காயல்பட்டணத்தில் நடந்த மாநில பொதுக்குழுக் கூட்ட தீர்மானங்கள்!
http://www.muslimleaguetn.com/news.asp
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக்குழுக் கூட்டம், 27.12.2008 சனிக்கிழமை காலை 11 மணியளவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நடைபெற்றது.
துவக்கமாக மவ்லவீ தளபதி ஷஃபீக்குர்ரஹ்மான் கிராஅத் ஓதினார்.
காயல்பட்டணத்தைச் சார்ந்த ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், நஹ்வி எம்.எம்.முத்துவாப்பா ஆகியோர் அரபி கீதம் பாடினர்.
தொடர்ந்து தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரையாற்றினார். உரையின் துவக்கமாக, அண்மையில் மறைந்த முஸ்லிம் லீக் முக்கியஸ்தர்களின் பிழைபொறுப்புக்காக துஆ ஓதப்பட்டது. தளபதி ஷஃபீக்குர் ரஹ்மான் துஆ ஓதினார்.
பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:
அரசியல் தீர்மானம் 1 - மும்பை தாக்குதல்:-
மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோழைத்தனமான இந்த தாக்குதலில் அநியாயமாக 184 பேர் உயிரிழந்தனர். இவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை உணர்த்துகிறோம்.
உயிரிழந்தவர்களில் 44 பேர் முஸ்லிம்கள் என்பதிலிருந்து தீவிரவாதத்திற்கு மதச்சாயம் பூசக்கூடாது என்ற உண்மை நிரூபணமாகியுள்ளது.
மும்பை சம்பவம் இந்திய மக்களை ஒன்றுபடச் செய்துள்ளது. இது தீவிரவாதிகளுக்கு கிடைத்த மாபெரும் தோல்வி.
தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் அதனை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்களனைவரும் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு தனது வேண்டுகோளை வெளிப்படுத்துகிறது.
தீர்மானம் 2 - மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - ஹேமந்த் கர்கரே மரணம்:-
நாட்டில் எங்கே வெடிகுண்டு சம்பவங்கள் நடந்தாலும், அவற்றுக்கெல்லாம் முஸ்லிம்களே காரணம் என பிரச்சாரம் செய்யப்பட்டது.
மாலேகான், அஜ்மீர், ஹைதராபாத் குண்டுவெடிப்பு சம்பவங்கள், டெல்லி ஜாமிஆ நகர் போலி என்கவுண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் முஸ்லிம்களின் மனவருத்தத்தைப் புரிந்துகொண்டு உண்மையைக் கண்டறிய நேர்மையான – முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் வைக்கப்பட்டது.
அதன் தேசிய தலைவர் மாண்புமிகு இ.அஹமது, தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் ஆகியோர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் திருமதி சோனியாக காந்தியை சந்தித்து முறையிட்டனர். பாரதப் பிரதமரிடம் இதுபற்றி பேசி, உடனடி நடவடிக்கை எடுப்பதாக Nசுhனியாவும் உறுதியளித்தார்.
இதன்பின், மராட்டிய மாநில தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே தலைமையில் முறையான விசாரணை நடைபெற்றது.
மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சாத்வி பிரக்யாசிங் தாகூர் என்ற இந்து பெண் துறவி, தயானந்த பாண்டே என்ற மடாதிபதி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளைச் சார்ந்தவர்களும்,
அபிநவ் பாரத், பஜ்ரங்தள், வி.எச்.பி. உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளும், உபாத்யாயா போன்ற ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும், ஸ்ரீகாந்த பிரசாத் புரோகித் போன்ற ராணுவ லெப்டினெண்ட் கர்னல்களும் கைது செய்யப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகளுக்கும், தலைமை அதிகாரி கர்கரே-க்கும் கொலை மிரட்டல் வந்தது.
மலேகான் குண்டுவெடிப்பு உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்த நிலையில், மும்பை தீவிரவாத சம்பவத்தில் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டுவிட்டார்.
அவரது மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. இந்தியர்கள் அனைவரின் இதயங்களில் இடம்பெற்றுவிட்ட அவரது தியாகத்தைப் போற்றிப் புகழ்கிறோம். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்துகிறோம்.
ஹேமந்த் கர்கரே மரணத்தோடு மலேகான் குண்டுவெடிப்பு விசாரணை கிடப்பிற்கு போய்விடக் கூடாது. தகுதியானவர்கள் கர்கரேயின் வழியைப் பின்தொடர்ந்து, விசாரணையை முடுக்கிவிட்டு, அதிலுள்ள முழு உண்மைகளையும் அம்பலப்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டும். அநியாயமாக ஒரு சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய மற்றும் மராட்டிய மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 3 - தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு:-
நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் லட்சியம்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட, பல்வேறு இயக்கங்கள் அரசுக்குக் கோரிக்கை எழுப்பி வந்துள்ளன.
அண்மையில் தமிழக முதல்வர் கலைஞர், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்@ அதற்கு முன்னோட்டமாக புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது@ மதுக்கடைகளின் விற்பனை நேரமும் ஒரு மணி நேரம் குறைக்கப்படும் என அறிவிப்புச் செய்துள்ளார். இதனை இப்பொதுக்குழு வரவேற்று, முதல்வர் கலைஞர் அவர்களைப் பாராட்டுவதோடு ஆட்சேபனைக்குரிய வகையில் பள்ளி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை அகற்ற உத்தரவிடவும் வேண்டுகோள் விடுக்கிறது.
தீர்மானம் 4 - திருமங்கலம் இடைத்தேர்தல்:-
நடைபெறவுள்ள திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றிபெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
டாக்டர் கலைஞர் தலைமையிலான நல்லாட்சி, அனைத்து தரப்பு மக்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற அரசாக உள்ளது.
இந்த நல்ல சேவைகளுக்கு நற்சான்று தருகின்ற வகையில் அமையப் போகின்ற திருமங்கலம் இடைத்தேர்தல் தி.மு.க. தலைமையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு நல்ல அடித்தளத்தை அமைத்துத் தரும் என்ற நம்பிக்கை உண்டு.
இத்தேர்தலில் திரு.மு.க.அழகிரி தலைமையிலான தேர்தல் பணிக்குழுவின் வழிகாட்டுதலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பம்பரமாகச் சுழன்று தேர்தல் பணி செய்ய இப்பொதுக்குழு வேண்டுகிறது.
இயக்கத் தீர்மானம் 5 - முஸ்லிம் லீக் மாநாடுகள்:-
இந்திய முஸ்லிம்களின் அரசியல் பேரியக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய முஸ்லிம்களை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் முஸ்லிம் லீக் அமைப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தந்த மாநிலங்களில் முஸ்லிம்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த மாநாடுகள் நடைபெறுகின்றன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய மாநாடு உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் 2009 பிப்ரவரி 21,22இல் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து பெருமளவில் பங்கேற்க வேண்டும். இதற்காக தனி ரயில் ஏற்பாடு செய்யப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள் அனைத்தும் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மூன்று மண்டல மாநாடுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்மண்டல மாநாடு ராமநாதபுரத்தில் ஜனவரி 24ஆம் தேதியும், மத்திய மண்டல மாநாடு தஞ்சாவூரில் பிப்ரவரி 14ஆம் தேதியும், வடமண்டல மாநாடு மார்ச் 14இல் வேலூரிலும் நடைபெறுகிறது.
இந்த மண்டல மாநாடுகள் பற்றி அனைத்து ஜமாஅத் மற்றும் ஊர்களிலும் பிரச்சாரம் செய்ய எல்லா ஊர்களிலும் முஸ்லிம் லீக் கிளைகளை அமைக்க வேண்டும்.
இஸ்லாத்தின் சிறப்புகளில் ஒன்றான மஹல்லா ஜமாஅத் கண்ணியத்தைக் காப்பாற்றவும், அதன் ஒற்றுமையைப் பேணவும், உரிமைகளை நிலைநாட்டவும் தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மஹல்லாக்களும், பள்ளிவாசல் இமாம்களும், முத்தவல்லிகளும், அறக்கட்டளை உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளும் பங்கேற்கின்ற மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டை, வரும் ஜனவரி 31ஆம் தேதி தலைநகர் சென்னையில் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் அனைத்து மஹல்லாக்களும், முத்தவல்லிகளும், இமாம்களும் பங்கேற்கச் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென அனைத்து மாவட்ட பிரைமரி அமைப்புகளையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 5 - வக்ஃப் வாரியத் தலைமை:-
தமிழ்நாட்டிலுள்ள 60 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்கள்.
இந்த கொள்கை மற்றும் நடைமுறைகளில் நம்பிக்கை இல்லாத ஒருவர் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைமைப் பொறுப்பில் இருப்பதால், ஜமாஅத் மற்றும் பள்ளிகளில் தேவையற்ற குழப்பங்களும், வீண் பிரச்சினைகளும் ஏற்படுத்துவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
இந்தப் போக்கு மாறவில்லையெனில், வக்ஃப் வாரிய தலைவர் பதவியிலிருந்து தற்போதைய தலைவரை மாற்றக் கோரி முஸ்லிம் லீக் போராட்டத்தில் இறங்கும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.
தீர்மானம் 6 - காயிதெ மில்லத் பேரவை:-
கடல் கடந்த நாடுகளில் வாழும் இந்திய முஸ்லிம்களை ஒருங்கிணைத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலப்படுத்த, இந்திய முஸ்லிம்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் காயிதெ மில்லத் பேரவைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் காயிதெ மில்லத் பேரவை மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. தற்போது சவூதி அரேபியாவில் அமைக்கப்பட்டுள்ளது. பேங்காக், கத்தார், குவைத் நாடுகளில் அமைப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை எல்லா நாடுகளிலும் அமைக்கவும், அந்த அமைப்புகளை ஒருங்கிணைக்கவும், அவற்றின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு முற்றிலும் கட்டுப்பட்ட அமைப்பாக இதைச் செயல்படச் செய்யும் காயிதெ மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவாக அமீரக காயிதெ மில்லத் பேரவை நிர்வாகமும், அந்தக் குழுவின் தலைவராக முத்துப்பேட்டை எம்.அப்துர்ரஹ்மான் அவர்களும் செயல்பட இப்பொதுக்குழு அங்கீகாரமளிக்கிறது.
இயக்க தீர்மானம் 7:-
ஒன்றாக இருந்த கோவை மாவட்டம் பிரிக்கப்பட்டு, புதிய திருப்பூர் மாவட்டத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. எனவே, ஒன்றாக இருந்த கோவை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கோவை, திருப்பூர் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திற்கு திருப்பூர் பி.எஸ்.ஹம்ஸா அவர்களும், கோவை மாவட்டத்திற்கு மேட்டுப்பாளையம் முகம்மது குட்டி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டும், கோவை நகரத்தில் உள்ள மாவட்ட முஸ்லிம் லீக் கட்டிடத்தை இரு மாவட்டங்களும் பிரித்துக் கொள்வதென்றும் 24.12.2008 அன்று நடைபெற்ற கோவை மாவட்ட செயற்குழு எடுத்த முடிவை இப்பொதுக்குழு அங்கீகரிக்கிறது.
தீர்மானம் 8 - கிழக்கு கடற்கரை சாலை:-
தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், தொலைதூரத்திலுள்ள இப்பகுதி மக்களின் நலனுக்காகவும், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஏற்கனவே வாக்களித்த ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை காயல்பட்டணம் கடற்கரை வழியிலான கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தர இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 9 - புதிய ரயில்பாதை திட்டம்:-
கன்னியாகுமரி - தூத்துக்குடியை கடற்கரை மார்க்கமாக இணைக்கும் வகையில் புதிய ரயில்பாதை திட்டத்தை அமைத்துத் தருமாறு மத்திய ரயில்வே அமைச்சகத்தை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.