இஸ்லாமியத் தலைவர்கள் -மார்க்க அறிஞர்களின் தமிழ் வளர்ச்சிப் பணிகள்
மெளலானா தளபதி. A.ஷஃபீகுர் ரஹ்மான், மன்பஈ.
(மாநில செயலாளர். தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,சென்னை)
சென்னையில் 13.12.2009 அன்று நடைப்பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 2 ஆம் ஆண்டு மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கோவை : பக்கம் -173
சந்தனத் தமிழில் திருக்குர் ஆனின் விரிவுரை, வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் அறிவார்ந்த வாழ்வியல் முறைகளைப் பற்றி நமது தலைவர்களும் உலமாக்களும் நமக்கு இனிமையாகக் கூரியது மட்டுமல்லாமல் அரபுலகத் தலைவர்களையும் தமிழ் பேச வைத்த சிறப்பு நமது தலைவர்களுக்கு உண்டு .இந்தச் செய்திகளைத் தொகுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும் .
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்
தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், அரசியல் நிர்ணயச் சபை உறுப்பினராகவும்,
பணியாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் னி.இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய சேவைகள் பற்றி சுட்டிக் காட்டுவதில் மகிழ்கிறேன்.
மொழி வளமும், வரலாறும் படைத்த என் தாய்மொழியான தமிழ்மொழியை இந்திய நாட்டின்
ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்று நம் நாட்டின் அரசியல் நிர்ணயச் சபையில் எடுத்துரைத்த
காயிதே மில்லத் அவர்கள் உலக மன்றத்திலும், மக்கள் இடத்திலும், தமிழ்மொழியின் இனிமையைப்
பற்றி அருமையாக சொல்லிக் காட்டியுள்ளார்கள். மொரோக்கோவின் தலைநகர் ராபத்தில் நடைப்பெற அனைத்துலக முஸ்லிம் கல்வி மாநாட்டில் நமது இந்திய அரசின் பிரதிநிதியாக முஸ்லிம் கல்வியாளர்களின்
பிரதிநிதியாக சிராஜுல்மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் பங்கேற்றிட சென்றிருந்தார். அப்துஸ்
ஸமத் சாஹிப் அவர்களிடத்தில் காயிதே மில்லத் அவர்கள் ஸிம்து சுப்பான், ஃபத்ஹுர்ரப்பானி, தப்ஸீருல்
குர்ஆன், மிஸ்காத்துல் மஸாபீஹ் ஆகிய அரபுத் தமிழ் கிதாப்களை (புத்தகங்களை) அப்துஸ் ஸமத் சாஹிப்
அவர்களிடம் கொடுத்து மொரோக்கோ கல்வி மாநாட்டின் அரங்கில் பார்வையாளர் பகுதியில் வைக்கச்
செய்யுங்கள் என்று கொடுத்தனுப்பினார்கள். இதை இன்முகத்துடன் பெற்றுக் கொண்ட அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் மாநாட்டின் பார்வையாளர்கள் பகுதியில் இடம்பெறச்செய்தார்கள். மாநாட்டிற்கு வருகைத் தந்திருந்த
அரபுலக தலைவர்கள் அரபுத் தமிழ் கிதாப்களை வாசித்தப்போது அரபுலக தலைவர்களின் நாவிலிருந்து
உதட்டிலிருந்து இனிய
தமிழின் இன்பத் தமிழ்வார்த்தைகள் வெளியானதைப் பற்றி அரபுலக தலைவர்கள் தமிழ் பேசியதுப் பற்றி மணிவிளக்கு மாதஇதழில் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் எழுதி எல்லோரையும் மகிழ்வடையச் செய்தார்.
அன்றைய காலகட்டத்தில் சென்னை புதுக் கல்லூரி தலைவராகவும், சென்னை மாவட்ட இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் தலைவராகவும், அப்துஸ் ஸமத் சாஹிப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரபுலக தலைவர்களை தமிழ் பேச வைத்த படிக்க வைத்த காயிதே மில்லத் அவர்களின் சேவை மகத்தானதாகும்
என்பதை எண்ணி மகிழ்வடைகிறோம். மொரோக்கோ முஸ்லிம் கல்வியாளர்கள் மாநாட்டில் இடம்பெறுவதற்காக காயிதே மில்லத் அவர்கள் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களிடம் அரபுத் தமிழ் கிதாப்களை கொடுத்த போது
அடியேனும் இருந்தேன் என்பதை சுட்டிக் காட்டுவதில் மகிழ்கிறேன்.
அல்லாமா அமானி ஹஜ்ரத்
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வராகவும் தமிழ்நாடு மாநில்
ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவராகவும், நீண்ட காலங்கள் பணியாற்றிய அறிவுலக மேதை அல்லாமா ஜியாவுத்தின் அஹமத் அமானி ஹஜ்ரத் தமிழ், அரபு, ஃபார்ஸி, உருது, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும்
நல்லப் பாண்டித்துவம் பெற்றவராக திகழ்ந்தார். குல்ஜாரே ஃபாத்திமா என்ற பெயரில் அரபுத் தமிழிலும் ஃபாத்திமா நாயகியின் ஜீவசரித்திரம் என்ற பெயரில் இனிய தமிழிலும் இருநூல்கள் எழுதி வெளியிட்டுயிருக்கிறார்கள். இந்த இருநூல்களும் சமுதாய மக்களிடத்தில் நல்ல
வரவேற்பை பெற்றிருந்தது. உருதுவிலும், ஃபார்ஸியிலும் நூல்கள் எழுதியுள்ள இவர் ஃபார்ஸி மொழியில் எழுச்சியூட்டும் கவிதைகளும் உள்ளார். குல்னே சீரத் என்ற பெயரில் உருதுவில் நபிகள் பெருமானார் (ஸல்..)
அவர்களைப் பற்றி கவிதையாகப் பாடியுள்ளார். காலம் காட்டு இடைநிலை என்ற பெயரில் 1956ஆம் ஆண்டில் இவர் எழுதிய தமிழின் சிறப்பு பற்றிய நூல் தமிழறிஞர்களின் பாராட்டுதலையும், வாழ்த்தையும் பெற்றது. 1958ஆம் ஆண்டிலிருந்து 1966ஆம் ஆண்டு வரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்
தமிழ்துறையின் தலைவர்களும், பேராசிரியர்களும் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்
கல்லூரிக்கு வந்திருந்து அமானி ஹஜ்ரத் அவர்களை சந்தித்து தமிழ்மொழியின் மீது அவர் கொண்டுள்ள பற்று, பாசம் வரலாற்று செய்திகளையும் தமிழ்மொழிப் பற்றிய ஆய்வுகளையும் கண்டு ஹஜ்ரத் அவர்களின்
திறமையை பெரிதும் பாராட்டிச் சென்றுள்ளார்கள். மதராசாவில் எங்களுக்கு பாடங்கள் நடத்திய காலங்களிலும் அரபி, உருது, ஃபார்ஸி நூல்களிலுருந்து தமிழில் மொழிபெயர்த்து சொல்லி தமிழின் இனிமைகளைப் பற்றி
எங்களுக்கு போதிப்பார்கள்.
மெளலானா அப்துர் ரஹ்மான் நக்ஸபந்தீ
லால்பேட்டை மெளலானா அப்துர் ரஹ்மான் நக்ஸபந்தீ இவர் 1895 ஆம் ஆண்டிலிருந்து 1917ஆம்
ஆண்டு வரை புனித மிகு மக்காவிலுள்ள மத்ரஸா ஃபக்ரிய்யா உஸ்மானிய்யாவில் பேராசிரியாராகப்
பணியாற்றியுள்ளார்கள். அன்றைய காலக்கட்டத்தில் புனித ஹஜ்ஜுக்கா தமிழகத்திலிருந்தும் இலங்கை, பர்மா ஆகிய பகுதிகளிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகளுக்கு மத்தியில் புனித ஹரம் ரீபில் வைத்து தமிழில் ஹஜ், உம்ரா, மதீனா ஜியாரத், திருக்குர் ஆனின் சிறப்பு அதன் விளக்கம் பற்றியும் நபிகள் பெருமானார்
அவர்களின் அழகிய வாழ்வியல் பற்றியும் தமிழில் உரையாற்றியுள்ளார்கள். இவர்களின் எழுச்சி மிகு இனிய
தமிழ் உரையின் நடையினை அரபுகளும் கேட்டு மகிழ்ந்துள்ளார்கள். அரபுகளையும் தமிழ் பேச
வைத்துள்ளார்கள் என்ற இனியத் தகவலை தெரிவிப்பதில் மகிழ்கிறேன். இவர்கள் என் பாட்டனார் என்பதையும் தெரிவிப்பதில் பூரிப்படைகிறேன்.
இஸ்லாமியத் தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள பங்களிப்புகள் ஏராளம் இக்கட்டுரை அது குறித்த சில விசயங்களை கோடிட்டுக் கட்டுகிறது .இதுபோன்று இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது இஸ்லாத்திற்கும், இன்பத்தமிழ் மொழிக்கும் இடையிலான உறவை முன்னெடுத்து செல்வதாக அமையும்.