Thursday, November 24, 2011

தியாகத் தழும்புகளும் சத்திய முழக்கங்களும்�� - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி

தியாகத் தழும்புகளும் சத்திய முழக்கங்களும்�� - எம். அப்துல் ரஹ்மான் எம்.பி பிறைமேடை தலையங்கம்


பிரியமுள்ள பிறைநெஞ்சுக்கு!

வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின்மீதும் என்றென்றும் இலங்கட்டுமாக!

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை நகரத்தை இருப்பிடமாய்க் கொண்டு, ஒரு சாதாரண ஆசிரியப் பணியில் வாழ்க்கையின் தொடக்கத்தைக் கண்டு, நாடே வியக்கும் வண்ணம் நாடாளுமன்றத்தில் பலமுறை கர்ஜனை செய்து சிறுபான்மை சமூகத்திற்காகப் போராடிய மாபெரும் தலைவர் நம் பேரியக்கம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் மர்ஹூம் குலாம் மஹ்மூது பனாத்வாலா சாஹிப் அவர்கள்.

2008 ஆம் ஆண்டு சென்னையில் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநாடு நடைபெற்றபோது அவர் ஆற்றிய அற்புதமான அந்தப் பேருரைதான் அவருடைய கடைசி உரை என்பதை அப்போது நாம் உணரவில்லை. மாநாடு முடிந்து சென்னையிலிருந்து மும்பை நகர் சென்ற மறுநாளே அவருடைய மறைவுச் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முஸ்லிம் லீகின் அங்கீகார அமைப்பாக அமீரகத்தில் மிகச் சிறப்பாக சமூகப் பணியாற்றிவரும் காயிதெ மில்லத் பேரவைக்கு மாவட்ட அந்தஸ்துடன் பிரதிநிதித்துவம் பெறும் உரிமை வழங்கப்பட்டு இன்றளவிலும் அது நடைமுறையில் இருப்பதையும் நாம் அறிவோம். அதன் தலைவர் என்கிற பொறுப்புடன் நானும், பொதுச் செயலாளர் லியாக்கத் அலி அவர்களுடன் மற்ற நிர்வாக உறுப்பினர்களும் மணிவிழா மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு மறுநாளே துபாய் திரும்பினோம். அடுத்த மூன்றே நாட்களில் பனாத்வாலா சாஹிப் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு துபாயிலிருந்து மும்பை நகரத்துக்கு விரைந்து வந்து அவரின் நல்லடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தால் பெற்றேன். தமிழ்நாட்டிலிருந்து நமது தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் தலைமையில் பெருந்திரளான ஒரு குழுவே மும்பை நகர் வந்து கலந்து கொண்டதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அதே நேரத்தில் கேரளாவிலிருந்து மறைந்த கேரள மாநிலத் தலைவர் முகம்மது அலி ஷிஹாப் தங்ஙள் அவர்களின் தலைமையிலும், மற்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து குழுமியிருந்த காட்சிக்கு நடுவே மும்பை நகரத்தின் பிரமுகர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என்று ஆர்வத்துடன் ஜனாஸா நிகழ்வில் கலந்து கொண்டபோதுதான் பனாத்வாலா சாஹிப் அவர்களின் அன்புக்கு அடைக்கலமானோரின் அற்புதம் விளங்கியது.

அன்னாரின் மறைவு செய்தி கேட்டு நாட்டின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள் என்றாலும் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், முன்னாள் உள்துறை அமைச்சரும், இந்நாள் மஹாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநருமான மேதகு சிவராஜ் பாட்டீல் தமது இரங்கல் செய்தியில் ஒரு செய்தியைச் சொன்னார்.

��இந்த பாரத நாட்டின் மிக உயர்ந்த சட்டம் இயற்றும் மன்றமான பாராளுமன்றத்தில் ஒருவர் எப்படி செயலாற்ற வேண்டும்; எப்படி பேச வேண்டும்; எப்படி விவாதம் புரிய வேண்டும் என்பதற்கு எனக்குத் தெரிந்த வரையிலும் பனாத்வாலா அவர்கள்தான் முதன்மையான எடுத்துக் காட்டாக விளங்கினார்�� என்பதுதான் அந்த இரங்கல் செய்தி.

இத்தகைய வரலாற்றுப் பெருமையைக் கொண்டவராக வாழ்ந்து மறைந்த முஜாஹிதே மில்லத் பனாத்வாலா சாஹிப் அவர்களின் நினைவாக அன்னாரின் பெயரையே மும்பை நகரின் பிரசித்தி பெற்ற ஒரு மிகப் பெரிய சாலைக்கு பெயர் சூட்டும் விழா மும்பை நகரில் சென்ற 16.10.2011 அன்று நடைபெற்றது. தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக அந்த விழாவில் கலந்து கொள்ள நமது மாநிலத் தலைவர் பேராசிரியர் அவர்கள் என்னைப் பணித்தார்கள். சென்று, அந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியும், கலந்து கொண்ட அனைத்து பிரமுகர்களிடம் உரையாடியும் சென்னைக்குத் திரும்பினேன். அந்த விழாவில் நம் தேசியத் தலைவரும் மத்திய வெளிவிவகாரத்துறை இணை அமைச்சருமான மாண்புமிகு இ.அஹமது அவர்கள் தலைமையேற்க முக்கிய விருந்தினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய பெட்ரோலியத் துறை முன்னாள் அமைச்சர் திரு.முரளி தியோரா கலந்து கொண்டு பனாத்வாலா சாஹிப் அவர்களின் அருமை பெருமைகளைத் தொகுத்து, சிறுவயதிலிருந்தே அவருடன் மும்பை நகர வீதியில் உலா வந்த நிகழ்வுகளையெல்லாம் நினைவுகூர்ந்து பேசினார். அவருடன் தனியாக உரையாடியபோது பனாத்வாலா சாஹிப் அவர்களுடனான நட்பினை விவரித்து நெகிழ்ந்து போனார் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படியெல்லாம் சிறப்புகளைப் பெற்றவராகத் திகழ்ந்த முஜாஹிதே மில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா அவர்களின் பெயரால்தான் இன்றைக்கு மும்பை நகரத்தின் பரபரப்பான சாலை அழைக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற இந்த அகண்ட பாரதத்தில் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் பெயர் ஒரு மாநிலத்தின் மிகப் பெரிய நகரின் சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது நமக்குக் கிடைத்திருக்கிற ஒரு வரலாற்றுப் பெருமைதான். இந்த நிகழ்வை இக்காலத் தலைமுறையினருக்குப் பதிவு செய்யவே இதனை விளக்கியிருக்கிறேன்.

நிகழ்ச்சிக்கு முதல் நாளன்று மும்பை பெருநகரின் ஒரு வணிக வீதியில் முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நான் உரையாற்ற வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில முஸ்லிம் லீக் தலைமையிலிருந்து சகோதரர் சி.ஹெச். அப்துல் ரஹ்மான் அழைப்பு விடுத்திருந்தார். எனவே முதல் நாளே மும்பைக்குச் சென்ற நான் அந்த பொதுக் கூட்டத்தில் பேசினேன். சமுதாய உணர்வால் ததும்பி மிளிரும் ஆர்வ அலைகளில் மக்கள் வெள்ளம் திரண்டிருந்த அந்த காட்சி மறக்க முடியாத ஒன்று. நான் பேசியபோது பாராளுமன்றத்தில் சங்கைமிகு உலமாக்களைக் கண்ணியக் குறைவாகப் பேசிய சிவசேனா உறுப்பினர் சந்திரகாந்த் கேரேயிடம் குறுக்கிட்டு வாதாடி அவருடைய பேச்சையே அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதற்கு சபாநாயகர் உத்தரவிடும் வரை நான் பிடிவாதமாக இருந்து குரல் கொடுத்த நிகழ்வைச் சொல்லிக் காட்டியபோது உணர்ச்சிப் பொங்க தக்பீர் முழக்கம் விண்ணை முட்டிய விந்தையைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்களே இருக்க முடியாது. பாராளுமன்றத்தில் மற்ற கட்சிகளைச் சார்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தாலும் உணர்வுப் பாங்காக அன்றைக்கு சிவசேனாவின் விஷமக் கருத்தை யார் எதிர்க்க முடிந்தது? முஸ்லிம் லீகின் உணர்வால் வளர்க்கப்பட்ட ஒரு உறுப்பினன் என்கிற வகையில் நாம்தானே உரக்கச் சொல்ல முடிந்தது. ��எனவேதான் முஸ்லிம் லீக் வலிமை பெற நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்�� என்றும், ��அப்படி இயக்கம் வலிமை பெற்றால்தான் நீங்கள் வலிமை பெறுவீர்கள்�� என்றும் உணர்த்தியபோது அப்படியே ஏற்றுக் கொண்ட அந்தத் திருக்கூட்டம் இன்றைக்கு முஸ்லிம் லீக் பிரைமரிகள் அமைப்பதிலும், அதன் கொள்கைகளை எடுத்துச் சொல்வதிலும், அதைக் கொண்டு உறுப்பினர்கள் சேர்ப்பதிலும் முனைப்புடன் செயல்படும் செய்திகள் நமக்கு வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த வேகம் தொடருமானால் முஸ்லிம் லீகின் அரசியல் கட்டமைப்பு பலமான ஒன்றாக உருவெடுத்து, முன்னொரு காலத்தில் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் முஸ்லிம் லீகின் உறுப்பினர்கள் இடம் பெற்று சாதனைப் படைத்தார்களே அந்த அத்தியாயம் புதுப்பிக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பிறை நெஞ்சே!
எண்ணிப்பார். தமிழகத்தின் பல பகுதிகளிலும் நம் தாய்ச்சபையின் அமைப்பு ரீதியான வலிமையை நாம் எந்த அளவில் வைத்திருக்கிறோம்? மாவட்ட நிர்வாகத்தை செம்மையாகச் செயல்படுத்துகிறோமா? அல்லது செயல்பட வைக்கிறோமா? நமக்குள் உருவாகும் கருத்து வேறுபாடுகளை ஆரோக்கிய வட்டத்திற்குள் வைத்து ��இயக்கம்தான் பெரிது; நமக்குள் ஏற்படும் சிறு சிறு கசப்புகள் பெரிதல்ல�� என்று எண்ணுகிறோமா? எல்லோரையும் அரவணைத்துச் சென்று தாய்ச் சபை முஸ்லிம் லீக்தான் சமுதாயத்தின் அங்கீகாரம் கொண்ட பேரியக்கம் என்று நிரூபணம் செய்கிறோமா? எந்த வகையில் நமது பங்களிப்பு பயனுள்ளதாக இருக்கிறது என்பதைச் சிந்தித்துச் செயல்படும் தருணம் இது.

வளர்ந்து வரும் இளைய தலைமுறை தட்டுத் தடுமாறி எந்த திசையின் பக்கம் செல்வது? என்று வழி தெரியாமல் திகைத்து நிற்கும் இக்காலச் சூழலில் முஸ்லிம் லீகின் தியாகத் தழும்புகளையும், சத்திய முழக்கங்களையும், நியாய நடைமுறைகளையும், எடுத்துச் சொல்லி இயக்கத்தின் வலிமையைப் பறைசாற்றும் கடமை உணர்வை நமது மூச்சாகக் கொள்ள வேண்டும் என்று புதிதாக உனக்குச் சொல்லத் தேவையில்லை; நினைவுபடுத்துதல் கடமை என்று எழுதிக் காட்டியிருக்கிறேன்.

இனிமேலும் தளர்ச்சி வேண்டாம் நமது செயல்பாட்டில்;

வளர்ச்சி வேண்டும் நமது இயக்கத்தில்;
முயற்சி வேண்டும் நமது குறிக்கோளில்;
உணர்ச்சி வேண்டும் நமது உத்வேகத்தில்.