Thursday, June 26, 2008

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பனாத்வாலா மறைவு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பனாத்வாலா மறைவு






சென்னை, ஜூன் 25: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் குலாம் முகமது பனாத்வாலா (75), மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.

இவர் 1933-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி மும்பையில் பிறந்தார். வணிகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். காயிதே மில்லத்தால் ஈர்க்கப்பட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் சேர்ந்தார்.

மும்பை உமர்காடி தொகுதியிலிருந்து 1967-ம் ஆண்டு சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1971 முதல் 91 வரையும், 1996 முதல் 2004 வரையும் கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யட்டார்.

இப்ராஹிம் சுலைமான் சேட்டுக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். "மார்க்கமும் அரசியலும்', "சுதந்திரத்துக்குப் பின் முஸ்லிம் லீக்' ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

"ஷரீ - அத்' சட்டத்துக்கு எதிராக வழக்கு நடைபெற்றபோது, தனி நபர் மசோதா மூலம் நாடாளுமன்றத்தில் அவர் எடுத்து வைத்த வாதம் மூலம் "ஷரீ-அத்' சட்டத்தில் முஸ்லிம் மகளிர் உரிமையைப் பாதுகாத்தவர் என்ற பெருமைக்குரியவர்.

சென்னை முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சிறந்த சமூக சேவகர் விருதும், பன்னாட்டு நண்பர்கள் சங்கம் சார்பில் விஜய் ஸ்ரீ விருது, குட்ச் சக்தீ சார்பில் சமாஜ் ரத்னா விருது, சிறந்த நாடாளுமன்ற வாதிக்கான மெüலானா பஜ்ருல் ஹக்கைராபாதி விருதுகளைப் பெற்றவர்.

இவரது மனைவி ஆயிஷா பேகம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

கடந்த சனிக்கிழமை (ஜூன் 21) சென்னைத் தீவுத் திடலில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாட்டில் பங்கேற்றதே பனாத்வாலாவின் கடைசி பொது நிகழ்ச்சி.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080625132827&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=