன்படுத்தி தங்களுக்கென பிரத்யேக தளங்கள் ஏற்படுத்தி விழிப்புணர்வுப் பணியினை மேற்கொள்ளலாம்.
அமீரகத்தில் பணிபுரிந்து வந்த முஸ்லிம் லீக் தலைமைக் கழக பேச்சாளர் கீழை மவ்லவி ஜஹாங்கீர் அரூஸி தனது கட்டுரைகளை மின்னஞ்சல் மற்றும் இணையத்தள சேவைகள் மூலம் உலாவிட்டு பெரும் விழிப்புணர்வுப் பணியினை மேற்கொண்டு வருவதை நாம் இங்கு நினைவு கூறலாம். பல்வேறு திறமைகள் இருந்தும் தங்களது திறன்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ள ஆலிம்கள், இளைஞர்கள் சமுதாயப் பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. அதனைப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
தொழில்நுட்பம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டு சமுதாய இளைஞர்கள் தங்களுக்கிடையே அனுபவத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
மணிச்சுடர் நாளிதழும் சமுதாய இளைஞர்களுக்குப் பயிற்சியினை அளித்து வருகிறது.
பத்திரிகைத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களது பெயர், தகப்பனார் பெயர், முழு முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் ( E Mail ) , கல்வித்தகுதி, பத்திரிகைத்துறை அனுபவங்கள் உள்ளிட்ட தகவல்களுடன்
பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்
மணிச்சுடர் நாளிதழ்
காயிதெமில்லத் மன் ஜில்
எண் 36 மரைக்காயர் லெப்பை தெரு
சென்னை 600 001
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மணிச்சுடர் நாளிதழ் மூலம் பயிற்சியளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
ஊடகத்துறையின் அவசியத்தை உணர்ந்து சமுதாய விழிப்புணர்வுப் பணியில் இளைஞர்கள் தங்களை காலத்தின் அவசியம் தங்களை இணைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.