33% இட ஒதுக்கீடு: பெண்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் - கனிமொழி
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மகளிர் அணி மாநாட்டில், ஒரு பெண்ணுக்கு விருது வழங்குகின்றனர் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், கவிஞர் கனிமொழி எம்பி,. உடன் (இடமிருந்து) இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநில அமைப்பாளர் பாத்திமா முஷாபர், சமூக நலத்துறை ஆணையத்தின் தலைவர் கவிஞர் சல்மா, காயத்திரி தேவி எம்எல்ஏ.
சென்னை, ஜூன் 21: பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பெண்கள் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, சென்னையில் சனிக்கிழமை நடந்த கட்சியின் மகளிர் அணி மாநாட்டில் அவர் பேசியது:
உடல் பலத்தை விட அறிவு பலம் தான் தற்போது முன்னிறுத்தப்படுகிறது. இந்த நிலையில் அறிவு பலத்தை பெருக்கவேண்டும். நாம் நம்பும் கொள்கைக்காகப் போராடி அதில் வெற்றிபெற நம் சக்தி முழுவதையும் முழுமையாக வெளிப்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு கல்வி அறிவை அதிகப்படுத்த வேண்டும். இதற்கு, பெண்களுக்கான 33 சத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவது மிக அவசியம். இதற்கு, பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும். இல்லையேல், 33 சத இட ஒதுக்கீடு பட்டிமன்றப் பொருள்களாகவே இருந்துவிடும்.
அரசியல், பொருளாதாரத் துறைகளில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்கும் மிக முக்கியம். அதற்கு, 33 சத இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை. நாட்டின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் பெண்களைக் கலந்தாலோசித்தே எடுக்கவேண்டும்.
பெண்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படும் முடிவுகளை பெண்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. பட்ஜெட்டில் பெரும் தொகை ராணுவத்துக்கு ஒதுக்கப்படுகிறது. சமூக மேம்பாடு, மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயந்தி நடராஜன்: மகளிருக்கான 33 சத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, பெண் உறுப்பினர்களை கீழே தள்ளிவிட்டு, மசோதாவை தாக்கல் செய்தவதை சில கட்சி உறுப்பினர்கள் தடுக்க முயன்றனர்.
இதைப் பார்க்கும்போது ஜனநாயக நாட்டில் தான் வசிக்கிறோமா? என எண்ணத் தோன்றுகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கு அளிக்கப்பட்டு உள்ள உரிமை வாக்களிக்க மட்டும் தானா? பெண்களுக்கு அரசியல் அதிகாரமும் உண்டு. நாடாளுமன்றத்திலேயே பெண்களை தாக்குகின்றனர் என்றால், கிராமங்களில் உள்ள பெண்களின் நிலை என்ன?
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பின்னும் சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்றால் அங்கு ஜனநாயகம் நீடிக்காது. சமமான பிரதிநித்துவத்தைப் பெற கல்வி தான் ஒரே கருவி. நாட்டில் உள்ள மொத்த பெண்களில் 50 சதம் பேருக்கு கல்வி அறிவு இல்லை. 14 வயதுக்கு உட்பட்ட 5.5 கோடி பெண்கள் வீட்டு வேலைகளிலேயே முடக்கப்படுகிறார்கள்.
கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்க வேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கு நாம் இணைந்து போராட வேண்டும் என்றார்.
மாநாட்டுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாநில அமைப்பாளர் பாத்திமா முஷாபர் தலைமை வகித்தார். திராவிடர் கழக செய்தித் தொடர்பாளர் ஏ.அருள்மொழி, சமூக நலவாரியத் தலைவர் சல்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமூக நல்லிணக்கம், கல்வி, ஊடகவியல், இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளில் சாதனை படைத்த இஸ்லாமிய பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080621121050&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=0