Thursday, December 25, 2008

காயல்பட்டணத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் மற்றும் காயிதெமில்லத் காலனி திறப்புவிழா!

காயல்பட்டணத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் மற்றும் காயிதெமில்லத் காலனி திறப்புவிழா!



தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழுக் கூட்டம் வரும் 27.12.2008 அன்று காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வரும் ஜனவரி மாதத்தில், ராமநாதபுரத்தில் தென்மண்டல மாநாடும், சென்னையில், தமிழகம் தழுவிய அளவில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடும் நடைபெறவுள்ளன.

இம்மாநாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதற்காக காயல்பட்டணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிளை சார்பில் வரும் 26.12.2008 வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு காயல்பட்டணம் வள்ளல் சீதக்காதி திடலில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகரத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் தலைமையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில் நகர, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்கவும், உரையாற்றவும் உள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. மற்றும் தமிழ்நாடு மாநில செயலாளர் டாக்டர் ஹக்கீம் சையத் சத்தார், பொருளாளர் வடக்குகோட்டையார், அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.

இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரச் செயலாளர் ஹாஜி பி.எம்.எஸ்.அமானுல்லாஹ் தலைமையில், மாவட்ட - நகர நிர்வாகிகள், மாணவர் அணியினர் செய்து வருகின்றனர்.

முன்னதாக, 26.12.2008 அன்று மாலை 5 மணியளவில் காயல்பட்டணம் சீதக்காதி நகரில் அமைந்துள்ள, காயல்பட்டணம் முஸ்லிம் லீகிற்குச் சொந்தமான காயிதெமில்லத் காலனி மற்றும் காயல்பட்டணத்தின் முதல் பட்டதாரி பி.ஏ.காக்கா, மாநில முன்னாள் பொருளாளர் எஸ்.எம்.கே.மஹ்மூது லெப்பை ஆகியோர் பெயரில் அமைந்துள்ள மன்ஜில்கள் திறப்பு மற்றும் தியாகி பி.ஹெச்.எம்.அப்துல் காதிர் பெயரில் அமையவுள்ள மன்ஜில் ஆகியவற்றை பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. திறந்து வைக்கிறார்.