இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா மரணம்
புதன்கிழமை, ஜூன் 25, 2008
மும்பை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் குலாம் முகம்மது பனாத்லாவா இன்று மாலை மரணமடைந்தார்.
பனாத்வாலா 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம். பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் காயிதெமில்லத்தைச் சந்தித்து முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
இக்காலகட்டத்தில் மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம், பசுவதை சட்டம், வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி அவற்றில் வெற்றியும் பெற்றார்.
பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.
சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர் தங்கப்பதக்க விருது பனாத்வாலாவுக்கு வழங்கபப்ட்டது. முதல்வர் கருணாநிதி இந்த விருதினை வழங்கினார்.
இப்றாஹீம் சுலைமான் சேட் மறைவுக்குப் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக பணியாற்றி வந்தார்.
முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக வரை பணியாற்றி வந்தார். அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிலும் பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே பனாத்வாலாவின் கடைசி நிகழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.oneindia.in/news/2008/06/25/india-iuml-leader-banathwala-passes-away.html