மதவாத சக்திகளை தடுத்திட, மத்தியில் ஒர் நல்லாட்சி ஏற்பட்டிட..........
மதவாத சக்திகளை தடுத்திட, மத்தியில் ஒர் நல்லாட்சி ஏற்பட்டிட
சுயமரியாதைக் கொள்கை உறுதி கொண்ட இலட்சிய கூட்டணி இருக்க வேண்டும்
முஸ்லிம் லீக் மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் பேருரை
சென்னை, ஜூன் 22- இந்தியாவிலே ஒரு நல்ல அரசு உருவாக வேண்டுமானால், மதவாத சக்திகளுக்கு இடம் கொடுத்திடாத சுயமரியாதைக் கொள்கை உறுதி கொண்ட, இலட்சிய உறுதி கொண்ட கூட்டணி உருவானால்தான் தடுத்திட முடியும் என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நேற்று நடைபெற்ற முஸ்லீம் லீக் மாநாட்டில் எடுத்துக் கூறி விளக்கவுரை யாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு நேற்று (21.6.2008) சென்னைத் தீவுத் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆற்றிய நிறைவுரை வருமாறு: இந்த அருமையான மாநாட்டில் கலந்து கொண்டு - பெருமை மிகு தலைவர்களுடைய பேச்சுக்களையெல்லாம் கேட்கின்ற வாய்ப்பினைப் பெற்று - இந்த மாநாட்டிலே நிறைவேற்றியுள்ள தீர்மானங்களையெல்லாம் படித்துப் பார்த்து - அவற்றை நிறைவேற்றுகின்ற வாய்ப்பு கிடைக்குமேயானால் நிறைவேற்றி - உங்களுடைய நன்றிக்கு உரியவனாக ஆகின்ற நிலையில் இந்த மாநாட்டிலே நான் கலந்து கொண்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய அளவில் இந்த மாநாடு நடைபெறும் என்று நான் முதலில் எதிர்பார்க்கவில்லை. நம்முடைய மாநாட்டின் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் குறிப்பிட்டதைப் போல, எதிர்பார்த்ததை விட மேலான கூட்டம் - பேரணி - இவைகள் எல்லாம் இன்றைக்கு நடைபெற்று நானும் உங்களோடு இணைந்து மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்திருக்கிறேன். (கைதட்டல்)
எங்களுடைய துணை எங்களைப்போல
வலுவாக, உரமாக இருக்கிறது
நம்முடைய பனத்வாலா அவர்கள்கூட இங்கே வரும்போது, பேரணியும், பொதுக்கூட்டமும், மாநாட்டுக் கூட்டமும் ஏதோ ஓரளவு - ஒரு மண்டபத்திலே நடைபெறும் கூட்டம் என்ற அளவிலேதான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டுதான் வந்திருப்பார். அவர் ஆற்றிய உரையை சிங்கநாதம் என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் இங்கே வர்ணித்தார்கள். அவர் உரை, சிங்க நாதமாக மாறியதற்குக் காரணமே, இங்கே குழுமியிருக்கின்ற இந்தக் கூட்டத்தின் காட்சிதான் என்று சொன்னால் அது மிகையாகாது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இப்போது முஸ்லிம் லீக் கட்சிக்கு வளர்ச்சி இல்லை - அது குறுகி விட்டது - நாங்கள் பரந்து விரிந்து இங்கே எங்களுடைய கொடியை நாட்டியிருக்கிறோம் என்றெல்லாம் எண்ணி கர்ச்சனை புரிந்து கொண்டிருக்கின்ற மதச் சார்புடைய ஒரு கூட்டம் - மதவெறி கொண்ட ஒரு கூட்டம் - இங்கே முஸ்லிம்களுடைய இயக்கம் வலுவாக இல்லை என்று சொன்னதற்குக் காரணமே, களிப்படைவதற்குக் காரணமே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு துணையாக இருக்கின்ற முஸ்லிம் லீக் இளைத்துப் போய் விட்டது, எனவே தி.மு. கழகம் கம்பீரமாக நடமாட முடியாது என்ற அந்த நப்பாசையிலேதான் அவர்கள் இதைச் சொல்லி வருகிறார்கள், ஏடுகளில் சிலர் எழுதியும் வருகிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய துணை இளைத்துப் போக வில்லை. களைத்துப் போகவும் இல்லை. எங்களுடைய துணை எங்களைப் போலவே வலுவாக இருக்கிறது. எங்களைப் போலவே உரமாக இருக்கிறது. ஆகவே இதற்குத் தான் துணை என்று பெயர். ஒன்று இளைத்துப் போய் மற்றொன்று பலமாக இருந்தால், அது துணையாக இருக்க முடியாது, தொல் லையாகத்தான் இருக்கும். எனவே நாங்கள் சம பலத்தோடு இன் றைக்கு இருக்கிறோம். இந்த வார்த்தையை நம்முடைய காதர் மொகிதீன் அவர்கள் தேர்தல் நேரத்தில் இடங்களைப் பிரித்துக் கொள்கின்ற போது பயன்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை யோடு நான் இதைச் சொல்கிறேன். (பலத்த சிரிப்பு)
நான் இந்தக் கூட்டத்திலே அளவற்ற மகிழ்ச்சியோடு நீங்கள் எல்லாம் அமர்ந்திருக்கின்ற காட்சியினைக் கண்டு உள்ளபடியே மனம் பூரிக்கின்றேன். என்னுடைய இதயம் கனத்துப் போகிறது. ஏனென்றால் நம்முடைய அருமை நண்பர் நாகூர் அனீபா அவர்கள் இங்கே பாடும்போது எனக்கு பல நினைவுகள். அவரும் நானும் ஏறத்தாழ சம வயதினர். ஒன்றிரண்டு வயது ஏற்றத் தாழ்வு இருக்கலாம். அந்தக் காலத்தில் நீதிக் கட்சி தொடர்பு கொண்டு நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாடுகளில் - பிறைக் கொடி பறந்த அந்த மாநாடுகளில் - நம்முடைய வீரமணி அவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல் - பிறைக் கொடியைப் பிடித்த கை இந்தக் கை, சிறுவனாக இருந்து பிறைக் கொடியை ஏந்திய கை இந்தக் கை. அந்தப் பிறைக் கொடியைப் பற்றி பாடியவர், அன்றைய மாணவராக, இளைஞராக இருந்த நம்முடைய நாகூர் அனீபா அவர்கள். அந்த இசை முரசின் நாதம் இதுவரையிலே அதே தொனியிலே ஒலித்துக் கொண்டி ருக்கின்ற காட்சியினை நீங்கள் காண்கிறீர்கள். சிறு களைப்பு ஏற்பட்டாலும்கூட அந்தக் குரல்வளம் கொஞ்சமும் குறையவில்லை. எப்படி நாகூர் அனீபா வின் குரல்வளம் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறதோ அதைப் போலத்தான் முஸ்லிம் லீக்கின் பலமும் குறையாமல் இருக்கிறது என்பதை நான் இங்கே எடுத்துக்காட்ட விரும்பு கிறேன்.
கொள்கைகளும் கூட்டணியும்
கூட்டணி பற்றி இங்கே பேசப்பட்டது. கூட்டணிக்கு, நம்முடைய பனத்வாலா அவர்கள் குறிப்பிட்டார்கள் - அதைத் தொட்டு நம்முடைய பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களும் சுட்டிக் காட்டினார்கள். தேர்தல் நேரம் தான் என்றில்லாமல், அதற்கு முன்பே கூட்டணியைப் பற்றியெல்லாம் ஒரு ஏற்பாட் டுக்கு வர வேண்டுமென்ற கருத்தைச் சொன்னார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் யார் யார் கூட்டணி சேருவது என்ற அந்த முக்கியமான கருத்தை விட யார் யார் கூட்டணியிலே இருப்பது என்கின்ற முக்கியமான கருத்துக்கு இப்போது நேரம் வந்து விட்டது என்பதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள். நான் இன்று நேற்றல்ல, எங்களையெல்லாம் ஆளாக் கிய அரசியல் மேதை - ஜனநாயக காவலர் அண்ணா அவர்கள் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதிலே ஆர்வம் உடைய வர்கள். மக்களாட்சித் தத்துவம் வெற்றி பெற வேண்டுமானால், அப்படி வெற்றி பெற்ற மக்களாட்சி நிலைக்க வேண்டுமேயானால் - அடிப்படை பலமாக இருக்க வேண்டும். அந்த அடிப் படையைப் பலப்படுத்திக் கொள்ள நேர்மையான, நியாயமான, வலுவுள்ள நம்முடைய இலட்சியங்களை எதிரொலிக்கக் கூடிய, நம்முடைய கொள்கைகளுக்கேற்ற கூட்டணி இருக்க வேண்டும். நான் இங்கே நம்முடைய பனத்வாலா அவர்களின் எதிரிலே ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். நாங்கள் இடையிலே இந்தக் கூட்டணிக் கொள்கை யில் சற்று விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது - அவருக்குத் தெரியும். ஏனென்றால் என்னைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கின்ற தேசிய தலைவர்களில் அவரும் ஒருவர். ஏன் விட்டுக் கொடுக்க வேண்டி யிருந்தது என்பதை அவர் அறிவார். தமிழ்நாட்டில் பா.ஜ.க. வோடு திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வைக்க வேண் டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்ட போதும், நாங் கள் கொள்கையை புறம் வைத்து விட்டு, அந்தக் கூட்டணிக்குச் செல்லவில்லை. கொள்கையிலே உறுதியாகவே - கொள்கை யில் ஒரு துளியும் விட்டுக் கொடுக்காமல் அந்தக் கூட்டணியில் எங்களை நாங்கள் இணைத்துக் கொண்டோம். கூட்டணி உருவானபோதே டெல்லிப் பட்டணத்தில் நானும் தம்பி முரசொலி மாறன், இன்றைய ம.தி.மு.க. வின் பொதுச் செயலாளர் தம்பி கோபாலசாமி - எல்லோரும் படித்துப் பார்த்து, திருத்தம் சொல்லி இந்தக் கூட்டணியில் நாங்கள் இருப்பதென்றால், மதவெறியை நீங்கள் விட்டொழிக்க வேண்டும், ஒரு பொதுக் கொள்கையில் நாம் உடன்பாடு கொள்ள வேண்டும், மிக முக்கியமாக அயோத்தியிலே நீங்கள் ராமர் கோவில் கட்டுவ தற்காக பாபர் மசூதியை இடிக்கும் பணியிலே ஈடுபட்டிருக் கிறீர்களே, அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கேட்டு அதற்கெல்லாம் அவர்கள் வளைந்து கொடுத்து, அதற் கெல்லாம் ஒப்புதல் சொன்ன பிறகுதான் அந்தக் கூட்டணிக்கு எங்கள் கையெழுத்தைப் பெற முடிந்தது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.
கூட்டணிக் கட்சிக்கான இலக்கணம்
பிறகு நாங்கள் அந்தக் கூட்டணியிலிருந்து விலகியதற்குக் காரணமும், எங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக முதலில் சொல்லி விட்டு, கொஞ்சம் கொஞ்சம் அதைத் தளர்த்திய காரணத்தால் அதிலிருந்து அவர்கள் விலகிய காரணத்தால் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகினோம். அமைச்சர்களாகவே இருந்து விலகினோம். அதற்குப் பிறகுதான் இனி இப்படி கொள் கையிலே உறுதியாக இருப்போம் என்று சொல்லி விட்டு, பின்னர் மாறி நடப்பவர்களுடைய நட்பு என்றைக்கும் வேண்டாம், சொன்ன சொல் தவறாத ஒரு கட்சி இருந்தால் தான், அந்தக் கட்சியோடு தான் இனி கூட்டணி, நன்றி உணர்வோடு இருக் கின்ற கட்சியோடு தான் இனி கூட்டணி என்று அன்றைக்கு எடுத்த அந்த உறுதிதான் நாங்கள் அடுத்த வேறொரு கூட்டணியை காங்கிரஸ் கட்சியின் தலைமை யில் அமைக்க வேண்டி வந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளோடும் நம்முடைய தம்பி திருமாவளவன் கட்சியோடும், முஸ்லிம் லீக் கட்சியோடும் உடன்பாடு கொள்ள வேண்டிய நிலைமை யெல்லாம் ஏற்பட்டது.
இதிலே இடையிலே ஒரு கூட்டணி கட்சியை விட்டு விட்டாயே என்று நீங்கள் கேட்கலாம். பெயர் சொல்லத் தான் விட்டு விட்டேனே தவிர, விட்டு விடவில்லை, அவர்கள் என்ன செய்தால் போகச் சொல்வார்கள் என்று எண்ணிய காரணத்தால் போனவர்களே தவிர, நாங்களாக யாரையும் இழக்கவும் விரும்ப வில்லை, விரட்டவும் விரும்பவில்லை. ஏனென்றால் பனத்வாலா அவர்கள் இங்கே வந்திருக்கின்ற காரணத்தால், அவருக்கு இந்தச் செய்தியை வேறு யாராவது வேறு விதமாகச் சொன்னால் என்ன செய்வது என்பதற்காகத் தான் உண்மையான தகவலை அவருக்குச் சொன்னேன். நாங்கள் யாரையும் போ என்று விரட்ட வில்லை. ஆனால் நாங்கள் எவ்வளவு இழிவைத் தாங்கிக் கொண்டு, எவ்வளவு அவமானத்தைத் தாங்கிக் கொண்டு ஒரு அணியை நடத்துவது? நான்தான் அந்த அணிக்கு தலைவன் என்றாலுங்கூட, அந்த அணியைக் கட்டிக் காப்பது என்ற அந்தக் கேள்விக்கு கிடைத்த பதில் தான் எங்கள் அணியிலிருந்து ஒரு கட்சி இன்றைக்கு வெளி யேறியதற்குக் காரணம், இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது என்றைக்கோ நடந்ததற்காக இன்றைக்கு இந்த காரியத்தை நீங்கள் செய்யலாமா என்று கேட்பவர்கள் உண்டு. எழுதுபவர்களும் உண்டு. வள்ளுவர் அப்போதே சொன்னார். தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே
நாவினால் சுட்ட வடு என்று ! அந்தத் திருக்குறளை வேண்டு மானால் எடுத்துக் கொளுத்தி விட்டு, என்றைக்கோ பேசிய தல்லவா என்று பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் என்றைக் கும் நாவினால் சுட்ட வடு மாறாது, ஆறாது. ஆகவே தான் நாம் சில முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியத்திற்கு வந்தோம். இன்றைக்கு இந்தக் கூட்டணியிலே இருந்து ஒரு கட்சி, விலகி யிருந்தாலுங்கூட, இதிலே இருக்க முடியாத சூழ்நிலை ஏற் பட்டாலுங்கூட, நாம் திராவிட முன்னேற்றக் கழகமாக, நம்மோடு இருக்கின்ற கட்சிகளோடு ஒரு அணியாக செயல்பட வேண்டிய சூழ்நிலை இருந்தாலுங்கூட நான் இந்த மாநாட்டிலே உறுதியாகத் தெரிவிக்கின்றேன். நிச்சயமாக, வருகின்ற தேர்தல் - அது பாராளுமன்றத் தேர்தலாக இருந் தாலும் - அடுத்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் நம்முடைய அணிதான் வெற்றி அணி - நாம் தான் வெற்றியடையப் போகின்ற அணி என்பதை உறுதிபட நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.
ஏனென்றால் முஸ்லிம் லீக் என்பது ஒரு சந்தர்ப்ப வாத இயக்கம் அல்ல. அந்த இயக்கத்திலிருந்து எங்களை அரவணைத் துக் காத்து, அறிஞர் அண்ணாவுக்குத் தோழராய், பெரியாருக்கு நண்பராய், எங்களுக்கெல்லாம் தலைவராய் விளங்கிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் ஆனாலும் - அவர்களுக்கு அடுத்து இந்த இயக்கத்தை வளர்த்து எங்களோடு நட்பு கொண்டிருந்த என்னுடைய அருமை நண்பர் அப்துல் சமத் அவர்கள் ஆனாலும் - அவர்கள் எல்லாம் இந்த இயக்கத்தை, இந்தக் கூட்டணியை எப்படி நடத்திச் செல்ல துணை புரிந்தார்கள் என்பதை யெல்லாம் நான் மறந்து விடவில்லை. இடையிடையே ஆயிரம் கசப்பு உணர்வுகள் , ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எங்களிடையே ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஏற்பட்டாலுங் கூட, கண்ணியம் மறந்ததில்லை அவர். அதனால் தான் அவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று இன்றளவும் போற்றப்படுகிறார். கோபதாபங்கள் எனக்கும் அப் துல் சமத் அவர்களுக்கும் இடையிலே ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் வாய் தவறி கூட என் பெயரைச் சொல்லி, அருமை நண்பர் சமத் அவர்கள் அழைத்ததில்லை. அதனால் தான் இன்றைக்கு அவருடைய மகளான பாத்தி மாவை என்னுடைய அருமைச் செல்வி என்று என்னால் அரவ ணைக்க முடிகிறது. அந்த உறவு இன்றைக்கும் தொடருகிறது.
நான் இங்கே வந்ததும் என்னிடத்திலே வந்து பாத்திமா பேசினார். என்ன சொன்னார்? அவர் குடும்பத்தைப் பற்றியா? அல்லது என்னுடைய குடும்பத்தை பற்றியா விசா ரணை? இல்லை. கொள்கையைப் பற்றித் தான் பேசினார். இன்றைக்கு கனிமொழியைப் பார்த்தேன், அப்பா. நாங்கள் இருவரும் ஒரு சபதம் செய்திருக்கிறோம் என்றார். என்ன சபதம் என்றேன். இந்த மகளிர் இட ஒதுக்கீட்டை பெற்றே தீருவது, பெறுவதற்கான போராட்டத்திலே ஈடுபடுவது என்று சபதம் செய்திருக்கிறோம் என்றார். அப்போது தான் முஸ்லிம் லீக்கின் வலுவும், அவர்களு டைய மன உறுதியும் இந்தப் பெண்களை வளர்த்திருக்கின்ற தலைவர்களின் வைராக்கியமும், கொள்கைப்பற்றும் நிச்சயமாக வெற்றி பெறும் என்று நாம் நம்புகிறோம். நம்புவதற்கு வழி இருக்கிறது என்று உறுதிபடக் கூறுகிறேன்.
மதவாத சக்திகள் வென்றால் மீண்டும்
ராமர்கோயில் உருவாகும்
இன்று இந்தியாவின் நிலைமை என்ன? அவைகளை யெல்லாம் சாங்கோபாங்கமாக பேச வேண்டிய நேரம் தான் இது. அதைத் தான் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பேசிக் கொண் டிருக்கிறோம். ஒரு புறத்திலே ஏழை யெளிய மக்கள் வாடுகிற அளவிற்கு விலைவாசி ஏறுகிறது. தமிழகத்திலே அதைத் தடுக் கின்ற முயற்சியிலே ஈடுபடுகிறோம். முடிந்த வரையிலே தாங்கப் பார்க்கிறோம். முடிந்த வரையிலே தாங்கிக் கொண்டிருக் கிறோம். வேறு சில மாநிலங்களிலே அதற்கான வழி வகைகளை இன்னும் காணாமல் இருக்கிறார்கள். அகில இந்திய அளவிலே கூட அதற்குரிய காரண காரியங்களை அறிந்து அதைக் களைய வேண்டிய முயற்சிகளிலே ஈடுபடவில்லை. அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினை
கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை இந்த நேரத்திலே அணுசக்தி விவகாரம். அதிலே நம்முடைய மதிப்பிற் குரிய தோழர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நண்பர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு. அதைத் தீர்க்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. நாளைக் குக் கூட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அவர்களோடு பேசவிருக்கிறேன். அதன் பிறகு நான் டெல்லிக்குச் செல்லவிருக்கிறேன். ஏனென்றால் தகவல்கள், புதுத் தகவல்கள் என்பதால் உங்களுக்கும் சொல்ல வேண்டு மென்பதற்காகச் சொல்கிறேன். அந்தத் தகவல்கள் பரிமாற்றம், அந்தச் சந்திப்பு அதன் மூலமாக ஏற்படுகின்ற விளைவுகள் இந்தி யாவைக் காப்பாற்றப் பயன்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட் சியைக் காப்பாற்றவோ, காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றவோ பயன்பட வேண்டுமென்று சொல்வதற்குப் பதிலாக இருவரி டையே ஏற்படுகின்ற நல்ல எண்ணம், இந்தியாவைக் காப்பாற் றப் பயன்படும். இவர்களிடையே பிளவு ஏற்படுமேயானால், அது மத வாத சக்திகளுக்கு வெற்றியாக ஆகி விடும், மீண்டும் ஒரு அயோத்தி - மீண்டும் ஒரு ராமர் கோவில் பிரச்சினை - மீண்டும் ஒரு பாபர் மசூதி இடிப்பு என்றெல்லாம் ஏற்படும் என்பதற்காகத் தான் சொல்கிறேன். அவைகள் எல்லாம் வராமல் இருக்க சுமூகமான இந்தியா, அமைதியான இந்தியா அமைய வேண்டுமேயானால், என்ன நடக்க வேண்டும்? ஒரு வேளை விரைவிலே தேர்தல் வந்தாலும், அல்லது உரிய நேரத்திலே வந்தா லும் அந்தத் தேர்தலிலே ஏற்பட வேண்டிய முடிவு யார் ஜெயிப் பது, யார் தோற்பது என்பதல்ல. இந்தியா வாழ்வதா இல்லையா என்ற அந்தக் கேள்விக்கு கிடைக்கின்ற பதிலாகத் தான் அது இருக்கும்.
கட்சி நீடிக்க வேண்டும் -
பணம் வேண்டாம் என்றவர் காயிதே மில்லத்
உங்களுக்கு நான் நினைவுபடுத்துகின்றேன். பாகிஸ்தான் பிரிந்து - பாகிஸ்தானிலே முஸ்லிம் லீக் தலைவர்களின் கூட்டம் நடைபெற்று - அந்தக் கூட்டத்திற்கு நம்முடைய காயிதே மில்லத் அவர்கள் சென்று திரும்பும் போது என்ன பேசினார் தெரியுமா? அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்ட போது - அய்யா இஸ்மாயில் சாகிப் அவர்களே, இதுவரை ஒன்றாக இருந்த முஸ்லிம் லீக் கட்சிக்கான பணம் மொத்தம் 40 லட்ச ரூபாய் இருக்கிறது. தற்போது இரண்டு நாடுகளாக பிரிந்து விட்டதால் - இந்தியாவிலே அமையவுள்ள முஸ்லிம் லீக் கட்சியின் பங்காக 17 இலட்ச ரூபாயை நீங்கள் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று சொன்ன போது, காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் சொன்னார் - எனக்கு பணம் பெரிதல்ல, நான் பணத்தைக் கேட்க இங்கே வரவில்லை, கராச்சிக்கு நான் வந்திருப்பது பணத்தைப் பெறுவதற்காக அல்ல, நாற்பது இலட்சம் அல்ல, 400 லட்சம் ஆனாலும் எனக்குத் தேவையில்லை. ஆனால் நான் விரும்புவது எங்களுடைய அமைப்பு இல்லாமல் போய் விடக் கூடாது. அந்த அமைப்பு அப்படியே இருக்க வேண்டும். எனவே அமைப்பை அப்படியே தாருங்கள் - முஸ்லிம் லீக் இந்தியாவிலே இருக்கும், அதை நாங்கள் கட்டிக் காப்போம், அதை நாங்கள் நடத்துவோம். முஸ்லிம் லீக் இருந்தால் போதும் எங்களுக்கு, உங்கள் பணம் வேண்டாம் என்று சொல்லி விட்டு திரும்பி வந்தவர் காயிதே மில்லத் இஸ்மாயில் அவர்கள்.
அங்கே சொன்னார்கள் - இதை எடுத்துச் செல்லுங்கள் என்று. ஆனால் வேண்டாம் என்று கொடுத்து விட்டு வரும் போது பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானைப் பார்த்து, இன்றையதினம் நாங்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். நீங்கள் பாகிஸ்தான்காரர்கள். நாங்கள் வேறு நாடான இந்தியாவைச் சேர்ந்தவர்கள். எங்கள் பிரச்சினை களை இனிமேல் நாங்களே பார்த்துக் கொள்வோம். நீங்கள் அதிலே தலையிட முயற்சிக்கக் கூடாது. அதாவது பாகிஸ்தான் இந்தியாவின் பிரச்சினைகளிலே தலையிடக் கூடாது, அதை நாங்களே பார்த்துக் கொள்வோம். ஏனென்றால் இந்தியா எங்கள் நாடும் கூட என்று கூறிவிட்டு, நாங்கள் உங்களிடம் எதிர் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். உங் கள் நாட்டில் வாழும் சிறுபான்மையினரை நீங்கள் கௌரவ மாக நடத்துங்கள். அது ஒன்றே போதுமானது இங்கே உள்ள சிறுபான்மையினரை கௌரவமாக நடத்துங்கள் என்று இந் தியாவிலே இருக்கின்றவர்களைப் பார்த்து கேட்கின்ற உரிமைக் குரல் எப்படி முஸ்லிம் தலைவர்களுக்கு ஏற்படுகிறதோ, அதைப் போல பாகிஸ்தானிலே இருக்கின்ற சிறுபான்மையோரை கௌர வமாக நடத்துங்கள் என்று சொல்கிற அந்த வீரக் குரலை ஒலித்தவர் நம்முடைய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் என்பதற்காகத் தான் இதை நான் சுட்டிக் காட்டுகிறேன். ``இசுலாமியரை வெளியே போகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை
நாடாளுமன்றத்தில் ஓர் விவாதத்தின் போது கே.டி.எம். அகமது இப்ராகிம் சாகிப் என்பவர் முஸ்லிம்களுக்காக வேகமாக வாதா டிக் கொண்டிருந்தாராம். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்கு கோபம் வந்து விட்டது. உடனே அவர் இப்ராகிம் சாகிப் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு இங்கிருக்கப் பிடிக்கா விட்டால் பாகிஸ்தானுக்கு போய் விடுவது தானே என்று வல்லபாய் படேல் கேட்டாராம். அப்போது அவையிலே இருந்த காயிதே மில்லத் விறுட்டென்று எழுந்து, அமைச்சர் பட்டேலைப் பார்த்து எங்களை பாகிஸ்தானுக்குப் போகச் சொல்ல நீங்கள் யார்? இந்த நாட்டில் பிறந்த யாரையும் வெளியே போ என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. இந்த நாட்டில் உள்ள ஈ, எறும்பு, கொசுக்களைக் கூட வெளியே போ என்று சொல்ல முடியாது என்று சொன்னாராம். அந்த அளவிற்கு இந்திய நாட்டுப் பற்றும், இந்த நாட்டை விட்டு வெளியேறு என்று சொல்கிறவர்களைக் கடிந்து கொள்கிற அந்த உணர்வும் பெற்றவராக காயிதே மில்லத் அவர்கள் அன்றைக்கு இருந்த காரணத்தால் தான் அந்த நாட்டுப் பற்று, அந்தத் தேசிய உணர்வு இன்றளவும் குமரி முனை வரையில் - இமயத்தின் முகடுகள் வரையில் பரவியிருக்கிறது, வளம் பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களைப் பெற்ற இயக்கம் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அந்த இயக்கம் பெற்ற வெற்றிகள் ஒன்றிரண்டு அல்ல. இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போரிட்டு வெற்றிக் கொடி நாட்டி, சுதந்திரத்தைக் கொண் டாடுகின்ற உரிமையை வாங்கித் தந்த மக்கள் இந்திய மக்கள் என்றால், அந்த இந்திய மக்களிலே இஸ்லாமிய மக்களுக்கும் பங்கு உண்டு என்ற அந்த உணர்வோடு நாம் நம்மை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. எனவேதான் இன்றைக்கும் இஸ்லாமியர்களுடைய உரிமைகள், முஸ்லிம் மக்களுடைய உரிமைகள், உணர்வுகள் இவைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுடைய மசூதிகளை இடிப்போம், அவர் களை இங்கே வாழ விட மாட்டோம், நாங்கள் தான் இந்த நாட்டிற்காக அவதாரம் எடுத்தவர்கள் என்று யார் பேசினாலும், அவர்களுக்கு இந்தியாவிலே இனி வேலையில்லை என்று சொல்கின்ற அரசு தான் மத்தியிலே உருவாக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசு உருவாக வேண்டுமேயானால் இங்கே வீற்றிருக்கின்ற நாமெல்லாம் அந்தக் கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும். அந்தக் கூட்டணி சுயமரியாதை கூட்டணி. மான உணர்வுள்ள கூட்டணி. அந்தக் கூட்டணி ஜனநாயகக் கூட் டணி. அந்தக் கூட்டணி மனிதனை மனிதனாக மதிக்கின்ற கூட் டணி. கண்ணியத்திற்குரிய கூட்டணி, நாகரிகமான கூட்டணி, அந்தக் கூட்டணி வெல்ல இந்த மாநாடு நிச்சயமாகப் பயன்படும், இந்த மாநாடு ஒரு பக்க பலமாக இருக்கும் என்ற நம்பிக் கையோடு என்னுடைய உரையை நிறைவு செய்து, வெற்றிகள் எல்லாம் நம் பக்கம் வந்து சேரட்டும், அதற்கு உங்களுடைய பணி தொடரட்டும் என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
விடுதலை.காம்
www.viduthalai.com