தேசப்பற்றுக்கு எடுத்துக்காட்டு தலைவர் காயிதெ மில்லத்! லிபரான் அறிக்கை விவாதத்தில் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. எழுச்சி உரை!
லிபரான் அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கெடுத்து எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் 07-12-2009 அன்று மக்களவையில் ஆற்றிய எழுச்சி மிகு உரை!
அவைத் தலைவர் அவர்களே!
பாபர் மஸ்ஜித் தகர்ப்பு குறித்து விசாரணைக் கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கை மீதான விவாதத்தில் பங்கெடுக்க எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1992 டிசம்பர் 6ம் தேதி பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டது மிகவும் கொடிய
செயலாகும். இக்குற்றச் செயலைக் செய்தவர்கள் ஒரு வழிபாட்டுத் தலத்தை மட்டும் தகர்க்கவில்லை, மாறாக அரசியல் சாசனத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி என்ற கொள்கைகளையும் சேர்த்தே தகர்த்துள்ளனர். இந்த அவமானகரமான சம்பவத்தை ஏற்றுக் கொள்ளாமல் வேதனையுடன் புறந்தள்ளிய பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்வுகளுக்கு இக்கொடிய குற்றவாளி கூட்டத்தினர் பங்கம் இழைத்துள்ளனர்.
மஸ்ஜித் தகர்ப்பு சங் பரிவாரங்களும் அதன் துணை அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி, பஜ்ரங் தன், பி.ஜே.பி, ஆகியவற்றால் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்ட சதிச் செயல்தான் என்பதை விபரான் கமிஷன் அறிக்கை வெளிக் கொணர்ந்துள்ளது. அது தானாகவோ, திடீரெனவோ நடந்தது அல்ல. மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்ட ஒன்று,. இந்த அறிக்கை 68 நபர்களின் தனிப்பட்ட குற்றச் செயல்களை வரையறுத்துள்ளது. இந்த அறிக்கை குற்றம் சுமத்தியுள்ள 68 நபர்களின் மீது என்ன வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்திய வரலாற்றிலே இது மிகவும் அவமானகரமான ஒரு செயலாகும்.
1995ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலே சொல்லப்பட்ட ஒன்றை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தேசிய ஜனநாயக முன்னனி ஆட்சியிலிருந்த போது அப்போதைய மத்திய உள்துறை அமைச்சரும் இன்றைய எதிர்க்கட்சி தலைவருமான நபரை குறிப்பிட்டு பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பிற்க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட தீர்ப்பாகும். அதிலே தெளிவாக குறிப்பிட்டுள்ளதாவது,
"" இந்த செயல் ஒரு தேச அவமானம். தகர்க்கப்பட்டது ஒரு புரதான கட்டிடம் மட்டுமல்ல நீதியின் மீதும், பெரும்பான்மையினரின் நியாயமான நடவடிக்கைகள் மீதும் சிறுபான்மையினர் கொண்டிருந்த நம்பிக்கையும் தான். சட்டத்தின் ஆட்சி மீதும், அரசியல் சாசன நடைமுறைகளின் மீதும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அது குலைத்துவிட்டது||. இதுதான் உச்சநீதிமன்றம் கூறிய வார்த்தைகள்.
பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நேரத்திலே உத்திர பிரதேச மாநிலம் பி.ஜே.பி. யால் ஆளப்பட்டு வந்தது. அதன் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ன் முழு உதவியுடன் தான் தகர்ப்பு நிகழ்த்தப்பட்டது. அது தனியாக ஒரு இணை அரசை நடத்தியது என்பது லிபரான் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகர்ப்பு செயலுக்கு மிக முக்கியமான சக்தியாக அது பயன்படுத்தப்பட்டது. பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு குறித்தும், சிறுபான்மையினர், அப்பாவிகள் மீதான தாக்குதல்கள் குறித்தும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் கூட, அப்பாவி மக்களை பாதுகாக்க காவல்துறைக்கு எந்த வித ஆணையையும் அவர் வழங்கவில்லை. இதன் பயனாக அனைத்து காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும், ஒட்டு மொத்த அரசு எந்திரமும் பாதுகாவலர்களாக இல்லாமல் சீருடை தரித்த " கரசேவகர்களாக|| பணியாற்றினர்.
ரகசிய கேமராக்களும், வெடி பொருள் கண்டுபிடிக்கும் கருவிகளும் அரசு நிர்வாகத்தால் செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்த நிகழ்வுகள் வீடியோ காமிராவில் பதிவு செய்யப்பட வில்லை.
அரசு முறைப்படி செய்யும் வீடியோ பதிவுகள் நிறுத்தப்பட்டன. ஊடகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. லிபரான் அறிக்கையின்படி ஊடக வியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு மிகச் சிறிய இடத்திலே அடைத்து வைக்கப்பட்டனர்.
மானபங்கப்படுத்தப்பட்டனர். இது மிகவும் அவமானகரமான செயலாகும். இந்த நாட்டிற்க்கும் அதன் வரலாற்றுக்கும் துரோகமிழைக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு நபர் இந்த நாட்டின் மிக உயரிய ஜனநாயக நிறுவனமான இந்த அவையின் உறுப்பினராக உள்ளார் ............ ( அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.)
இந்த செயலின் தளகர்த்தாவாக இருந்தவர் திரு. எல்.கே.அத்வானி. 1990ல் அவர் சோம்நாத்திலிருந்து அயோத்தியாவிற்கு நடத்திய ரத யாத்திரை நாடு முழுவதும் 3000 கலவரங்களை தோற்றுவித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்னனர். "" டைம்ஸ் ஆப் இந்தியா|| தன் தலையங்கத்திலே இது ரதயாத்திரை அல்ல "" ரத்த யாத்திரை|| எனக் குறிப்பிட்டது. அப்படிப்பட்ட ஒரு அவமானகரமான நிகழ்ச்சி இந்த நாட்டிலே நடந்தது. பி.ஜே.பின் ஆதரவுடன் ஆட்சியிலிருந்தாலும் அன்றைய பிரதமர் திரு. வி.பி.சிங் அவர்கள் தன் அரசை காப்பாற்றிக் கொள்வதற்காக ரத யாத்திரையை ஆதரித்து விடவில்லை என்பதை நான் நினைவு கூர்கிறேன். அப்படிப்பட்ட ஒரு கிரிமினல் செயலை அவர் ஆதரிக்காததால் அவர் தன் அரசாட்சியை இழக்க வேண்டியிருந்தது. அதை எதிர் கொள்ள அவர் சிறிதும் தயங்கவில்லை. வி.பி.சிங் அவர்களின் வீரத்தை இந்த நேரத்திலே நான் மெச்சுகிறேன்.
லிபரான் கமிஷன் முன்பும், மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எல்.கே. அத்வானி அவர்கள் முரன்படும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். ஒரு சமயம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு தன் வாழ்நாளிலே மிகுந்த துயரமளித்த சம்பவம் என்றார். மற்றொரு சமயம் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு தன்னுடைய கட்சியின் ஓட்டு வங்கியை பெரிதாக்கியுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். மற்றொரு சமயம் நாமர் கோவில் இயக்கம் இந்துக்களின் பெருமையை பறை சாற்றுகிறது என்றார். இந்து மத உணர்வுகளில் நஞ்சு கலக்கும் அவர் செயலை இந்து சமுதாயம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அவர் உணர வேண்டும்.
இந்த நாட்டின் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை குலைப்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ் வி.எச்.பி, பி.ஜே.பி மற்றும் அதன் சார்பு அமைப்புகளின் வங்கிக் கணக்குகளில் மிகச் பெரும் தொகையில் பண பரிவர்த்தனை நடக்கிறது. பல்வேறு சமயங்களில் அவர்களின் கணக்குகளில் பல கோடி ரூபாய்கள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த பணம் எங்கிருந்து வந்தது? இப்படிப்பட்ட ஒரு கொடுங் குற்றச் செயலை நிறைவேற்ற வேண்டி கோடி கோடியாய் பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெருந்தொகை எப்படி பரிமாற்றம் செய்யப்பட்டது? யார் இதை உபயோகப்படுத்தியது? எப்படி உபயோகப்படுத்தப்பட்டது? இந்த எல்லா உண்மைகளும் இந்த தேசத்துக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு குறித்த அனைத்து வழக்குகளும் ஒருமுகப்படுத்தப்பட்டு ஒரே நீதிமன்றத்தில் விரைவாக முடிக்கப்பட வேண்டும்.
இந்த நேரத்திலே நான் என் உரையை முடிக்கு முன்னர் தேசத் தலைவர் ஒருவர் சமூக நல்லிணகத்தை எப்படி மதித்தார், எப்படி நடந்து கொண்டார் தேசப்பற்றை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை நினைவு கூர விரும்புகிறேன்.
சுதந்திரத்தின் போது நாடு பிரிவினைக்கு உட்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் உருவான பின்னர் பாகிஸ்தான் முஸ்லிம் லீகின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா இந்தியாவில் உள்ள சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை காப்பாற்ற குரலெழுப்பினார். அந்த நேரத்தில் முஸ்லிம் லீக் தலைவர் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் முஹம்மது அலி ஜின்னா விடம் "நீங்கள் வெளிநாட்டவர் . நீங்கள் இந்தியாவின் மைந்தன் அல்ல. இந்திய குடிமகனும் அல்ல. நாங்கள் இந்திய குடிமக்கள் . நாங்கள் இந்திய நாட்டின் மைந்தர்கள். சிறுபான்மையினர் விவகாரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்.
சிறுபான்மையினர் பிரச்சினைகளை எப்படி அனுகுவது என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் அயல் நாட்டிலே இருக்கிறீர்கள் நீங்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகத்தை குறித்து பேச வேண்டாம். அப்படி சிறுபான்மையினர் குறித்து பேச வேண்டியது நியாயமே என கருதினால் உங்கள் நாட்டில் வாழும் இந்துக்கள், கிருஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினர் பற்றி யோசியுங்கள். நீங்கள் உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் பிரச்னைகளை குறித்து கவலைப்படுங்கள். இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் அல்லது முஸ்லிம் சமூகம் குறித்து ஏதும் பேச வேண்டாம். எங்கள் தாய்நாட்டிலே ஏற்படும் எந்த பிரச்னையையும் எதிர்நோக்கும் துணிவு எங்களுக்கு உள்ளது|| என்றார். இதுதான் தேசப்பற்று - இதுதான் தேசியம் - இதுதான் சமூக நல்லிணக்கம் - இதுதான் இந்த நாட்டின் தலைவர்கள் காட்டிய சமூக ஒற்றுமை. இங்கே உள்ள அமைப்புகளின் தலைவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட நடத்தையை பார்த்து பாடம் கற்றக்கொள்ள வேண்டும்.
நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் ஒரு மதத்தாரின் வழிபாட்டுத் தலத்தை உருவாக்குவதற்காக மற்றொரு சாராரின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்படுவதில்லை. நம் இந்திய மக்களிடம் இத்தகைய கலாச்சாரம் இல்லை. இந்தியா சமயச் சார்பற்ற நாடு - எந்த மதமும் இன்னொரு மதத்திற்கு எதிரானது அல்ல - ஒரு மதத்தின் நெறிகளுக்கு எதிராக இன்னொரு மதம் நெறியற்ற முறையை தருவதில்லை. எல்லா மதங்களுமே அறநெறிகளையே போதிக்கின்றன. நாம் மதங்களின் பெயரால் வேறுபடலாம். ஆனால் அறநெறிகளின்படி நாம் எல்லோரும் சகோதர, சகோதரிகள் .
நான் ஒரே ஒரு கருத்தை உங்களின் பரிசீலனைக்கு வைத்து முடிக்க விரும்புகிறேன். பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள சில நபர்களின் கோபத்தின் வெளிப்பாடாக சில கோவில்கள் அங்கே சிதைக்கப்பட்டன.................... ( குறுக்கீடுகள்) ....... உடனடியாக அவற்றை சரி செய்து விடுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.................... ( குறுக்கீடுகள்) ....... இந்தியா மதச்சார்பற்ற நாடு ஆனால் பாகிஸ்தான் அப்படி அல்ல என்பதை நாம் நன்றாக அறிவோம். இருந்தபோதும் பாகிஸ்தான் அரசு சிதைக்கப்பட்ட கோவில்களை உடனடியாக புணரமைக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டது................... ( குறுக்கீடுகள்) ....... கோவில்களை புணரமைத்தது மட்டும் அல்ல, அவற்றை மீண்டும் இந்து சமூகத்தினரிடம் ஒப்படைக்கும் போது நம்முடைய எதிர்க்கட்சி தலைவர் திரு அத்வானி அவர்களும் சென்றிருந்தார். ................... ( குறுக்கீடுகள்) ....... புணரமைக்கப்பட்ட கோவில்களின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். நம்முடைய நாடு சமய சார்பற்ற நாடாக இருப்பதால் அதே போல தகர்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித்தும் அதே இடத்திலே மக்களால் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என இந்த மேலான அவையிலே வேண்டுகோள் வைக்கிறேன். அதற்கு அத்வானி அவர்கள் தலைமை ஏற்றால் அவர் பின்னால் அணிவகுத்து நிற்க நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம். இந்திய வரலாற்றிலே இப்படிப்பட்ட சமயச் சார்பின்மை - இப்படிப்பட்ட சமூக நல்லிணக்கம் - இப்படிப்பட்ட சமூக ஒற்றுமை நிறுவப்பட வேண்டும். இது அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு புதிய சகாப்தமாக இருக்கும். உலக நாடுகளின் முன்னால் நம் ஒவ்வொரு இந்தியனுக்கும் இது மிகவும் பெருமை தருவதாக இருக்கும்.
இந்த சந்தர்ப்பத்திலே நான் மக்கள் அனைவரையும் வேண்டுகிறேன். மதத்தின் பெயரால் மத வழிபாட்டு முறையின் பெயரால் மக்களிள் சகோதரத்துவத்தை மாறுபடுத்தாதீர்கள்.................... ( குறுக்கீடுகள்) ....... எல்லா மதங்களும் அறநெறிகளையே போதிக்கின்றன. எல்லா மதங்களும் மக்களை சகோதர சகோதரிகளாக வாழவே பயிற்று விக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு தத்துவத்தை கொள்கையை மாநில பேதமின்றி - கட்சிபேதமின்றி நம் உறுப்பினர்கள் அனைவரும் கைக்கொள்ள வேண்டும்.
இந்த விவாதத்தில் என்னுடைய கருத்துக்களை எடுத்து வைக்க வாய்ப்பு அளித்தமைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
- தமிழில் வெ. ஜீவகிரிதரன்