Friday, September 24, 2010

மருந்து தான் என்ன ?

மருந்து தான் என்ன ?
(திட்டச்சேரி கவிஞர் அன்வர் எம்.ஏ.,
தாய்ச்சபை இலக்கிய அணி, நாகப்பட்டினம்)
எந்திர விந்தைக ளாயிரம் கற்றோம்
என்னென்ன வோபல புதுமைகள் பெற்றோம்..
சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்
சங்கதி பேச வழிகளைத் தேடும்
அந்தமில் லாபல சக்திகள் உற்றும்
அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
தந்திரம் ஒன்று படித்திட வில்லை
தாய்வழிச் சோதரர் தவிப்பது உண்மை !

ஒன்றெனக் காணும் உயரிய மனமும்
உயிர் நலன் பேணும் ஒழுக்கக் குணமும்
இன்றுநேற் றல்ல இப்புவி தொடங்கும்
இனியநாள் முதலாய் இருக்கலா யிற்று
பன்றியின் குணமும் பருந்துப் பார்வையும்
பாசியாய்ப் படிந்து உள்மனத் துறைந்து
நின்றிடும் நிலையை நினைக்கும் தோறும்
நிம்மதி யழிந்த நிலைதான் மிச்சம் !

இத்தனைத் தீமைக்கும் ஏற்ற மருந்து
இஸ்லாம் தந்த இனிய மருந்து
உத்தம நபிகள் உவக்கும் மருந்து
உலகினில் துன்பம் ஒழிக்கும் மருந்து
சத்தியம் சாந்தம் இரண்டு சரக்கைச்
சமனிட அன்பெனும் தேனில் குழைத்துப்
பத்தியம் தெய்வ நினைப்போடு உண்டால்
பாருக்குள் போருக்கும் பங்கிலை கண்டாய் !

( மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர் ஹிஜ்ரி 1431 – 2010 லிருந்து )