Thursday, April 22, 2010

உன் கரங்களில் தவழ்ந்தது!

உன் கரங்களில் தவழ்ந்தது!


அன்புத் தம்பிக்கு,

இறைவனின் சாந்தி நம் அனைவரின்மீதும் இலங்கட்டுமாக!

தாய்ச்சபை முஸ்லிம் லீகின் அகவை அறுபத்தி இரண்டு.

மார்ச்சுத் திங்கள் பத்தாம் நாள், நெல்லைச் சீமையின் மேலப்பாளையம் நகரம் ஒருங்கிணைந்து ஒலித்த தக்பீர் முழக்கத்தால் புண்ணியமும் கண்ணியமும் நிறைந்து காட்சி தந்தது.

மாலை நேரத்து மகிழும் பொழுதில் பிறைக் கொடி பிடித்து மறைவேதம் நிறைவாய் தொடங்க, இறைநாதம் இதமாய் இலங்க, பேரணி புறப்பட்டபோது, உன்னோடு நானும் பயணித்தேன். எங்கு நோக்கினும் பச்சிளம் பிறைக் கொடி. பச்சை வண்ணம் மட்டுமே நகரில் காட்சி தந்தது. தக்பீர் முழக்கம் மாத்திரமே நமக்காக சாட்சி சொன்னது. எழுப்பிய கோஷங்கள் எவ்வளவு மாண்புடையது? யார் மனதும் புண்படாமல், மாற்றாரையும் பண்பட வைத்த வார்த்தைப் பிரயோகம். பார்த்தவரெல்லாம் பாராட்டும் விதத்தில் நீ காட்டிய கண்ணியமும் ஊட்டிய உணர்வும் அமைந்திருந்ததை மறக்க முடியாது. ~ஊர்வலம்| என்றால் இஃதல்லவா ஊர்வலம்!| என்று கண்டுகளித்தார்க்கு மேலே எழுந்த புருவங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர இரண்டு மணி நேரம் ஆனது. ஆம்! அவ்வளவு நேரம் எடுத்தது பிறைக்கொடி ஊர்வலம் மாநாட்டுப் பந்தலை அடைவதற்கு.

மஃரிப் நேரம் மாநாட்டு அரங்கை நீ அடைந்ததும் தொழுதுவிட்டு அமர்ந்தாய் அகமகிழ்வுடன்.

மாநாட்டுத் துவக்கவுரையில் நமது தலைவர் பேராசிரியர் அவர்கள் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் வரலாற்றுப் பெருமைகளை அடுக்கடுக்காய்த் தந்து, அதன் தோற்றத்தின் தொடக்கத்தை விவரித்தார். பலரின் கருத்துரைகளுக்குப் பின் மத்திய அமைச்சர் மாண்புமிகு மு.க. அழகிரி அவர்கள் அழகாய், அற்புத உரையாற்றி அமர்ந்தார். ~~இவ்விழா தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும்|| எனச் சொன்னார். மாநில அமைச்சர் மாண்புமிகு மைதீன்கான் அவர்களும் அப்படித்தான். சமுதாயச் சீராளர்களுக்கு விருதுகள் தரப்பட்டு, நிறைவாக தலைவர் பேராசிரியர் விழாவில் பேருரையாற்ற மாநாடு மகிழ்வோடு நடந்தேறியது. முழு பொறுப்புகளையும் செவ்வனே செயல்படுத்திய மாநாட்டுக் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.

பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றோர் ஒழுக்க மாண்போடு கூடியிருந்த அந்த காட்சியை அரசியல் உலகில் வேறு எங்கு காண முடியும்? அதே நாளில் தொலைக்காட்சி செய்திகளும், மறுநாளில் செய்தித்தாள் தகவல்களும் தெளிவாக உணர்த்தின. இவையெல்லாம் நம் சீர்மிகு தலைவர்கள் காட்டித் தந்த வழிமுறைகளாலும் நீ நடைமுறைப்படுத்திய செயல்முறைகளாலும் கிடைக்கப் பெற்றவை.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில்தான் நம்முடைய ~பிறைமேடை| இதழ் வெளியிடப்பட்டது. முதல் இதழ் உன் கரங்களில் தவழ்ந்தபோது நீ மகிழ்ச்சிப் பெருக்கோடு படிக்கத் தொடங்கியதையும் பார்த்து நெகிழ்ந்து போனேன். தாய்ச்சபை முஸ்லிம் லீகின் செய்திகள் சமுதாயத்தின் எல்லா தரப்பு மக்களையும் சென்றடையும் வகையிலும், எல்லா இடங்களுக்கும் கிடைக்கச் செய்யும் வகையிலும், ஒரு வாரம் அல்லது இரு வாரம் என்கிற அளவில் கால அவகாசம் போதுமானதாகக் கொண்டது என்ற வகையிலும் இதுபோன்ற ஓர் இதழ் நமக்கு எப்போது கிடைக்கப் பெறும் என்று நீ கொண்டிருந்த எதிர்பார்ப்பிற்குக் கிடைத்த தீர்வு அல்லவா இது? உன் மகிழ்வுக்கு அர்த்தம் உண்டுதான்.

அதே நேரத்தில் ~பிறை மேடை| இதழை பரவலாக்க வேண்டிய கடமையும் உனக்கு இருப்பதை மறந்துவிடக்கூடாது. சென்ற இதழில் நான் குறிப்பிட்டதைப்போல மஸ்ஜிதுகள், மதரஸாக்கள், கல்விக் கூடங்கள், கடைவீதிகள் என்பதோடு வீடுகள் தோறும் இந்த இதழ் போய்ச் சேர வேண்டும் என்பதில் நீ கவனமும் ஆர்வமும் செலுத்தி ஆவன செய்ய வேண்டிய பொறுப்பு உனக்கிருக்கிறது. உன்னுடைய முயற்சியில்தான் ~பிறை மேடை| இன்னும் அதிகப் பக்கங்களைக் கொண்டதாகவும், மிக விரைவில் வார இதழாகவும் ஏற்றம் பெற வேண்டும்.

¤ ~பிறை மேடை| நமது முஸ்லிம் லீக் பதிப்பக வெளியீடு.

¤ பதிப்பகம் நமது பேரியக்கத்தின் வெளிப்பாடு.

¤ பேரியக்கம் நமது சமூக வாழ்க்கையின் கோட்பாடு.

¤ சமூக வாழ்க்கையே நமது குறிக்கோளின் நேர்கோடு.

துணிவுடன் பணிகள் செய். கனிவுடன் கடமையாற்று.

தொடர்ந்து உன்னோடு பயணிக்கிறேன்.

இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,

எம். அப்துல் ரஹ்மான்