Monday, October 4, 2010

அயோத்தி தீர்ப்பு: பேராசிரியர் காதர் மொகிதீன் அறிக்கை.

அயோத்தி தீர்ப்பு: பேராசிரியர் காதர் மொகிதீன் அறிக்கை.
அயோத்தி தீர்ப்பு சம்மந்தமாக இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளராரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கை:

30-09-2010 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியள வில் பாபரி மஸ்ஜித் - ராமஜென்மபூமி சம்பந்தப்பட்ட ஒரு சில வழக்குகளின் தீர்ப்பை அலகாபாத்தில் உள்ள உயர்நீதிமன்ற லக்னோ சிறப்பு மன்றம் வழங்கியுள்ளது.

1992 டிசம்பர் 6-இல் பாபரி மஸ்ஜிது என்று கூறப்பட்டு வந்த கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது. அதனால் நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் மூண்டன; மக்கள் மாண்டனர்; அரசுகளின் போக்குகளும் - நோக்குகளும் நாட்டு மக்களுக்கு வெளிச்சமாயின. அன்றிலிருந்து நேற்றுவரை டிசம்பர் 6 ஒரு சரித்திர சம்பவ நாளாக அனுசரிக்கப்ட்டு வநதுள்ளது.

இனி, அந்த நாள் நினைவில் இருந்து மறைந்து 30-09-2010-ஆம் நாள் பற்றி பேசும்படியான ஒரு தீர்ப்பை நாடு பெற்றிருக்கிறது. மூன்று நீதிபதிகளில் இருவர் கருத்தையும், மூன்றாவது நீதிபதியின் ஒரு சில கருத்தையும் இணைத்துப் பார்க்கும் போது, அயோத்தி பிரச்சினைக்கு அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது தீர்ப்பு என்று கூறுவதைவிட, சிலரின் நம்பிக்கையை நிலைநாட்டும் நீதிமன்ற அறிவிப்பு என்பதே பொருத்தமானதாக அமையும் எனலாம்.

இந்தத் தீர்ப்பை - அறிவிப்பை, வழக்குத் தொடுத்தவர் கள் முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள் எனில், அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் கருத்துக் கூறுவது தேவையற்றதாகி விடும்.

வழக்குத் தொடுத்தவர்கள், வந்த தீர்ப்பை முழுமையாக ஏற்க இயலாத நிலை ஏற்படும் போது, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் அதில் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யப்படும் போது, அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் எது கூறினாலும் அதனால் நீதிமன்றத் தீர்ப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்து விட முடியாது.

இந்த எதார்த்த நிலைமையைச் சரியாகப் புரிந்து 1989 முதலே இந்த அயோத்தி விவகாரம் பற்றிய ஒரு தெளிவான - தீர்க்கமான - தூரநோக்குடன் ஆன அணுகுமுறையை வகுத்தளித்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கே உண்டு.

பாபரி மஸ்ஜித் விவகாரம், ராமஜென்ம பூமி பிரச்சினை என்று மாற்றப்பட்டு மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, ஒரு மதப் பிரச்சினை யாகவும், பின்னர் இந்து - முஸ்லிம் பிரச்சினையாகவும் படிப்படியாக வளர்க்கப்பட்டு, கலவரங்களுக்கு வழி காட்டப்பட்டு வந்த நேரத்தில் முஜாஹிதே மில்லத் ஜி.எம். பனாத்வாலா கூறினார்:

``பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி பிரச்சினையை கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டும்; ரோட்டில் தீர்க்க முடியாது. ரோட்டுக்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்கிறவர்கள் நாட்டுக்கு நன்மை செய்ய வில்லை; முஸ்லிம் சமுதாயத்துக்கும் நலன் கருத வில்லை’’ என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்தார் பனாத்வாலா.

அன்றிலிருந்து இன்றுவரை அவர் வகுத்தளித்த வழியைப் பின்பற்றியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது கருத்தைத் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளது.

இன்னும் ஒருபடி மேலே சென்று, அவர் கூறினார்:

``பாபரி மஸ்ஜிது - ராமஜென்ம பூமி சம்பந்தப்பட்ட வழக்குகள் பல கோர்ட்டுகளில் 88 உள்ளன. எல்லா வழக்குகளையும் ஒருசேர, உச்சநீதிமன்றத்தில் கொண்டு செல்லப்பட்டு, அனைத்து வழக்குகளையும் ஒருசேர விசாரித்துத் தீர்ப்பு வழங்கட்டும். அந்தத் தீர்ப்பு எதுவா னாலும் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல. நாட்டில் உள்ள சமுதாயங்கள் அனைத்துமே அந்தத் தீர்ப்பை ஏற்றாக வேண்டும். இந்த நிலையை உருவாக்க வேண்டு மானால் இந்திய அரசு அரசியல் சட்டத்தில் உள்ள 143(2) பிரிவின்படி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்’’ என்றெல்லாம் விளக்கம் அளித்தார்.

இன்றைக்கு தீர்ப்பு பற்றிப் பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும் கூறிவரும் கருத்தைப் படிக்கும் போது, பனாத்வாலா எத்தகைய தூர நோக்குடையவராகத் திகழ்ந்துள்ளார் என்பதை உணர முடிகிறது. நீதிமன்றத் தீர்ப்பை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று இப் பொழுது எல்லோருமே பேசுகின்றனர்.

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிக் கூறிய தவான் என்னும் அறிஞர், இது நாட்டுப்புறப் பஞ்சாயத் தார் அளித்துள்ள தீர்ப்பு போன்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

எது எப்படி கூறப்பட்டாலும் நீதிமன்றம் கூறுவது தான் ஏற்கப்பட வேண்டிய ஒன்றாகி விடுகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து எல்லாத் தரப்பினரும் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்தும் நீதிமன்ற முயற்சிதான் இந்தத் தீர்ப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருப்தி ஆகிறார்களா? இல்லையா? என்பது போகப் போகத் தெரியும்.

ஆனால், ஒரு பெரும் உண்மை எதுவெனில், இந்திய நாட்டு மக்கள் இந்தத் தீர்ப்பால் எவ்வித ஆர்ப்பாட்டம் - போர்ப்பாட்டமும் நிகழவில்லை என்பதை உணர்ந்து திருப்தி அடைந்துள்ளனர் என்பதே.

நாட்டு மக்கள் மத்தியில் அமைதியும், சுமூகமும், நட்பும், நேசமும், நல்லிணக்கமும் ஓங்குவதற்கு எல்லோரும் உறுதி ஏற்க வேண்டும் என்பதே இந்தத் தீர்ப்பின் தாக்கமாகி யிருக்கிறது.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.