பிறைமேடை தலையங்கம் - சமுதாயம் தலைநிமிரட்டும்! தனிச் சிறப்பு தழைத்தோங்கட்டும்!!
பிரியமுள்ள பிறை நெஞ்சுக்கு!
வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் இலங்கட்டுமாக!
அக்டோபர் திங்கள் 4 ஆம் நாள்;
வல்ல இறைவனை வணங்கி வாழ்வோம்
இல்லாதார்க்கு வழங்கி வாழ்வோம்
எல்லோருடனும் இணங்கி வாழ்வோம், இந்த அழகிய மனிதநேய முழக்கத்தை செயல்வடிவமாக்கி வாழ்வதே இஸ்லாத்தின் விழுமிய இலக்கணம் என்று மாற்றார்க்கும் மருவிலா மாண்புதனை எடுத்துரைத்த நம் சிந்தனையெல்லாம் நிறைந்து நிற்கும் சந்தனத் தமிழ்ப் பேச்சாளர், மத நல்லிணக்க மாண்பாளர், மதங்களைத் தாண்டி மனங்களை வென்ற மறைந்த நம் மாபெரும் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் இந்த மண்ணுலகில் மலர்ந்த நாள்.
தன் சுய வாழ்வின் சுகத்தை மட்டும், கொஞ்சமே பார்த்திருந்தாலும்கூட பலதரப்பட்ட பதவிகளும் வந்து கொஞ்சும் காட்சியைக் கண்டிருக்க முடியும்; கண் இமை ‘ஆம்’ என்று மட்டும் சாடை காட்டியிருந்தால் கவர்னர் பதவிகூட வீட்டு வாசலுக்கே வந்து காத்துக் கிடந்திருக்கும்; வல்லரசு நாடுகளே வியப்புக்கண் கொண்டு பார்த்த நம் பாரதப் பெருந்தலைவி இந்திரா அம்மையாரை எந்த முன் அனுமதியும் பெறாமல் பார்க்க இயலும் என்றிருந்த ஒரே முஸ்லிம் அரசியல் வித்தகர் அல்லவா தரணியெல்லாம் வலம் வந்த தகைமைசால் நம் தலைவர் அவர்கள்!
புறக்காட்சியிலே அழகு; அகக்காட்சியிலே ஆன்மீகம்; பேசினால் அழகு தமிழ், எழுதினால் எழில் மிகு இலக்கியம்; எதை விடுத்து எதை எழுத? வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் வாழுகின்ற தலைமுறைக்கும், வாழவிருக்கிற தலைமுறைக்கும் பாடமாக்கி மறைந்த தலைவர் அல்லவா நம் தலைவர்!
சந்தனத் தமிழே! உங்கள் வதனத்தில் வளர்ந்த தமிழ் வார்த்தைகள் சில உங்களால் மட்டுமே உச்சரிக்க முடியும் என்ற விந்தையைத் தந்த வரலாறல்லவா நீங்கள்.
‘மனித நேயத்தின் தென்னகத்துத் திருத்தூதர் மறைந்தார்’ என்று உங்கள் மரணத்தை மனக்கலக்கத்தோடு எழுதியதே ‘தினமணி’ நாளேடு; வேறு யாருக்குக் கிட்டியது இந்த உயரிய தகைமை?
ஆம்; வல்ல அல்லாஹ்வின் அருள் மறையைத் தமிழ் எனும் தாய்மொழியால் உணர வைக்க, தன் விரல் கொண்டே விடிய, விடிய விழித்தும், நெடிய பொழுதைக் கழித்தும் எழுதி முடித்த பாக்கியம் நிறைந்த நீங்கள் இவ்வுலகிலும் மறுஉலகிலும் ஏற்றமிகும் சிறப்பைப் பெற்றுவிட்டீர்கள் என்பது இறைவன்புறத்து நீங்கள் பெற்றப் பேரருள். அந்தப் பேரருளை எண்ணி, எண்ணி மகிழ்கிறோம்; வல்ல இறைவனைப் புகழ்கிறோம்.
இத்தகைய தூய தலைமைதான் நம் பேரியக்கம் முஸ்லிம் லீக் பெற்றிருக்கும்பேறு கண்ணியமிக்க காயிதெ மில்லத் அவர்கள் தொடங்கி இன்றைய நம் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் வரை சொல்லாலும் செயலாலும் சிந்தனையாலும் அரசியல் பிரதேசத்தில் தூய்மையையும், வாய்மையையும் காட்டி வழி நடத்திய, வழி நடத்துகிற தலைமையல்லவா நம் தாய்ச் சபையின் தலைமை என் பிரியமுள்ள பிறை நெஞ்சே! இந்த அக்டோர் 4 ஆம் நாள் என்று மட்டுமல்ல; எந்த நாளிலும் நம் சமுதாயத்தின் பாரம்பரிய பெருமையை நிலைநாட்டி, எல்லா உரிமைகளையும் பெற்று நிலையான நிம்மதியுடன் வாழ நம் இயக்கத்தின் வளர்ச்சியும், அதன் அரசியல் வலிமையும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்கிற சீரிய சிந்தனை என்றென்றும் இருக்க இந்த நாளில் சபதம் ஏற்க வேண்டும்.
இந்த நாளை அடையாளப்படுத்திதான் ஆண்டுதோறும் தமிழகத்தில் மாநாடு நடத்தி மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விருதுகளைப் பலதரப்பட்ட சமூகச் சான்றோர்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால், இவ்வாண்டு ஒரே விருதாக அனைத்து சமூகத்தாரும் போற்றும் வகையில் ஏற்றத்தாழ்வுக்கிடமின்றி அனைவரையும் அரவணைத்து ஆதரவு நல்கி வரும் நம் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ‘நல்லிணக்க நாயகர்’ விருது வழங்க நம் தாய்ச்சபை முடிவெடுத்து வருகிற டிசம்பர் திங்கள் 11 ஆம் நாள் அந்த மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது.
இது வெறுமனே சாதாரண அரசியல் மாநாடா? அல்ல, அல்ல. நம் உணர்வும் உரிமையும் இரண்டறக் கலந்து நம் சமுதாயத்தின் இறையாண்மைப் பிரகடனத்தை ஓங்கி ஒலிக்கச் செய்யயும் மாநாடு. காலையில் கருத்தரங்கம், பகல் பொழுதில் பிறைக் கொடிப் பேரணி, மாலையில் மாநாட்டு நிகழ்வு என்று மிகப் பிரம்மாண்ட ஏற்பாடுகளை நம் தாய்ச்சபை மாநிலத் தலைமை முடுக்கிவிட்டிருக்கிறது.
இதில் என் பங்கு என்ன? என நீ கேட்பது எனக்குப் புரிகிறது. மாநாட்டின் வெற்றிக்கு உன்னால் இயன்ற பணிகள் அத்தனையும் நீ ஆற்றிட வேண்டும்; தமிழகமெங்கிலும் மாநாட்டுச் செய்தி பரவிட வேண்டும்; ஜமாஅத் பெருந்தகைகளை நேரில் சென்று சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்; எந்த அமைப்பில் இருக்கிறார்கள்? என்று யாரையும் பிரித்துப் பாராமல் அனைவரையும் அழைக்க வேண்டும். அந்தந்த பகுதிகளில் அச்சிடப்பட்ட பிரசுரங்கள் மூலமாகவும், சுவர் விளம்பரங்கள் மூலமாகவும் சமூக மக்களுக்கு மாநாட்டு விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்; எத்தனை அதிக எண்ணிக்கையில் வாகனங்களை ஏற்பாடு செய்து அதிகமானோர் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிட இயலுமோ, அதனைச் செய்து காட்ட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மாநாட்டு ஏற்பாடுகளை முன்னின்று செயல்படுத்தும் தலைமை நிலையத்திற்கு நிதி திரட்டித் தரவேண்டும். இத்தனையும் எதற்கு? தனி நபர் வளத்திற்கா? சுயவிளம்பரம் தேடும் தன்னல பேராசைக்கா? இல்லை; இல்லை; இவை வேண்டுமானால் வசூலையே நாளெல்லாம் குறிக்கோளாகக் கொண்ட மற்ற சில அமைப்புகளுக்கு இருக்கலாம்; நமக்கல்ல. நம்முடைய கவலையெல்லாம் அரசியல் களத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்; நமக்கென உரித்தான தனிச்சிறப்பு தழைத்தோங்கி மிளிர வேண்டும்; நமது உரிமைகள் பறிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்;
அன்பு நெஞ்சே!
புறப்படு இன்றே புயலென ஆர்ப்பரிக்கும் வேகத்தில்; திறம்பட பணியாற்றும் உன் உத்வேகமும் உற்சாகமும் தாய்ச்சபை வரலாற்றில் இன்னும் ஒரு மகுடம் சூட்டட்டும்; இதுவே உன் பணி என பறைசாற்றிப் பணிபுரி; அதுவே சரி என அல்லாஹ்வும் ஏற்கட்டும்; ஆமீன்.
அன்புடன்,
மு. அப்துல் ரஹ்மான்
ஆசிரியர்
http://muslimleaguetn.com/news.asp?id=1901