கோரிக்கைகளை நிறைவேற்றுகிற இடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருக்கிறது
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பெருமிதம்!
காயல்பட்டினம். டிச.31
கோரிக்கைகளை வைக்கிற இடத்தில் இருந்த நாம், இப்போது கோரிக்கைகளை நிறைவேற்றுகிற இடத்தில் இருக்கிறோம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.
காயல்பட்டினத்தில் நடைபெற்ற - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மத்திய இணையமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிபுக்கு ஊர் மக்கள் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் பேசியதாவது:-
நம் தாய்ச்சபையின் தலைவரை இந்த நகர வீதிகளில் அரபி மொழியில் பைத்தோடு அழைத்து வந்ததையும், சமுதாயப் பெண்கள் - குழந்தைகள் - பெரியவர்கள் என அனைவரும் வரவேற்ற காட்சியும் நம்மை மெய்ச்சிலிர்க்க வைத்தது. நம் தலைவரை காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்து வந்தார்கள். அன்று முஸ்லிம் லீக் தலைவர்களை போலீஸார் பாதுகாப்பாக சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். இன்றோ, போலீசார் பாதுகாப்போடு மக்கள் மன்றத்திற்கு அழைத்து வருகின்றனர். இவ்வளவு பெரிய மாற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு சமுதாயம் நம் தாய்ச்சபைக்குத் தந்த அங்கீகாரம்தான் காரணம்.
கேரளாவில் மகத்தான மாற்றத்தை மக்கள் தந்தார்கள். அதைப்போன்று காயிதெமில்லத் வழியைப் பின்பற்றி தமிழ்நாட்டில் நீங்களும் இந்த மகத்தான மாற்றங்கள் ஏற்படுவதற்குத் துணைபுரிய வேண்டும்.
முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த நவாப் லியாக்கத் அலி கான், அமைச்சரவையில் முஸ்லிம் லீகின் முதலாவது அமைச்சராக இடம்பெற்றிருந்தார். சுதந்திரம் பெற்ற பின், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொதுச் செயலாளராக இருந்தபோது, இ.அஹ்மத் ஸாஹிப் முஸ்லிம் லீகின் முதல் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
ஒரு காலத்தில் ராஷ்டிரபதி பவனில், ஜனாதிபதி – பிரதமரைப் பார்க்க முஸ்லிம் லீக் தலைவர்கள் சென்றார்கள். அப்போதெல்லாம் காயிதெமில்லத் அவர்களிடம், இந்த இயக்கத்தைக் கலைத்துவிடுங்கள் என்றுதான் நேரு, பட்டேல் உள்ளிட்டவர்கள் சொன்னார்கள். ஆனால், இன்று அதே அதிகார பீடத்தில் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் அமர்ந்திருக்கிறார். முஸ்லிம் லீகை தூக்கி நிறுத்துங்கள் என்றும் அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் சொல்லக்கூடிய காட்சியைப் பார்க்கிறோம்.
இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாட்டிற்குத் தேவை என்றாகிவிட்டது. நம்முடைய கலாச்சார தனித்தன்மையைக் காப்பாற்றுவதற்கு, சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளைப் பெறுவதற்கு இந்த இயக்கம் வளர்ந்து வலிமை பெற வேண்டும்.
இன்று சச்சார் மற்றும் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகள் கிடைத்து, நம் சமுதாயம் அதை அனுபவிக்கத் துவங்கியுள்ளது. ஆனால், இப்படியொரு கமிஷன் அமைப்பதற்கே 62 ஆண்டு காலம் ஆகியிருக்கிறது. சென்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம்பெற்ற காரணத்தால், 13 திட்டங்களை முன்வைத்து, அதில் குறைந்தபட்ச செயல்திட்டம் என 5 திட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் வாயிலாகக் கிடைத்தவைதான் சச்சார் கமிஷனும், மிஸ்ரா கமிஷனும். எனவே, சமுதாய முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படக்கூடிய நம்முடைய தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலப்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் துணைபுரிய வேண்டுமென உங்களை அன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார்.
காயல்பட்டினம் பெருமை குறித்து
பேராசிரியரின் உணர்ச்சிமயமான உரை!
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், காயல்பட்டினத்தின் வரலாற்றுச் சிறப்பு, கலாச்சார தனித்தன்மை, மலபாருக்கும் காயல்பட்டினத்திற்குமுள்ள தொடர்பு, அரபுலகோடு இந்நகருக்குள்ள நெருங்கிய உறவு உள்ளிட்டவற்றை விவரித்து, இந்நகரின் கோரிக்கைகள், இரயில்வே நிலையத்தில் நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்களைப் பட்டியலிட்டு, ஆங்கிலத்தில் உரையாற்றியபோது, காயல்பட்டினம் நகர மக்கள் அனைவரும் பலத்த கரகோஷம் எழுப்பி தமது உற்சாகத்தைத் தெரிவித்தனர்.
தலைவர் உரையாற்றி முடிந்ததும் நகரப் பிரமுகர்கள் பேராசிரியரை சந்தித்து, அவரது இந்தப் பேச்சுக்காக தங்களது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.