Friday, December 12, 2008

கட்டுரை: மலேகானும், மக்கள் தீர்ப்பும்! -வெ.ஜீவகிரிதரன்

கட்டுரை: மலேகானும், மக்கள் தீர்ப்பும்! -வெ.ஜீவகிரிதரன்


http://www.muslimleaguetn.com/news.asp?id=452


ஐந்து மாநில சட்டமன்றங்களின் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் அரசியல் தளத்தில் பல்வேறு உணர்வுகளை - அதிர்ச்சி, ஆனந்தம், எமாற்றம், வெற்றி, தோல்வி - என அனைத்து உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. டெல்லி சட்டமன்றத்தை கைப்பற்றுவது, பாராளுமன்றத்தையே கைப்பற்றுவது போல் மிகவும் பெருமைக்குரிய ஒன்று. வழக்கமாக ஆளும் கட்சிக்கு எதிராகவே வாக்குகள் பதிவாகும். ஆனால் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் கட்சியையே மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மக்களின் உணர்வுகளை தெளிவாக காட்டுகிறது. டெல்லி மட்டுமல்லாமல் ராஜஸ்தான் சட்டமன்றத்தை பா.ஜ.க-விடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியிருப்பதுதான் சங்பரி வாரங்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியாகும்.

கடந்த தேர்தலில் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 56 இடங்களை மட்டுமே பெற்ற காங்கிரஸ் இம்முறை 96 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியப்பிரதேசத்திலும் 2003 - தேர்தலில் 38 இடங்களை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஏறக்குறைய இருமடங்காக 71 இடங்களை கைப்பற்றியுள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் கடந்த முறை 37 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் இம்முறை ஒன்று கூடுதலாகி 38 இடங்களை கைப்பற்றியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் 32 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலேறுகிறது.

டெல்லி மற்றும் மிசோரம் தவிர மற்ற மாநிலங்கள் சென்ற முறை பா.ஜ.க.வின் ஆளுகையில் இருந்தவை. இவற்றில் மத்தியப்பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அம்மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வாக்குகளின் சதவீதம் மிகவும் குறைந்துள்ளது. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 31 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. இழந்துள்ளது கவனிக்கத்தக்க ஒரு மாற்றம். வெற்றி பெற்றுவிடலாம் என்ற நப்பாசையுடன் இருந்த பா.ஜ.க. 42 சட்டமன்ற தொகுதிகளை இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது.

இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க. முன்னிறுத்தியது நாடெங்கும் நடக்கும் தீவிரவாத - பயங்கரவாத தாக்குதல்களைத்தான். பயங்கரவாத செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள்தான் காரணம் என்றும், காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஓட்டு வங்கியை காப்பாற்றிக் கொள்வதற்காக தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை திறம்பட செய்யவில்லை என்றும், பொடா போன்ற சட்டங்களை மீண்டும் கடுமையான சட்ட ஷரத்துகளோடு கொண்டு வந்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் வேரறுக்க பா.ஜ.க-வால் மட்டுமே முடியுமென்றும் பசப்பியது. காங்கிரஸ் கட்சி கையாலாகாத கட்சி என்றும், தேச பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கட்சிக்கு கவலையே இல்லையென்றும், பா.ஜ.க. மட்டுமே தேச நலனைப் பற்றி சிந்திக்கும் - பாடுபடும் தேசபக்தி மிக்க கட்சி என்றும் தம்பட்டமடித்தது.

ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் இந்த பசப்பு வார்த்தை காரர்களுக்கு புரியவைத்துவிட்டது. படுதோல்வி கண்ட ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜேயின் வார்த்தைகளில் கூறுவதென்றால், ~~மக்கள் எப்போதுமே அறிவாளிகள். அவர்களின் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களைத்தான் அறிவாளிகள் என்கிறார். அப்படியெனில் பா.ஜ.க-விற்கு வாக்களித்த வர்களை முட்டாள்கள் என சொல்லாமல் சொல்கிறாரா?

இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் தீவிரவாத - பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி மக்களைக் கவரவில்லை. காரணம், மலேகான் குண்டுவெடிப்பு சதிகளில் பா.ஜ.க.வின் நடவடிக்கை - அதன் தேசபக்த முகமூடியைக் கிழித்து, அதன் பயங்கரமான பாசிச முகத்தை - ரத்த வெறி கொண்ட சங்பரிவார முகத்தை - அழுகிப்போன இந்துத்துவா முகத்தை - மக்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது. மும்பை தாஜ் ஓட்டல் மீதான பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து நாடு முழுவதும் அனைத்து மக்களும், தங்களின் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை மறந்து இந்தியராக ஒன்றுபட்டு எழுந்து நின்று தீவிரவாதத்துக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்த நேரத்தில், மும்பைத் தாக்குதலில் இறந்தவர்களின் பிணங்களை வைத்து அரசியல் நடத்த முயன்றது பா.ஜ.க. அதன் மலிவான தேர்தல் உத்தியை மக்கள் இனம் கண்டு நிராகரித்துவிட்டனர் என்பதுதான் பா.ஜ.க.வுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி.

மலேகான் சதிகாரர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. வக்காலத்து வாங்கி பேசியதுடன், புலனாய்வு அமைப்பின் தலைவர் ஹேமந்த் கர்கரேவை மிகவும் இழிவாகப் பேசியதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பா.ஜ.க.வின் உளுத்துப் போன ~இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஊளையை, மலேகான் சதித்தனம் அடையாளம் காட்டி விட்து. பா.ஜ.க.வின் ஊசிப் போன தேசபக்தியை மக்கள் நம்பவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

இனி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க., புதிய முகங்களையும், புதிது புதிதாக முகமூடிகளையும் மாட்டிக்கொண்டு வரும்போது மக்கள் அதன் சவப்பெட்டிக்கு கடைசி ஆணியை அறைய தயாராகிவிடுவார்கள்.

- வெ. ஜீவகிரிதரன்
மாநில அமைப்பாளர், வழக்கறிஞர் அணி,
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்