அன்புத் தம்பிக்கு,
இறைவனின் சாந்தி அனைவரின்மீது இலங்கட்டுமாக!
நம் சமூகத்தின் மாண்புகளை நம் முஸ்லிம் லீக் பேரியக்கத்தின் தலைவர்கள் மாறா பொலிவுடன் மானுட உலகிற்கு வழங்கிச் சென்றார்கள் என்பது மட்டுமல்ல@ வாழ்ந்தும் காட்டினார்கள் என்பதுதான் சரித்திரம்.
இது ஏப்ரல் மாதம். நினைவில் நிழலாடும் சிந்தனைகளை இம்மாதம் வெளிக் கொண்டு வருவதை உன்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இம்மாதத்தில்தான் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத், சிந்தனைச் செம்மல் சிராஜுல் மில்லத், நாடறிந்த நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் ஆகியோர் கண் மூடிய நாட்கள் உள்ளன. இவர்கள் வாழ்ந்து காட்டிய வல்லமை நிறைந்த உறுதிப்பாடு, எந்த சந்தர்ப்பத்திலும் நிலை குலையாத கம்பீரம், விரும்பி ஏற்றுக் கொண்ட ஏழ்மை, வீரதீரமிக்க போர்க்குணம், சமூகத்திற்கு வழங்கிய சீரான எழுச்சி உரைகள் இவைகளெல்லாம் எல்லா தலைமுறையினருக்கும் கிடைக்கப் பெற்ற பொக்கிஷங்கள். நமது உள்ளங்களில் உரமேற்றி, எண்ணங்களில் எழுச்சிய+ட்டி எழுதிய எழுத்துக்களும், பேசிய பேச்சுக்களும், காலமெல்லாம் பின்பற்றத்தக்க நேரிய வழிமுறைகள்.
மேன்மையான கருத்துக்களை மாண்போடு தருவதி லும் வன்முறையற்ற நிலைகளை நன்முறையோடு நிலை நிறுத்துவதிலும் நம் தாய்ச் சபைத் தலைவர்கள் நமக்குச் சிறந்த முன்னோடிகளாய்த் திகழ்கிறார்கள்.
இறை அச்சம் குறையாமல் மறைவழி வாழ்ந்து மாற்றாருக்கும் மாண்பாளராய்த் திகழ்ந்தவர் கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள்.
சந்தனத் தமிழ் கொண்டு சிந்தனைச் சிறகுகள் விரித்து சமூக நல்லிணக்கத் தூதராய்த் திகழ்ந்தவர் சிராஜூல் மில்லத் அப்துல் ஸமத் சாகிப் அவர்கள்.
எவருக்கும் அஞ்சாத துணிவு கொண்டவராய், உள்ளத்தில் எழும் எண்ண அலைகளை அப்படியே வெளிக் கொணரும் ஆற்றல் மிக்கவராய்த் திகழ்ந்தவர், நாடறிந்த நாவலர் ய+சுப் சாஹிப் அவர்கள்.
இவர்களெல்லாம் நம் தாய்ச்சபை முஸ்லிம் லீக் வரலாற்று நாயகர்கள். இந்த சமுதாயத்திற்காகத் தங்களை உருக்கிக் கொண்டு வாழ்ந்தவர்கள். மற்றவர்களை நல்வழியில் உருவாக்கிப் பார்க்க அரும்பாடுபட்டவர்கள்.
வல்ல இறைவனின் அருட்பாக்கியங்களைப் பெற்று வாழும் நம்மில் ஒவ்வொருவரும் தாம், மனைவி, மக்கள், குடும்பம் என்ற குறுகிய சொந்த வளையத்திலிருந்து சற்று அகன்று, சமுதாயம் என்கிற உணர்வோடு வாழ்வது இன்றியமையாதது என்பதனை நினைவ+ட்டுகிற வாழ்வு முறையை நம்முடைய மறைந்த தலைவர்களின் வரலாற்றிலிருந்து பாடமாகப் பெறுவோம். ஏற்கெனவே இவ்வழி நின்று வாழ்ந்து வரும் நம்மவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைப் பேணி, சுயநல வாழ்வுக்குக் கொஞ்சமும் இடம் தராமல், மனித நேயத்தை வளர்த்து, மதநல்லிணக்கத்தைக் காத்து, சமூக வாழ்க்கையே தங்களின் ஒரே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த தலைவர்கள் நம் தாய்ச் சபைத் தலைவர்கள். அவர்களின் வழியொட்டிய தொண்டர்களாக, நேரிய பாதை வகுத்து, சீரிய தலைமையில் நமது தாய்ச்சபை முஸ்லிம் லீகில் தொடர்ந்து தொண்டாற்றுவோம்!
சமூக எழுச்சியை வெளிக் கொணர்வோம்!
ஒன்றுபட்டு உறுதியோடு உழைப்போம்!
அன்புடன்,
எம். அப்துல் ரஹ்மான் ஏம்.ஏ. எம்.பி.
ஆசிரியர்
பிறைமேடை மாதமிருமுறை இதழ்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
( பிறைமேடை ஏப்ரல் 16 30 இதழிலிருந்து )