Wednesday, October 6, 2010

முஸ்லிம் லீக் அகில இந்திய செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

முஸ்லிம் லீக் அகில இந்திய செயலாளருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய செயலாளர் ஜனாப் குர்ரம் அனீஸ் உமர் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 03.10.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஸ்டார் மெட்ரோ தேரா ஹோட்டல் அபார்ட்மெண்டில் நடைபெற இருக்கிறது.

நிகழ்விற்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை தாங்குகிறார்.

பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

இந்நிகழ்வில் வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினரும், பிறைமேடை மாதமிருமுறை ஆசிரியருமான எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

மேலும் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் பலர் கருத்துரை வழங்குகின்றனர்.

இந்நிகழ்வில் அமீரக காயிதெமில்லத் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு : 050 467 4399 / 050 51 96 433

முஸ்லிம் லீக் இணையத்தளங்கள் :
http://www.indianunionmuslimleague.in
http://muslimleaguetn.com

Monday, October 4, 2010

அயோத்தி தீர்ப்பு: பேராசிரியர் காதர் மொகிதீன் அறிக்கை.

அயோத்தி தீர்ப்பு: பேராசிரியர் காதர் மொகிதீன் அறிக்கை.
அயோத்தி தீர்ப்பு சம்மந்தமாக இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளராரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கை:

30-09-2010 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியள வில் பாபரி மஸ்ஜித் - ராமஜென்மபூமி சம்பந்தப்பட்ட ஒரு சில வழக்குகளின் தீர்ப்பை அலகாபாத்தில் உள்ள உயர்நீதிமன்ற லக்னோ சிறப்பு மன்றம் வழங்கியுள்ளது.

1992 டிசம்பர் 6-இல் பாபரி மஸ்ஜிது என்று கூறப்பட்டு வந்த கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது. அதனால் நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் மூண்டன; மக்கள் மாண்டனர்; அரசுகளின் போக்குகளும் - நோக்குகளும் நாட்டு மக்களுக்கு வெளிச்சமாயின. அன்றிலிருந்து நேற்றுவரை டிசம்பர் 6 ஒரு சரித்திர சம்பவ நாளாக அனுசரிக்கப்ட்டு வநதுள்ளது.

இனி, அந்த நாள் நினைவில் இருந்து மறைந்து 30-09-2010-ஆம் நாள் பற்றி பேசும்படியான ஒரு தீர்ப்பை நாடு பெற்றிருக்கிறது. மூன்று நீதிபதிகளில் இருவர் கருத்தையும், மூன்றாவது நீதிபதியின் ஒரு சில கருத்தையும் இணைத்துப் பார்க்கும் போது, அயோத்தி பிரச்சினைக்கு அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது தீர்ப்பு என்று கூறுவதைவிட, சிலரின் நம்பிக்கையை நிலைநாட்டும் நீதிமன்ற அறிவிப்பு என்பதே பொருத்தமானதாக அமையும் எனலாம்.

இந்தத் தீர்ப்பை - அறிவிப்பை, வழக்குத் தொடுத்தவர் கள் முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள் எனில், அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் கருத்துக் கூறுவது தேவையற்றதாகி விடும்.

வழக்குத் தொடுத்தவர்கள், வந்த தீர்ப்பை முழுமையாக ஏற்க இயலாத நிலை ஏற்படும் போது, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் அதில் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யப்படும் போது, அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் எது கூறினாலும் அதனால் நீதிமன்றத் தீர்ப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்து விட முடியாது.

இந்த எதார்த்த நிலைமையைச் சரியாகப் புரிந்து 1989 முதலே இந்த அயோத்தி விவகாரம் பற்றிய ஒரு தெளிவான - தீர்க்கமான - தூரநோக்குடன் ஆன அணுகுமுறையை வகுத்தளித்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கே உண்டு.

பாபரி மஸ்ஜித் விவகாரம், ராமஜென்ம பூமி பிரச்சினை என்று மாற்றப்பட்டு மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, ஒரு மதப் பிரச்சினை யாகவும், பின்னர் இந்து - முஸ்லிம் பிரச்சினையாகவும் படிப்படியாக வளர்க்கப்பட்டு, கலவரங்களுக்கு வழி காட்டப்பட்டு வந்த நேரத்தில் முஜாஹிதே மில்லத் ஜி.எம். பனாத்வாலா கூறினார்:

``பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி பிரச்சினையை கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டும்; ரோட்டில் தீர்க்க முடியாது. ரோட்டுக்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்கிறவர்கள் நாட்டுக்கு நன்மை செய்ய வில்லை; முஸ்லிம் சமுதாயத்துக்கும் நலன் கருத வில்லை’’ என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்தார் பனாத்வாலா.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் வகுத்தளித்த வழியைப் பின்பற்றியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது கருத்தைத் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளது.

இன்னும் ஒருபடி மேலே சென்று, அவர் கூறினார்:

``பாபரி மஸ்ஜிது - ராமஜென்ம பூமி சம்பந்தப்பட்ட வழக்குகள் பல கோர்ட்டுகளில் 88 உள்ளன. எல்லா வழக்குகளையும் ஒருசேர, உச்சநீதிமன்றத்தில் கொண்டு செல்லப்பட்டு, அனைத்து வழக்குகளையும் ஒருசேர விசாரித்துத் தீர்ப்பு வழங்கட்டும். அந்தத் தீர்ப்பு எதுவா னாலும் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல. நாட்டில் உள்ள சமுதாயங்கள் அனைத்துமே அந்தத் தீர்ப்பை ஏற்றாக வேண்டும். இந்த நிலையை உருவாக்க வேண்டு மானால் இந்திய அரசு அரசியல் சட்டத்தில் உள்ள 143(2) பிரிவின்படி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்’’ என்றெல்லாம் விளக்கம் அளித்தார்.

இன்றைக்கு தீர்ப்பு பற்றிப் பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும் கூறிவரும் கருத்தைப் படிக்கும் போது, பனாத்வாலா எத்தகைய தூர நோக்குடையவராகத் திகழ்ந்துள்ளார் என்பதை உணர முடிகிறது. நீதிமன்றத் தீர்ப்பை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று இப் பொழுது எல்லோருமே பேசுகின்றனர்.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிக் கூறிய தவான் என்னும் அறிஞர், இது நாட்டுப்புறப் பஞ்சாயத் தார் அளித்துள்ள தீர்ப்பு போன்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

எது எப்படி கூறப்பட்டாலும் நீதிமன்றம் கூறுவது தான் ஏற்கப்பட வேண்டிய ஒன்றாகி விடுகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து எல்லாத் தரப்பினரும் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்தும் நீதிமன்ற முயற்சிதான் இந்தத் தீர்ப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருப்தி ஆகிறார்களா? இல்லையா? என்பது போகப் போகத் தெரியும்.

ஆனால், ஒரு பெரும் உண்மை எதுவெனில், இந்திய நாட்டு மக்கள் இந்தத் தீர்ப்பால் எவ்வித ஆர்ப்பாட்டம் - போர்ப்பாட்டமும் நிகழவில்லை என்பதை உணர்ந்து திருப்தி அடைந்துள்ளனர் என்பதே.

நாட்டு மக்கள் மத்தியில் அமைதியும், சுமூகமும், நட்பும், நேசமும், நல்லிணக்கமும் ஓங்குவதற்கு எல்லோரும் உறுதி ஏற்க வேண்டும் என்பதே இந்தத் தீர்ப்பின் தாக்கமாகி யிருக்கிறது.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிறைமேடை தலையங்கம் - சமுதாயம் தலைநிமிரட்டும்! தனிச் சிறப்பு தழைத்தோங்கட்டும்!!

பிறைமேடை தலையங்கம் - சமுதாயம் தலைநிமிரட்டும்! தனிச் சிறப்பு தழைத்தோங்கட்டும்!!


பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!

வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் இலங்கட்டுமாக!

அக்டோபர் திங்கள் 4 ஆம் நாள்;

வல்ல இறைவனை வணங்கி வாழ்வோம்
இல்லாதார்க்கு வழங்கி வாழ்வோம்

எல்லோருடனும் இணங்கி வாழ்வோம், இந்த அழகிய மனிதநேய முழக்கத்தை செயல்வடிவமாக்கி வாழ்வதே இஸ்லாத்தின் விழுமிய இலக்கணம் என்று மாற்றார்க்கும் மருவிலா மாண்புதனை எடுத்துரைத்த நம் சிந்தனையெல்லாம் நிறைந்து நிற்கும் சந்தனத் தமிழ்ப் பேச்சாளர், மத நல்லிணக்க மாண்பாளர், மதங்களைத் தாண்டி மனங்களை வென்ற மறைந்த நம் மாபெரும் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் இந்த மண்ணுலகில் மலர்ந்த நாள்.

தன் சுய வாழ்வின் சுகத்தை மட்டும், கொஞ்சமே பார்த்திருந்தாலும்கூட பலதரப்பட்ட பதவிகளும் வந்து கொஞ்சும் காட்சியைக் கண்டிருக்க முடியும்; கண் இமை ‘ஆம்’ என்று மட்டும் சாடை காட்டியிருந்தால் கவர்னர் பதவிகூட வீட்டு வாசலுக்கே வந்து காத்துக் கிடந்திருக்கும்; வல்லரசு நாடுகளே வியப்புக்கண் கொண்டு பார்த்த நம் பாரதப் பெருந்தலைவி இந்திரா அம்மையாரை எந்த முன் அனுமதியும் பெறாமல் பார்க்க இயலும் என்றிருந்த ஒரே முஸ்லிம் அரசியல் வித்தகர் அல்லவா தரணியெல்லாம் வலம் வந்த தகைமைசால் நம் தலைவர் அவர்கள்!

புறக்காட்சியிலே அழகு; அகக்காட்சியிலே ஆன்மீகம்; பேசினால் அழகு தமிழ், எழுதினால் எழில் மிகு இலக்கியம்; எதை விடுத்து எதை எழுத? வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் வாழுகின்ற தலைமுறைக்கும், வாழவிருக்கிற தலைமுறைக்கும் பாடமாக்கி மறைந்த தலைவர் அல்லவா நம் தலைவர்!

சந்தனத் தமிழே! உங்கள் வதனத்தில் வளர்ந்த தமிழ் வார்த்தைகள் சில உங்களால் மட்டுமே உச்சரிக்க முடியும் என்ற விந்தையைத் தந்த வரலாறல்லவா நீங்கள்.

‘மனித நேயத்தின் தென்னகத்துத் திருத்தூதர் மறைந்தார்’ என்று உங்கள் மரணத்தை மனக்கலக்கத்தோடு எழுதியதே ‘தினமணி’ நாளேடு; வேறு யாருக்குக் கிட்டியது இந்த உயரிய தகைமை?

ஆம்; வல்ல அல்லாஹ்வின் அருள் மறையைத் தமிழ் எனும் தாய்மொழியால் உணர வைக்க, தன் விரல் கொண்டே விடிய, விடிய விழித்தும், நெடிய பொழுதைக் கழித்தும் எழுதி முடித்த பாக்கியம் நிறைந்த நீங்கள் இவ்வுலகிலும் மறுஉலகிலும் ஏற்றமிகும் சிறப்பைப் பெற்றுவிட்டீர்கள் என்பது இறைவன்புறத்து நீங்கள் பெற்றப் பேரருள். அந்தப் பேரருளை எண்ணி, எண்ணி மகிழ்கிறோம்; வல்ல இறைவனைப் புகழ்கிறோம்.

இத்தகைய தூய தலைமைதான் நம் பேரியக்கம் முஸ்லிம் லீக் பெற்றிருக்கும்பேறு கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள் தொடங்கி இன்றைய நம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் வரை சொல்லாலும் செயலாலும் சிந்தனையாலும் அரசியல் பிரதேசத்தில் தூய்மையையும், வாய்மையையும் காட்டி வழி நடத்திய, வழி நடத்துகிற தலைமையல்லவா நம் தாய்ச் சபையின் தலைமை என் பிரியமுள்ள பிறை நெஞ்சே! இந்த அக்டோர் 4 ஆம் நாள் என்று மட்டுமல்ல; எந்த நாளிலும் நம் சமுதாயத்தின் பாரம்பரிய பெருமையை நிலைநாட்டி, எல்லா உரிமைகளையும் பெற்று நிலையான நிம்மதியுடன் வாழ நம் இயக்கத்தின் வளர்ச்சியும், அதன் அரசியல் வலிமையும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்கிற சீரிய சிந்தனை என்றென்றும் இருக்க இந்த நாளில் சபதம் ஏற்க வேண்டும்.

இந்த நாளை அடையாளப்படுத்திதான் ஆண்டுதோறும் தமிழகத்தில் மாநாடு நடத்தி மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விருதுகளைப் பலதரப்பட்ட சமூகச் சான்றோர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு ஒரே விருதாக அனைத்து சமூகத்தாரும் போற்றும் வகையில் ஏற்றத்தாழ்வுக்கிடமின்றி அனைவரையும் அரவணைத்து ஆதரவு நல்கி வரும் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ‘நல்லிணக்க நாயகர்’ விருது வழங்க நம் தாய்ச்சபை முடிவெடுத்து வருகிற டிசம்பர் திங்கள் 11 ஆம் நாள் அந்த மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இது வெறுமனே சாதாரண அரசியல் மாநாடா? அல்ல, அல்ல. நம் உணர்வும் உரிமையும் இரண்டறக் கலந்து நம் சமுதாயத்தின் இறையாண்மைப் பிரகடனத்தை ஓங்கி ஒலிக்கச் செய்யயும் மாநாடு. காலையில் கருத்தரங்கம், பகல் பொழுதில் பிறைக் கொடிப் பேரணி, மாலையில் மாநாட்டு நிகழ்வு என்று மிகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளை நம் தாய்ச்சபை மாநிலத் தலைமை முடுக்கிவிட்டிருக்கிறது.

இதில் என் பங்கு என்ன? என நீ கேட்பது எனக்குப் புரிகிறது. மாநாட்டின் வெற்றிக்கு உன்னால் இயன்ற பணிகள் அத்தனையும் நீ ஆற்றிட வேண்டும்; தமிழகமெங்கிலும் மாநாட்டுச் செய்தி பரவிட வேண்டும்; ஜமாஅத் பெருந்தகைகளை நேரில் சென்று சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்; எந்த அமைப்பில் இருக்கிறார்கள்? என்று யாரையும் பிரித்துப் பாராமல் அனைவரையும் அழைக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் அச்சிடப்பட்ட பிரசுரங்கள் மூலமாகவும், சுவர் விளம்பரங்கள் மூலமாகவும் சமூக மக்களுக்கு மாநாட்டு விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்; எத்தனை அதிக எண்ணிக்கையில் வாகனங்களை ஏற்பாடு செய்து அதிகமானோர் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிட இயலுமோ, அதனைச் செய்து காட்ட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மாநாட்டு ஏற்பாடுகளை முன்னின்று செயல்படுத்தும் தலைமை நிலையத்திற்கு நிதி திரட்டித் தரவேண்டும். இத்தனையும் எதற்கு? தனி நபர் வளத்திற்கா? சுயவிளம்பரம் தேடும் தன்னல பேராசைக்கா? இல்லை; இல்லை; இவை வேண்டுமானால் வசூலையே நாளெல்லாம் குறிக்கோளாகக் கொண்ட மற்ற சில அமைப்புகளுக்கு இருக்கலாம்; நமக்கல்ல. நம்முடைய கவலையெல்லாம் அரசியல் களத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்; நமக்கென உரித்தான தனிச்சிறப்பு தழைத்தோங்கி மிளிர வேண்டும்; நமது உரிமைகள் பறிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்;

அன்பு நெஞ்சே!

புறப்படு இன்றே புயலென ஆர்ப்பரிக்கும் வேகத்தில்; திறம்பட பணியாற்றும் உன் உத்வேகமும் உற்சாகமும் தாய்ச்சபை வரலாற்றில் இன்னும் ஒரு மகுடம் சூட்டட்டும்; இதுவே உன் பணி என பறைசாற்றிப் பணிபுரி; அதுவே சரி என அல்லாஹ்வும் ஏற்கட்டும்; ஆமீன்.

அன்புடன்,
மு. அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்

http://muslimleaguetn.com/news.asp?id=1901

அலகாபாத் தீர்ப்பு- நல்லிணக்கம் போற்றும் சமுதாயத்திற்கு ஏமாற்றம்..!

அலகாபாத் தீர்ப்பு- நல்லிணக்கம் போற்றும் சமுதாயத்திற்கு ஏமாற்றம்..!

-M.அப்துல் ரஹ்மான் எம்.பி.



"அயோத்தியில் பாபரி மஸ்ஜிது இடிக்கப்பட்டது ஓர் அநியாயச் செயல்;அக்கிரமச் சம்பவம்;இந் நிகழ்வுக்குக் காரணமாகவும்,பின்புலமாகவும் இருந்தவர்கள் மிகப்பெரும் அளவில் தண்டிக்கப்படவேண்டியவர்கள்."என்று லிபரான் கமிஷன் அறிக்கை மிகத் தெளிவாகக் கண்டித்திருக்கிறது.
சமய சார்பற்ற நிலையில் நல்லுள்ளம் கொண்டோர் அனைவரும் வரவேற்றனர் இந்தத் தீர்ப்பை.



பாரத நாட்டின் பாரம்பரியமிக்க பாராளுமன்றம் லிபரான் கமிஷனின் இந்த பார்போற்றும் தீர்ப்பைப் பாராட்டியதோடு,அறிக்கையில் பட்டியலிடப்பட்ட குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும் என்ற பலதரப்பட்ட குரல்களையும் இந்திய அரசின் கவனத்திற்குப் பதிவு செய்தது.
மஸ்ஜிது இருந்த அந்த இடத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக நிலை நிறுத்தும் வழக்கின் தீர்ப்பு இப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

" நீதி மன்றத்தின் தீர்ப்பு எதுவானாலும் அது மதிக்கப்பட வேண்டியது"என்பதில் நமக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஆனால் அநியாயமாகவும்,அக்கிரமமாகவும் வெறிச்செயலில் ஈடுபட்டுத் தகர்க்கப்பட்ட மஸ்ஜிது இருந்த இடத்தில் "ராமர் பிறந்த இடம்"என்று வம்பு செய்து அத்துமீறி சிலைகள் வைக்கப்பட்ட காரணத்தால் சட்டப்பூர்வமான எந்த பின்னணியும் இல்லாமல் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே அந்த இடம் ராமர் பிறந்ததாகச் சொல்லுகிறது இந்த தீர்ப்பு.மேலும் அந்தக் குறிப்பிட்ட இடமே ராமர் கோயில் கட்டத்தகுந்த இடம் என்றும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுத் தீர்ப்பு வெளியாகியிருப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விட்டதோ?என்கிற ஐயப்பாடு நாட்டில் நிலவுவதை மறுக்கவியலாது.
நீதிமன்றத் தீர்ப்பு என்பது ஆவணங்களின் அடிப்படையில் சட்டப்படியானத் தீர்வாகத்தான் இருக்க முடியும்.ஆவணங்கள் இல்லாத நிலையில் நிலத்தின் பயன்பாட்டுக் காலத்தையே பெரிதும் கவனத்திற்குரியதாக எடுத்துக் கொள்ளப்பட்டுத் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதைப் பரவலாகக் காண்கிறோம்.
ஆனால் இந்த அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு,பாதிக்கப்பட்ட உள்ளங்களின் நியாயமான எதிர்பார்ப்பை முழுமைப் படுத்துவதாக இல்லை என்பது பெருத்த ஏமாற்றம்தான்.



இது இப்போது மேல் முறையீடு என்ற உரிமையில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லுகிறது."காலம் நீட்டிக்கப்பட்டாலும் எதிர்பார்க்கப்படும் நியாயமான தீர்ப்பு இறுதியில் வெளிச்சத்துடன் வெளிவரும்"என்பது மனசாட்சியுள்ளோர் அனைவரும்,இந்தியாவின் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும், நீதிமன்றங்களில் சத்தியம் நிலை நிறுத்தப்படும் என்று நம்புவோர்கள் அனைவரும் மதம் கடந்து மனித நேயம் போற்றும் சான்றோர் யாவரும் எதிர்பார்க்கும் யதார்த்த நிலை.


தர்மத்தினை சூது கவ்வலாம்,ஆனால் இறுதியில் தர்மம் வெல்லுவதுதானே நியாயம்?அதுவே ஒரு நல்ல நிறைவான தீர்வாக அமையும்!.இந்த நல்ல நம்பிக்கையுடன் காத்திருப்போம்.!

Tuesday, September 28, 2010

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்! -கே.எம்.கே..

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்! -கே.எம்.கே..


பாபரி மஸ்ஜித் பிரச்சினை இன்று நேற்றல்ல, நூறாண்டுகளுக்கு மேலாகவே இருந்து வந்துள்ளது.

1992 டிசம்பர் 6-க்குப் பிறகு முந்தைய வழக்குகள் - வாதங்கள் - வரலாறுகள் யாவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பாபரி மஸ்ஜிது இடிப்பு விவகாரமே புதிய வரலாறாகவும், புதுப்புது பூகம்பங்கள் தோற்றுவிக்கும் பூதமாகவும் மாறி விட்டது. பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி விவகாரம் என்றாலே நாட்டு மக்கள் உள்ளுக்குள் வெறுப்படை கிறார்கள். இதைப் பற்றிப் பேசினாலே நகரப் புறத்தவர் மட்டுமல்ல, இன்றைக்கு நாட்டுப்புறத்து மக்களும் எரிச்சல்படுகிறார்கள்.

கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு வழக்கை ரோட்டுக்கு கொண்டு வந்து, மக்களை அவதிக்கு உள்ளாக்கும் சக்திகளை நாட்டு மக்கள் வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பண்பட்ட இந்த பாரத நாட்டு மக்களில் பெரும்பாலான நல்லுள்ளங்கள், நீதிமன்ற வழக்குகள் நீதிமன்ற வளாகத்துக்குள் பேசப்படவும் விவாதிக்கப் படவும் வேண்டுமே தவிர, அவற்றைப் பற்றி பொது மக்கள் மத்தியில் விவாதிப்பது கூடத் தேவையற்ற ஒன்று என்றே கருதுகின்றன.

இத்தகைய உணர்வும், போக்கும், அணுகுமுறையும் எல்லா மதங்களிலும் உள்ள நன்மக்களிடம் தொடர்ந்து நிலவி வருகிறது. ஆனால், தங்களின் சுயநலத்துக்காக ஏதாவது ஒரு பிரச்சினை கிடைக்காதா? அதை ஊதிப் பெரிதாக்கி மக்கள் மத்தியில் விரோத குரோதங்களை உருவாக்க முடியாதா? என்று காத்துக் கொண்டிருக்கும் ஷைத்தானிய சக்திகள் எல்லா சமுதாயங்களிலும் இன்றைக்கு உருவாகியுள்ளன.

அவர்களின் அத்துமீறிய செயல்களுக்கு நாளை வரவிருக்கும் பாபரி மஸ்ஜிது தீர்ப்பு ஒரு காரணமாகி விடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன. முன்னெச்சரிக்கையாக அனைத்து வழிகளிலும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

நாட்டு மக்கள் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக் கும் முழு ஒத்துழைப்பு தருவது கட்டாயக் கடமையாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொறுத்தவரை யில் 1989-ம் ஆண்டு முதல் பாபரி மஸ்ஜிது பிரச்சினை குறித்துத் தெரிவித்து வரும் கருத்து இதுதான்.

பாபரி மஸ்ஜித் விவகாரம் சிவில் வழக்கு சம்பந்தப்பட்டது, சொத்துரிமை சம்பந்தப்பட்டது. இந்த வழக்குகளை சமுதாயங்களுக்கு இடையிலான வழக்கு என்றோ, சமயங்களுக்கு இடையிலான வழக்கு என்றோ கருதுவது மாபெரிய தவறாகும். வழக்குகள் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளன. நீதிமன்றத் தீர்ப்பு எதுவோ அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தீர்ப்பை ஏற்க மறுப்பவர்கள் நீதிமன்றம் ஏன் சென்றார்கள்? ஆக, சிவில் வழக்கு சம்பந்தப்பட்ட கோர்ட்டு தீர்ப்பை அனைத்து தரப்பாரையும் கட்டுப் படுத்தும் தீர்ப்பாகும் என மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

தீர்ப்பை எதிர்த்தோ, ஆதரித்தோ ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டங்கள் எதுவும் பிரச்சினைனைத் தீர்க்காது. கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்போம் - அமைதி காப்போம் - இவ்வாறுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கூறி வந்துள்ளது. அதைத்தான் இப்பொழுதும் கூறுகிறோம்.

கோர்ட்டு தீர்ப்பை மதிப்போம், அனைவரும் அந்தத் தீர்ப்பை ஏற்க அரசுகளின் முயற்சிக்கு ஒத்துழைப்போம்.

தமிழகம் என்றும் அமைதிப் பூங்கா என்பதை ஒவ்வொரு தருணத்திலும் நிரூபிப்போம்.

செப்டம்பர் 30 - அருமையான தருணம். நாட்டுக்குப் பெருமை சேர்க்கக் கிடைத்துள்ள நல்ல தருணம்.

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்!

Friday, September 24, 2010

வடக்கு மாங்குடியில் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம்

வடக்கு மாங்குடியில் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம்

தஞ்சை மாவட்டம் வஞ்சுவழி & வடக்கு மாங்குடி ஜும்ஆ பள்ளிவாசல் முன்புறம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம் 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சிறப்பு விருந்தினர்களாக வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி G.M.ஹாசிம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்

முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

தகவல் உதவி :

வடக்கு மாங்குடி பி. சகதுல்லா

shahadullah@yahoo.com

மருந்து தான் என்ன ?

மருந்து தான் என்ன ?
(திட்டச்சேரி கவிஞர் அன்வர் எம்.ஏ.,
தாய்ச்சபை இலக்கிய அணி, நாகப்பட்டினம்)
எந்திர விந்தைக ளாயிரம் கற்றோம்
என்னென்ன வோபல புதுமைகள் பெற்றோம்..
சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்
சங்கதி பேச வழிகளைத் தேடும்
அந்தமில் லாபல சக்திகள் உற்றும்
அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
தந்திரம் ஒன்று படித்திட வில்லை
தாய்வழிச் சோதரர் தவிப்பது உண்மை !

ஒன்றெனக் காணும் உயரிய மனமும்
உயிர் நலன் பேணும் ஒழுக்கக் குணமும்
இன்றுநேற் றல்ல இப்புவி தொடங்கும்
இனியநாள் முதலாய் இருக்கலா யிற்று
பன்றியின் குணமும் பருந்துப் பார்வையும்
பாசியாய்ப் படிந்து உள்மனத் துறைந்து
நின்றிடும் நிலையை நினைக்கும் தோறும்
நிம்மதி யழிந்த நிலைதான் மிச்சம் !

இத்தனைத் தீமைக்கும் ஏற்ற மருந்து
இஸ்லாம் தந்த இனிய மருந்து
உத்தம நபிகள் உவக்கும் மருந்து
உலகினில் துன்பம் ஒழிக்கும் மருந்து
சத்தியம் சாந்தம் இரண்டு சரக்கைச்
சமனிட அன்பெனும் தேனில் குழைத்துப்
பத்தியம் தெய்வ நினைப்போடு உண்டால்
பாருக்குள் போருக்கும் பங்கிலை கண்டாய் !

( மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர் ஹிஜ்ரி 1431 – 2010 லிருந்து )