http://www.muslimleaguetn.com/news.asp
சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தினருடன் தலைவர் ஆலோசனை!
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள மாநில உறுப்பினர்களுடனான கலந்தாலோசனை இன்றிரவு 8.15 மணியளவில் காயிதெமில்லத் மன்ஸிலில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தலைவர் குஞ்சுமோன், தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலீலுர்ரஹ்மான், அப்துல் பாஸித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டு நிகழ்வுகளில், சென்னைவாழ் கேரள முஸ்லிம் லீகர்களின் பங்களிப்புகள் எப்படி அமைந்திட வேண்டும் என்பது குறித்து பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிவுரைகள் வழங்கினார். அவர் தனதுரையில், வெளியில் இருந்துகொண்டு இந்த இயக்கம் பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனங்களைக் கூறலாம்... ஆனால், அவையெல்லாம் கதைக்குதவாது! சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் என அதிகாரங்களில் நமது முறையான பங்களிப்பு இருந்தால் மட்டுமே நமது குரலுக்கு உரிய பதில் கிடைக்கும். அந்த அடிப்படையில் தற்சமயம் தமிழகத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
உங்கள் கேரள மாநிலம்தான் எங்கள் செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது. எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், ஓர் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ இருந்துகொண்டு, அவ்வப்போது சமுதாயத்தின் குரலை நீங்கள்தான் ஓங்கி ஒளித்துக் கொண்டிருக்கிறீர்கள்... நாங்கள் உங்களிடமிருந்து பல விஷயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் எங்கள் வழிகாட்டிகள்... உங்களை ஒருங்கிணைத்தது இந்த முஸ்லிம் லீக்!
இந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டுள்ள - கேரளத்தின் வருங்கால எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் சமுதாயப் பிரமுகர்களை நான் உளமார வரவேற்கிறேன்... இந்த மாநாட்டிலும், பேரணியிலும் உங்கள் பங்களிப்பு நிறைவாக இருக்க வேண்டும் என நான் உங்கள் யாவரையும் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்... என்றார்.
தொடர்ந்து, சென்னைவாழ் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தலைவர் குஞ்சுமோன், சென்னைவாழ் கேரள முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) துணைத்தலைவர் அஃப்ஸீர் நூருத்தீன், செயலாளர் முஜீபுர்ரஹ்மான், துணைச் செயலாளர் முஹ்யித்தீன் மற்றும் மேடையில் முன்னிலை வகித்த அனைவரும் கருத்துரைகள் வழங்கினர்.