மத உணர்வு இருப்பதில் தவறில்லை
கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
காயல்பட்டினம் நகர மக்கள் ஒன்றுகூடி, உங்கள் பகுதி மக்களுக்காக ஓர் அமைப்பையும் நிறுவி, சேவைகள் பல ஆற்றி வருவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள். இந்த சங்கம் அப்படி பல சேவைகளைச் செய்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இன்னும் பல சேவைகளை செய்ய அது காத்திருக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சியில் காயல்பட்டினத்தின் பங்கு மகத்தானது. தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் அவர்கள் சொன்னதைப் போல, தற்போது முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளராக இருக்கும் ஆற்றல் மிக்க தம்பி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் காயல்பட்டினத்திலிருந்து முஸ்லிம் லீகிற்கு கிடைத்த சொத்து.
அதுபோல, முஸ்லிம் லீகின் அதிகாரப்பூர்வ தினசரி நாளிதழான மணிச்சுடரின் செய்தி ஆசிரியராக உங்கள் ஊரைச் சார்ந்த காயல் மகபூப் திறம்பட பணியாற்றி வருகிறார்.
இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளைக் குறிப்பெடுத்து செய்தியாக்கிக் கொண்டிருக்கும் தம்பி ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் மணிச்சுடர் நாளிதழின் தூத்துக்குடி மாவட்ட செய்தியாளராக உள்ளார்.
பாங்காக்கிலிருந்து வாவு ஷம்சுத்தீன் ஹாஜியார், அபூதபியிலிருந்து ஷாஹ{ல் ஹமீத், ஹாங்காங்கிலிருந்து தம்பி ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன், இலங்கையிலிருந்து சகோதரர் ஹாஜி பி.எம்.ரஃபீக் உள்ளிட்ட உங்கள் ஊரைச் சார்ந்த ஆற்றல் மிக்க பல நல்லவர்கள் இந்த தாய்ச்சபைக்கு என்றும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
தமிழக முஸ்லிம்களின் வளர்ச்சி வரலாற்றில் காயல்பட்டினத்திற்கென்று தனியோர் இடம் எப்பொழுதும் உள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி உருவாக்கப்படும்போது, அதன் அஸ்திவாரத்திற்கு தங்கள் பணம், உழைப்பு, ஒத்துழைப்புகளை நிறைவாக வழங்கியவர்கள் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள்.
சென்னையிலுள்ள காயிதெமில்லத் கலைக் கல்லூரியின் உருவாக்கத்திற்கும் உங்கள் ஊரைச் சார்ந்த பெருமக்கள் நிறைவான பங்களிப்புகளைச் செய்துள்ளனர். வெளியூர்களில் இவ்வளவும் செய்த இம்மக்கள் தங்கள் சொந்த ஊரில் கல்லூரி ஆரம்பித்ததோ சில ஆண்டுகளுக்கு முன்புதான். நமது தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த - பாரம்பரியமிக்க வாவு குடும்பத்தினர், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி என்ற பெயரில், இந்தக் கல்லூரியை உருவாக்கியுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு அவர்கள் காலங்காலமாக செய்து வரும் ஒத்துழைப்புகள் என்றும் மறக்க முடியாதவை.
இவற்றுக்கெல்லாம் காரணம், இந்நகர மக்கள் என்றுமே இஸ்லாமிய வழிமுறைகளை முறைப்படி பேணி ஒழுகி வந்ததுதான்.
1986ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மாபெரும் மாநாட்டில், முஸ்லிம்கள் நிறைவாக வாழும் பகுதிகளில் பைத்துல்மால் நிதியம் நிறுவப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில காலங்களிலேயே இந்த காயல்பட்டினத்தில்தான் துவக்கமாக பைத்துல்மால் உருவாக்கப்பட்டது.
அன்று பசியோடிருந்த மக்களுக்கு கலீஃபா உமர் ரழியல்லாஹ{ அன்ஹ{ அவர்கள் தமது தோளில் மாவு சுமந்து வந்து, அம்மக்களின் பசியைப் போக்கினார்கள். அந்த வழியைப் பின்பற்றி காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் செய்த அறப்பணிகள் காரணமாக இன்று அங்கு பசியோடு ஒருவரும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
தெற்கு ஆத்தூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள குடிமக்களின் வீடுகள் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்ட நேரத்தில், உங்கள் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் 200 வீடுகளைக் கட்டிக் கொடுத்தனர். இவ்வளவு செய்தும் இவற்றையெல்லாம் அவர்கள் வெளியில் பேசாத - பேச விரும்பாத காரணத்தால், வெளி உலகுக்கு அவை தெரியாமலே இருந்து வருகிறது. இம்மக்களிடம் இருந்து வரும் மார்க்க உணர்வுகளே இவர்களை இவ்வாறு செயல்படச் செய்கிறது.
காயிதெமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் காலத்திலிருந்தே, பொது சிவில் சட்டத்திற்கெதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போராடி வருகிறது. அக்காலத்தில், இச்சட்டத்திற்கெதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டபோது, உச்ச நீதிமன்றத்திலிருந்து வெளியிடப்பட்ட தீர்ப்பில், காயல்பட்டினம் முஸ்லிம்கள் அனுப்பிய மஹஜர் இது... அதனடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று, அப்போது காயல்பட்டினம் மக்கள் எழுதியனுப்பிய ஒரு சொற்றொடரை மேற்கோள் காட்டி குறிப்பிடப்பட்டிருந்தது மறக்க முடியாத வரலாறு.
காயல்பட்டினத்தின் உலமாக்கள் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அரபு நாட்டு மக்களுக்கு அரபு மொழி இலக்கணம் படித்துக் கொடுத்தது பெருமைக்குரிய வரலாறு. மார்க்கத்தை அறிதல், பேணுதல், பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்களில் காயல்பட்டினத்து மக்கள் எப்போதும் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
ஊலக அறிவையும் கற்ற ஹாஃபிழ்கள் ஏராளமாக உருவாகி வெளிவருவதும் இந்தக் காயல்பட்டினத்திலிருந்துதான். காரணம் அரபு நாட்டின் ஆதிகால தொடர்புதான். 10ஆம், 11ஆம் நூற்றாண்டில் பக்தாதிலிருந்து கப்பலில் இங்கு வந்திறங்கிய ஆண்-பெண்கள் இங்கு வந்து தங்கி, வணிகம் செய்து, குடும்ப உறவுகளையும் ஏற்படுத்திக்கொண்டனர்.
காயல்பட்டினம் நகர மக்களிடம் அரபியர்களின் கலாச்சாரங்கள் வெகுவாக மேலோங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே ஏதாவது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகள் நடைபெற்றால் அரபியில் கீதம் பாடுவார்கள். காயல்பட்டினத்திலும் அது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
அண்மையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் காயல்பட்டினம் வந்தபோது, அங்குள்ள இளம் மாணவர்கள் அரபி கீதங்களைப் பாடி அவர்களை வரவேற்று மகிழ்வித்தார்கள். இந்நிகழ்வை இ.அஹ்மத் ஸாஹிப் அவர்கள் அரபு நாட்டு கலாச்சாரம் என்று மகிழ்ச்சியுடன் போற்றிக் கூறினார்கள். இதுபோன்ற கலாச்சாரங்கள் வளர்க்கப்பட வேண்டும்.
1973ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஒரு மீலாத் விழாவில் உரையாற்றுவதற்காக நான் இலங்கை வந்த பிறகு, அடுத்ததாக இப்போதுதான் வந்துள்ளேன். இப்போதும், இலங்கை நாட்டின் வெலிகமை என்ற ஊரில், அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா நிறுவனத்தினர் ஏற்பாடு செய்துள்ள மீலாத் விழாவில் உரையாற்றுவதற்காகவே நான் வருகை புரிந்துள்ளேன்.
இதுபோன்ற மீலாத் விழாக்களை நடத்துவது, இறைத்தூதர் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இவர்களுக்குள்ள இஷ்க் - பற்று, பாசத்தைக் காண்பிப்பதாக உள்ளது.
வெளிநாட்டவர்களுக்காக இந்நாட்டில் தரப்படும் இரட்டைக் குடியுரிமை போன்ற சலுகைகளை நம் மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலம் கடந்து யோசிப்பதை விட, உரிய காலத்திலேயே அவற்றைப் பயன்படுத்திக்கொள்வது சிறப்பிற்குரியது.
இந்தியாவில், மத ரீதியாக மக்களின் மனோநிலை என்ன என்பது குறித்த புள்ளிவிபரம் ஒன்றை ஹிந்து நாளிதழ் அதன் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்த புள்ளிவிபரப்படி, இந்தியர்கள் 10 பேரில் 5 பேர் மத உணர்வுடையவர்களாகவும், 10 பேரில் 4 பேர் அதிக மத உணர்வுடையவர்களாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா மதத்தினரிடையேயும் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது.
மத உணர்வாக இருக்கும் இது மதவெறியாக மாறிவிடக் கூடாது. நமது கவலையெல்லாம், மத உணர்வு இருப்பதில் தவறில்லை. மதவெறியை உருவாக்க சிலர் முயற்சித்துக் கொண்டிருப்பதுதான் மிகுந்த கவலையளிக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் இந்தியாவின் வருங்காலம் கேள்விக்குறியாகி விடும்.
பொதுவான இந்து மக்கள் இந்து மத உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர். அது சரியானதே. அதே நேரத்தில் அவர்களில் சிலர் இந்துத்துவா, இந்து ராஜ்ஜியம் என்ற பெயரில் மதவெறியூட்டப்படுகின்றனர். இந்து மத உணர்வை மதிக்கின்ற அதே வேளையில் இந்து மத வெறியை நாம் அனுமதிக்க முடியாது. இதுபோல்தான் எல்லா மதத்தினருக்கும்.
படிப்பினைக்காக கதை ஒன்றைச் சொல்கிறேன். சன்னியாசிகள் பதினைந்து பேர் தங்கள் பயணத்திற்கிடையே ஒரு காட்டில் தங்கினராம்... அவர்களுள் நான்கு இளம் சன்னியாசிகள் புறாக்களை வேட்டையாடிக் கொண்டு வந்தார்களாம். இதனைக் கண்ணுற்ற புறாக்கூட்டத் தலைவர், சன்னியாசிகளின் தலைவரைச் சந்தித்து, ஐயா, எங்கள் கூட்டத்திலுள்ள புறாக்களை தங்கள் சன்னியாசிகள் நால்வர் வேட்டையாடிச் சென்றுவிட்டனர். இது என்ன நியாயம்? வந்தவர்கள் வேதாந்திகள் என்பதால்தானே நாங்கள் எங்களைத் தற்காத்துக்கொள்ளத் தேவையில்லை என்றிருந்தோம்...? வந்தவர்கள் வேதாந்திகளல்ல@ வேதாந்திகள் வேடத்திலுள்ள வேட்டைக்காரர்கள் என்று தெரிந்திருந்தால் நாங்கள் எங்களைத் தற்காத்துக் கொண்டிருப்போமே...? என்று கேட்டதாம்.
முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய நெறிப்படி வாழ வேண்டும். முஸ்லிம்களைப் பார்த்து இஸ்லாம் பிறரால் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
இன்று உலகின் பல நாடுகளில் மிக வேகமாகப் பரவி வரும் மார்க்கம் இஸ்லாம்தான். அதற்குக் காரணம், முஸ்லிம்கள் வேதாந்திகாளகச் சென்று, தமது சொல் - செயல் - எண்ணத்தால் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை முழுமையாகப் பேணி வாழ்ந்தமைதான். அதனால்தான், பார்த்த மாத்திரத்தில் மொழி தெரியாத நிலையிலும் கூட அவர்களால் இஸ்லாம் ஏற்கப்பட்டது. இன்றைய தேவை இந்த நல்ல செயல்பாடுதான்.
நிராகரிப்பாளர்கள் விரும்பாத நிலையிலும், மற்றெல்லா மார்க்கங்களை விடவும் மேம்படுத்திக் காண்பிப்பதற்காக அவனே அவனது தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய மார்க்க நெறியைக் கொண்டும் அனுப்பிவைத்தான் என்று திருமறை குர்ஆனில் ஒரு வசனம் உள்ளது. இவ்வசனத்தை தவறாகப் புரிந்துகொண்ட சிலர் - இஸ்லாம் எல்லா மதங்களையும் அழித்து விட்டு அது மட்டும் வாழ வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர். உண்மையில் இதன் கருத்து, இஸ்லாம் தனது உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதன் மூலம் மற்ற மதங்களில் இல்லாத தனது தனித்தன்மையை உலகிற்கு உணர்த்தும் என்பதுதான்.
அண்மையில், வேளாங்கன்னியில் சமயங்களுக்கிடையேயான ஐக்கியத்தை மேம்படுத்தும் வகையில் கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதில், இந்துக்கள் சார்பில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும், கிறிஸ்துவர்கள் சார்பில் பிஷப் ஒருவரும், கம்யூனிஸ சிந்தனையாளர்கள் சார்பில் தா.பாண்டியன் அவர்களும், முஸ்லிம்கள் சார்பில் நானும் அழைக்கப்பட்டிருந்தோம்.
அப்போது, முஸ்லிம் தீவிரவாதம் பற்றி உங்கள் கருத்தென்ன என்று என்னிடம் கேட்கப்பட்டது. அவர்களுக்கு நான் விடை தருகையில், குண்டு வைக்கக்கூடிய யாரோ இருவரின் செயல்களை வைத்து இஸ்லாமைப் புரிந்துகொள்ளக் கூடாது. ஆதாரப்பூர்வ சான்றுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த இஸ்லாமிய வாழ்வியல் நெறியை அதன் மூலத்திலிருந்தும், அந்த நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்த ஞானிகள், கற்றறிந்த குருமார்களின் செயல்பாடுகளிலிருந்தும்தான் பார்க்க வேண்டும் என்று கூறினேன்.
கிறிஸ்துவர்களால் கடவுளாக மதிக்கப்படும் இயேசுவை இறைத்தூதராக நம்பாமல் ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியாது. அதே நேரத்தில், முஹம்மத் நபியை நம்பாமலேயே ஒருவர் கிறிஸ்துவராக இருக்கலாம். அப்படி இருக்கையில் மத தீவிரவாதம் இஸ்லாம் மார்க்கத்தில் எங்கிருந்து முளைக்கும்...? என்று நான் தெரிவித்தேன்.
அதற்குப் பின் பேசிய கிறிஸ்துவ பிஷப் அவர்கள், பேராசிரியர் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகச் சரியானவையே... முஸ்லிம்களையும், இஸ்லாமையும் புரிந்துகொள்வதில் நமது அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும் என்றார்.
நுpறைவாக, இந்த இலங்கை காயல் நல மன்றத்தின் நற்பணிகள் தொடரப்பட வேண்டும். முயுறுயுடுயுNமுயு - காவாலங்கா என்று இந்த அமைப்புக்குப் பெயர். இந்த அமைப்பு தனது செயல்பாடுகளால் இலங்கையைப் பாதுகாக்கும் காரணியாக இருக்கும் என்பதால் நான் அதை காவல் லங்கா என்று வாசிக்க ஆசைப்படுகிறேன். இதன் மக்கள் நலப் பணிகள் என்றென்றும் தொடரவும், சிறக்கவும், அவற்றுக்கான முழு நற்பலன்களும் இம்மையிலும், மறுமையிலும் இதன் கீழ் செயல்படுவோருக்குக் கிடைக்கவும் நான் அல்லாஹ்வைப் பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனதுரையில் தெரிவித்தார்.
பேராசிரியரின் உரையைத் தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கல்விப் பணிப்பாளர் அன்வர்தீன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தமது கல்லூரிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் ஒன்றின் அஃபிலியேஷன் வேண்டும் எனவும், அதற்கு பேராசிரியர் உதவ வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
அவரது கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டறிந்த பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தாம் இந்தியா திரும்பிய பின், இது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயரதிகாரிகளிடம் தேவையான விளக்கங்களைப் பெற்று, இயன்றளவு விரைவாக ஆவன செய்து தருவதாக தெரிவித்தார்.
தகவல்:
ஓ.எல்.எம்.ஆரிஃப்,
செயற்குழு உறுப்பினர்,
காயல் நல மன்றம்,
கொழும்பு, இலங்கை.