Tuesday, September 28, 2010

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்! -கே.எம்.கே..

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்! -கே.எம்.கே..


பாபரி மஸ்ஜித் பிரச்சினை இன்று நேற்றல்ல, நூறாண்டுகளுக்கு மேலாகவே இருந்து வந்துள்ளது.

1992 டிசம்பர் 6-க்குப் பிறகு முந்தைய வழக்குகள் - வாதங்கள் - வரலாறுகள் யாவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பாபரி மஸ்ஜிது இடிப்பு விவகாரமே புதிய வரலாறாகவும், புதுப்புது பூகம்பங்கள் தோற்றுவிக்கும் பூதமாகவும் மாறி விட்டது. பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி விவகாரம் என்றாலே நாட்டு மக்கள் உள்ளுக்குள் வெறுப்படை கிறார்கள். இதைப் பற்றிப் பேசினாலே நகரப் புறத்தவர் மட்டுமல்ல, இன்றைக்கு நாட்டுப்புறத்து மக்களும் எரிச்சல்படுகிறார்கள்.

கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு வழக்கை ரோட்டுக்கு கொண்டு வந்து, மக்களை அவதிக்கு உள்ளாக்கும் சக்திகளை நாட்டு மக்கள் வெறுத்து ஒதுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பண்பட்ட இந்த பாரத நாட்டு மக்களில் பெரும்பாலான நல்லுள்ளங்கள், நீதிமன்ற வழக்குகள் நீதிமன்ற வளாகத்துக்குள் பேசப்படவும் விவாதிக்கப் படவும் வேண்டுமே தவிர, அவற்றைப் பற்றி பொது மக்கள் மத்தியில் விவாதிப்பது கூடத் தேவையற்ற ஒன்று என்றே கருதுகின்றன.

இத்தகைய உணர்வும், போக்கும், அணுகுமுறையும் எல்லா மதங்களிலும் உள்ள நன்மக்களிடம் தொடர்ந்து நிலவி வருகிறது. ஆனால், தங்களின் சுயநலத்துக்காக ஏதாவது ஒரு பிரச்சினை கிடைக்காதா? அதை ஊதிப் பெரிதாக்கி மக்கள் மத்தியில் விரோத குரோதங்களை உருவாக்க முடியாதா? என்று காத்துக் கொண்டிருக்கும் ஷைத்தானிய சக்திகள் எல்லா சமுதாயங்களிலும் இன்றைக்கு உருவாகியுள்ளன.

அவர்களின் அத்துமீறிய செயல்களுக்கு நாளை வரவிருக்கும் பாபரி மஸ்ஜிது தீர்ப்பு ஒரு காரணமாகி விடக் கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன. முன்னெச்சரிக்கையாக அனைத்து வழிகளிலும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

நாட்டு மக்கள் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக் கும் முழு ஒத்துழைப்பு தருவது கட்டாயக் கடமையாகும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொறுத்தவரை யில் 1989-ம் ஆண்டு முதல் பாபரி மஸ்ஜிது பிரச்சினை குறித்துத் தெரிவித்து வரும் கருத்து இதுதான்.

பாபரி மஸ்ஜித் விவகாரம் சிவில் வழக்கு சம்பந்தப்பட்டது, சொத்துரிமை சம்பந்தப்பட்டது. இந்த வழக்குகளை சமுதாயங்களுக்கு இடையிலான வழக்கு என்றோ, சமயங்களுக்கு இடையிலான வழக்கு என்றோ கருதுவது மாபெரிய தவறாகும். வழக்குகள் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளன. நீதிமன்றத் தீர்ப்பு எதுவோ அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தீர்ப்பை ஏற்க மறுப்பவர்கள் நீதிமன்றம் ஏன் சென்றார்கள்? ஆக, சிவில் வழக்கு சம்பந்தப்பட்ட கோர்ட்டு தீர்ப்பை அனைத்து தரப்பாரையும் கட்டுப் படுத்தும் தீர்ப்பாகும் என மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

தீர்ப்பை எதிர்த்தோ, ஆதரித்தோ ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டங்கள் எதுவும் பிரச்சினைனைத் தீர்க்காது. கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் ஏற்போம் - அமைதி காப்போம் - இவ்வாறுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கூறி வந்துள்ளது. அதைத்தான் இப்பொழுதும் கூறுகிறோம்.

கோர்ட்டு தீர்ப்பை மதிப்போம், அனைவரும் அந்தத் தீர்ப்பை ஏற்க அரசுகளின் முயற்சிக்கு ஒத்துழைப்போம்.

தமிழகம் என்றும் அமைதிப் பூங்கா என்பதை ஒவ்வொரு தருணத்திலும் நிரூபிப்போம்.

செப்டம்பர் 30 - அருமையான தருணம். நாட்டுக்குப் பெருமை சேர்க்கக் கிடைத்துள்ள நல்ல தருணம்.

அமைதி காப்போம்! அன்புமலர் பூக்கச் செய்வோம்!

Friday, September 24, 2010

வடக்கு மாங்குடியில் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம்

வடக்கு மாங்குடியில் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம்

தஞ்சை மாவட்டம் வஞ்சுவழி & வடக்கு மாங்குடி ஜும்ஆ பள்ளிவாசல் முன்புறம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொள்கை விளக்க கூட்டம் 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

சிறப்பு விருந்தினர்களாக வேலூர் இந்திய யூனியன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி G.M.ஹாசிம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்

முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

தகவல் உதவி :

வடக்கு மாங்குடி பி. சகதுல்லா

shahadullah@yahoo.com

மருந்து தான் என்ன ?

மருந்து தான் என்ன ?
(திட்டச்சேரி கவிஞர் அன்வர் எம்.ஏ.,
தாய்ச்சபை இலக்கிய அணி, நாகப்பட்டினம்)
எந்திர விந்தைக ளாயிரம் கற்றோம்
என்னென்ன வோபல புதுமைகள் பெற்றோம்..
சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்
சங்கதி பேச வழிகளைத் தேடும்
அந்தமில் லாபல சக்திகள் உற்றும்
அடிதடி சண்டையை விட்டிட மட்டும்
தந்திரம் ஒன்று படித்திட வில்லை
தாய்வழிச் சோதரர் தவிப்பது உண்மை !

ஒன்றெனக் காணும் உயரிய மனமும்
உயிர் நலன் பேணும் ஒழுக்கக் குணமும்
இன்றுநேற் றல்ல இப்புவி தொடங்கும்
இனியநாள் முதலாய் இருக்கலா யிற்று
பன்றியின் குணமும் பருந்துப் பார்வையும்
பாசியாய்ப் படிந்து உள்மனத் துறைந்து
நின்றிடும் நிலையை நினைக்கும் தோறும்
நிம்மதி யழிந்த நிலைதான் மிச்சம் !

இத்தனைத் தீமைக்கும் ஏற்ற மருந்து
இஸ்லாம் தந்த இனிய மருந்து
உத்தம நபிகள் உவக்கும் மருந்து
உலகினில் துன்பம் ஒழிக்கும் மருந்து
சத்தியம் சாந்தம் இரண்டு சரக்கைச்
சமனிட அன்பெனும் தேனில் குழைத்துப்
பத்தியம் தெய்வ நினைப்போடு உண்டால்
பாருக்குள் போருக்கும் பங்கிலை கண்டாய் !

( மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர் ஹிஜ்ரி 1431 – 2010 லிருந்து )

Wednesday, September 22, 2010

கோடானு கோடி கரங்கள் உயரட்டும்

கோடானு கோடி கரங்கள் உயரட்டும்
( சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது )
ஓர் அற்புதமான பயிற்சிக்காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ரமலான் மாதத்தின் மிகப் புனித நாட்கள் ஒவ்வொன்றாக நகர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை அடிவானத்தில் தன் ஒளிக்கீற்றைக் காட்ட தலைப்பட்ட உடன் அன்று பெருநாள் என்ற மகிழ்ச்சி பூரிப்பில் திழைத்து மகிழ்ந்து அந்த மகிழ்வை உற்றார் உறவினரோடும் பகிர்ந்து கொண்டாடுவது உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் வாடிக்கை.
இல்லாமையால் பசித்து இருப்பது என்பது வேறு – இருந்தும் அல்லாஹ்வுக்காக அவன் கட்டளை என்பதற்காக உணவையும் நீர் அருந்துவதையும் கூட ஒதுக்கி வைத்துவிட்டு பசித்திருப்பதென்பது அறவழி பண்பாட்டில் வந்த ஓர் அற்புதமான பயிற்சியாகும்.
ரமலான் மாதத்தில் இயற்கையான வாழ்க்கை முறையிலேயே கூட அழுத்தமான ஓர் மாற்றம் ஏற்படுகிறது.
உழைப்பினை நல்கி வருவாயைத் தேடி உண்டு மகிழ்ந்திட பகலையும், உறங்கி களைப்பாறி இன்பந் துய்த்திட இரவையும் இயற்கையாக பெற்றுள்ள முஸ்லிம்கள் பகலை பசித்திருக்கவும் இரவை விழித்திருந்து அவனை வணங்கி இசைப்பாடி துதித்து கழித்திருக்கவுமாக மாற்றிக் கொள்கிறார்கள்.
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழிக்காத இடும்பை கூர் வயிற்றை ஒரு மாத காலம் பகற்போதுகளில் பட்டினி கிடக்கச் செய்கிறார்கள். இது ஓர் அற்புத சாதனை அல்லவா ?
இஸ்லாமிய நெறியில் இந்தப் பயிற்சி இன்றியமையாத ஒரு கடமையானாலும், வாழும் மனித சமுதாயத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களாக வறுமைக் கோட்டின் கீழே வாழுபவர்களின் உணர்வுகளையும், வேதனைகளையும் புரிந்து, அவர்கள் மீது கழி விரக்கம் கொண்டு, தம்மிடம் உள்ளதைத் தேவைப்பட்ட மற்றவர் களுக்கும் பகிர்ந்து உண்ணும் பண்பை இந்தக் கடமை ஏற்படுத்துகிறது.
எனவே இந்த அறநெறிப் பண்பு உலகெலாம் தழைக்க மற்றவர்களும் இந்த பயிற்சியை கடைபிடிக்க வேண்டுமென்று சொல்லும் அதிகாரம் யாருக்காவது கிடைக்குமானால், அது வரவேற்கத்தக்கதே .
நோன்புப் பெருநாள் ஒரு கடுமையான பயிற்சியை, தானே மனமுவந்து – அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக மேற்கொண்ட விசுவாசிகளுக்கு – அற்புத சாதனையாளர்களுக்கு பெருங்கருணையாளனாகிய அல்லாஹ் வழங்கும் ஒரு சன்மானமாகும்.
மனிதர்களாக இருந்து கொண்டே அறவாழ்வின் அடிப்படையில் புனிதர்களாகத் தம்மை உயர்த்திக் கொண்ட அந்தத் திருவாளர்கள் அடையும் சன்மானம், பெருநாளின் மகிழ்ச்சியில் உலக மக்களும் பங்கு கொள்கிறார்கள்.
நம்மிடம் ஆயுதம் ஏந்தும் கரங்கள் உண்டு. ஆனாலும், அப்பாவி மக்களுக்கு ஆதரவாக இயங்கும் ஆயுதங்கள் இல்லை.
எனவே, நம்முடைய கோடானு கோடி கரங்களை அந்தக் கருணையாளனின் நினைவில் உயர்த்துவோம்.
“இறைவனே ! உன்னுடைய வலிமை யாராலும் தடுக்க முடியாதது. அந்த வலிமையால் கொடுமைகள் இழைக்கப்பட்ட அனைவருக்கும் உன்னுடைய கருணையால் – அபயம் தந்தருள்வாயாக ! கொடு மனம் கொண்ட கயவர்களால் சூழப்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பு நல்குவாயாக !
“உலகெங்கும் அமைதியை நிலை பெறச் செய்வாயாக ! சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மனிதர்களிடையே நிலை நாட்டுவாயாக ! உன்னுடைய அளப்பரிய கொடையாலே மனித சமுதாயம் செழித்து சுபிட்சமுடன் வாழச் செய்வாயாக.
“கருணை மிக்கவனே ! உன் கட்டளைக்கேற்ப நோன்பு நோற்ற புண்ணியவான்களின் சாதனையை முன்னிலைப்படுத்தி உன் திருத்தூதர் காட்டிச் சென்ற வழிமுறைக்கொப்ப இரவெல்லாம் உன்னைப் புகழ்ந்தேத்தி – வணங்கி, வாழ்த்திய அந்த மனிதப் புனிதர்களின் தவநிலையின் அடிப்படையில் உன்னிடம் உளந்திறந்து பணிவோடு பிரார்த்திக்கின்றோம். எங்கள் வேண்டுகோளை ஏற்றருள்வாயாக. ஆமீன் ! ஈத் முபாரக் !!
( நன்றி – ‘மணி விளக்கு’ ஜுலை 1982 )

( மணிச்சுடர் ரமலான் சிறப்பு மலர் 2010 ன் மறுபிரசுரத்திலிருந்து )

Saturday, September 18, 2010

கொலைக்களம் குவாண்டனாமோ!

கொலைக்களம் குவாண்டனாமோ!
- வெ. ஜீவகிரிதரன்


அமெரிக்க நாட்டின் பொருளாதார இதயமான நியூயார்க் நகரின் இரட்டை கோபுரங்கள் 2001 செப்டம்பர் 11-ல்தான் தகர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உலக அளவிலே ஹஹபயங்கரவாதத்திற்கு எதிரான போர்��-பிரகடணத்தை அமெரிக்கா அறிவித்து களத்தில் இறங்கியதை நாம் அறிவோம். ஆனால், எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் பேராசைக்கு இது இன்னொரு காரணம் மட்டுமே என்பதை வெளி உலகம் அறியாது.

அரபு நாடுகள் அனைத்தும் முஸ்லிம் நாடுகளாக இருப்பதால், முதலில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து-அவர்களை ஒடுக்குவதாக கூறி அந்நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து-அதன் பின் அங்குள்ள எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்கிறது அமெரிக்கா. ஈராக் பேரழிவு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி, அதன் மீது ஹஹபயங்கரவாதத்திற்கு எதிரான போர்�� தொடுத்து, அதிபர் சதாம் உசேனையும் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் அனைவரையும் கொன்றொழித்தது. ஆனால், பேரழிவு ஆயுதம் ஒன்றைக் கூட ஈராக் மண்ணில் இருந்து கைப்பற்றி உலகுக்கு காட்ட இயலவில்லை. இன்று ஈராக் என்ணெய் வளம் முழுவதும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.

இப்படியான ஆக்கிரமிப்புப் போர்களின் போது பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொல்வதுடன் பல நூறு பேரை கைதிகளாக பிடித்து, விசாரணை என்ற பெயரிலே கொடும் சித்ரவதை செய்வது அமெரிக்காவின் வாடிக்கை. ஈராக் மீதான ஆக்ரமிப்புப் போரின் போது ஈராக் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ஆயிரம் பேரை கைது செய்தது அமெரிக்க ராணுவம். அக்கைதிகளை அடைத்து வைக்க கியூபா நாட்டின் குவாண்டனாமோ வளைகுடாவில் சிறைச்சாலையையும் அமைத்தது. இது சிறைச்சாலையாக இல்லாமல் கொடும் சித்ரவதைச் சாலையாகவே இருந்தது. பல நூறு கைதிகள் இங்கு பிணமாக்கப்பட்டனர்.

இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நாள் முதல் 9.7.2004 வரையிலான மூன்று ஆண்டுகளில் மட்டுமே 24,000 கைதிகள் இந்த சிறையிலே விசாரணை என்ற பெயரிலே இது மனிதாபிமானமற்ற, மிருகத்தனமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது வெளி உலகின் குற்றச்சாட்டு அல்ல. அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலே உள் விசாரணை ஒன்றை நடத்தியது. இந்த மூன்று வருட காலங்களில் குவாண்டனாமோ சிறையில் பணி புரிந்த சுமார் 493-எப்.பி.ஐ. அதிகாரிகளுக்கு அதன் தலைமையகம் ஈமெயில் ஒன்றை அனுப்பியது. அதில் சிறைக் கைதிகளிடம் இராணுவ அதிகாரிகள் யாரேனும் வரம்புமீறி, அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பற்றி தெரியுமா? அப்படி ஏதும் நடந்திருந்தால் அதில் சம்பந்தப்பட் அதிகாரிகள் யார்? போன்ற விவரங்களை தலையகத்துக்கு தெரியப்படுத்துமாறு உத்தரவிட்டது. மொத்தம் 493 அதிகாரிகளில் 434பேர் இதற்கு பதிலனுப்பினர்.

தங்கள் பதிலில் தாங்கள் பணிபுரிந்த பொழுது சிறையில் நடந்த கொடுஞ் செயல்கள், சித்ரவதைகள், மேலும் அதைச் செய்த அதி காரிகளின் விவரங்கள் ஆகியவற்றை அளித்திருந்தனர். இச்செய்தி எப்.பிஐ. தலைமையகத்தால் டிசம்பர் 2004ல் அரசுக்கு அளிக்கப்பட்டது.

மனித உரிமை மீறல்கள், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த மீறல் போன்ற கொடுஞ் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டது அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பாலேயே வெளிப்பட்டதால், ஒரு உள் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு அமெரிக்க இராணுவம் தள்ளப்பட்டது. 2004-டிசம்பரில் தென் பிராந்திய கமாண்டர். பண்டஸ் ஜே.கிரட்டாக் இராணுவ புலன் விசாரணைக்கு உத்தரவிட்டார். பிரிகேடியர் ஜெனரல் ஜான். டி. பர்லோ விசாரணை

அதிகாரியாக நியமிக்கப்பட்டார். முதலில் 2 மாதம் விசாரணை நடத்திய ஜான். டி.பர்லோ, தன்னை விட மூத்த அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டிய நிலை இருப்பதை தலைமையகத்துக்கு தெரியப்படுத்தினார். அதனால் 28.2.2005 அன்று இந்த விசாரணைக் குழுவில் லெப்டினன்ட் ஜெனரல் ரேன்ட்ஸ் எம்.ஷ்மித் மற்றும் அமெரிக்க வான்படையின் தென்பிராந்திய கமாண்டர் டேவிட் மோன்தான் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த புலன் விசாரணைக்குழு 24.3.2005 வரை விசாரணை நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க தென் பிராந்திய இராணுவ அதிகாரிகள், 30க்கும் மேற்பட்ட எப்.பி.ஐ. அதிகாரிகள், ஜாய்ன்ட் டாஸ்க் போர்ஸ் எனப்படும் கூட்டு நடவடிக்கைப் படை பிரிவு 160,170 மற்றும் குவாண்டனாமோ அதிகாரிகள், அமெரிக்க இராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

விசாரணையின் போது பல்வேறு குற்றச் செயல்களில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்ட தகவல்கள் புற்றீசல்களாய் வெளிவந்தன. இந்த புதிய தகவல்களையும் சேர்த்து புலன் விசாரணை செய்யுமாறு 5.5.2005ல் இராணுவ தலைமையகம் மீண்டும் உத்தரவிட்டது.

சித்ரவதைகள்
இந்த புலன் விசாரணைக் குழு விசாரிக்க வேண்டியதாக கூறப்பட்ட ஒழுங்கீனங்கள் என்ன தெரியுமா? இராணுவ விதிகளிலே கூறப்பட்டுள்ள விசாரணை உத்திகளை மீறி வேறு வகையான உத்திகளை விசாரணையின் போது கையாண்டது என்பதுhன். அவை யாவை?

1. விசாரணைக் கைதிகளின் மீது இராணுவ நடவடிக்கையில் உபயோகப்படுத்தப்படும் நாய்களை ஏவி விட்டு பயங்கரமாக குரைக்க வைப்பது. கடிக்க விடுவது போல பயமுறுத்துவது (இந்த உத்தி 12.11.2002க்கு பிறகு அங்கீகரிக்கப்பட் உத்தியாக மாற்றப்பட்டது)

2. கைதிகள் குர்ஆனின் ஆயத்துகளை தொடர்ந்து முணுமுணுப்பதாகக் கூறி அவர்களின் வாய்களை சுற்றி ஒட்டும் நாடாவைக் கொண்டு இறுக்கிக் கட்டி வைத்தது.

3. கைதிகளை விசாரணை செய்யும் போது தான் இராணுவ அதிகாரி என்பதை மறைத்து, எப்.பி.ஐ. அதிகாரி எனப் பொய் சொல்லி அவர்களை மிரட்டியது.

4. எப்.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்ய விடாமல் இராணுவ அதிகாரிகள் தடுத்தது.

5. வக்கிரமான பாடல் இசைகளை பயங்கர சத்தத்துடன் நீண்ட நேரம் அலறச் செய்து கைதிகளை சித்ரவதை செய்தது.

6. ஒரு நாளைக்கு 18 முதல் 20மணி நேரம் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து 48 முதல் 54-நாட்கள் கைதிகளை தூங்கவே விடாமல் விசாரணை செய்தது. தொடர்ந்து 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க அனுமதிக்காதது. (இந்த உத்தி 2.12.2005க்கு பிறகு அங்கீகரிக்கப்பட்ட உத்தியாக மாற்றப்பட்டது).

7. தரையிலே சிறு வளையம் பொறுத்தி அதிலே கைதியின் இரு கைகளையும் மணிக் கட்டுவரை நுழைத்து பூட்டி விடுவது இதன் மூலம் எப்போதும் கைதி குறுகிய நிலையில் குனிந்தே இருக்க வேண்டும்.

8.அளவுக்கு அதிகமான வெப்பத்தையும், அளவுக்கு அதிகமான குளிரையும் மாறி மாறி கைதிகள் மேல் செலுத்தியது (2.12.2005க்கு பின்னர் இந்த உத்தி அங்கீகரிக்கப்பட்டுவிட்டது)

9. ஆண் கைதிகளின் தொடை மீது அமர்ந்து பெண் இராணுவ அதிகாரிகள் ஹஹலேப் டான்ஸ்�� எனப்படும் பாலியல் வக்கிர நடனம் ஆடியது.

10. பெண் இராணுவ அதிகாரி ஆண் கைதி முகத்தின் மீது மாதவிலக்கில் வெளிப்பட்ட இரத்தத்தை பூசியது (விசாரணையில் அது வெறும் சிவப்பு மைதான் என கூறப்பட்டது)-

11. கைதிகளிடமிருந்து குர்ஆன் நூலை பிடுங்கி எறிவது.

12. பெண் இராணுவ அதிகாரிகள் தங்களின் உடைகளைக் களைந்து விட்டு ஆண் கைதிகளின் உடலோடு உரசுவது, அவர்களின் தலை மயிரில் விரல்விட்டு கோதுவது, அவர்களின் மர்ம உறுப்புகளை தொடுவது போன்ற பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது. (இந்த உத்தி இராணுவ விசாரணையின்போது கைதியின் மன உறுதியை குலைக்கச் செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட உத்திதான் என விசாரணையின்போது விளக்கம் தரப்பட்டது).

13. கைதிகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை தராமல் சித்ரவை செய்தது.

14. குர்ஆனை தரையிலே கிடத்தி விட்டு அதன் மேல் ஏறி உட்கார சொல்வது.

15. கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்காக அவர்களின் குடும்பமே தற்போது சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொய் சொன்னது.

இவையல்லாம் கடுமையான உடல் ரீதியான சித்ரவதைகளுக்கும் மேலாக செய்யப்பட்ட மன ரீதியான சித்ரவதைகள்தான். உடல் ரீதியான சித்ரவதைகளுக்கு அளவே இல்லை.

அமெரிக்க இராணுவத்தின் புலன் விசாரணையின்போது கைதிகளிடம் கையாள வேண்டிய விசாரணை உத்திகளில், கைதிகளின் மன உறுதியைக் குலைப்பதற்கென சில உத்திகள் கையாளப்படுகின்றன. இராணுவ விதிகள் எப்.எம்.34-52 விதிகள் எனப்படும் அவை என்ன தெரியுமா?

1. ஆண் கைதிகளுக்கு பெண்களின் உள்ளாடைகளை மட்டும் அணிவிப்பது.

2. கைதியின் தாயும், சகோதரியும் விபச்சாரிகளாக மாறிவிட்டதாக பொய் தகவல் தருவது.

3. கைதி ஒரு ஓரின சேர்க்கையாளன் என முத்திரை குத்துவது. ஓரின சேர்க்கை மூலம் வன் புணர்ச்சிக்குள்ளாக்கப் போவதாக மிரட்டுவது.

4. நாய்க்கு கழுத்திலே கட்டும் பட்டையைப் போல கைதியின் கழுத்திலே கட்டி சிறு கயிறு அதிலே இணைத்து நாள் முழுவதும் நாயைப் போல அறையை சுற்றி, சுற்றி வரச் செய்வது.

5. வக்கிரமான பாடல்களை அலறவிட்டு அந்த இசைக்கு ஏற்ப விசாரணை அதிகாரியுடன் நடனமாட வேண்டும் என கொடுமைப் படுத்துவது.

6. கைதியை முழு நிர்வாணமாக்கி விட்டு பெண் அதிகாரிகளின் மத்தியிலே நிற்கச் செய்வது.

7. தொழுகை நடத்த முயலும் போது தடுப்பது.

8. கைதியில் தலை மீது அடிக்கடி நீரைக் கொட்டுவது.

இந்த உதிகளின் மூலம் ஒரு கைதி தொடர்ந்து 160 நாட்கள் தனிமைச் சிறையிலேயே, ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணி நேரம் விசாரிக்கப்பட்டதாக விசாரணைக் கோப்புகளில் இருந்ததை மேற்சொன்ன இராணுவ புலன் விசாரணைக் குழு காண முடிந்தது. அக்கிரமங்கள் மூடி மறைப்பு!

இந்த கொடும் செயல்கள் எல்லாம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், ஐ.நா.வின் ஜெனிவா ஒப்பந்த விதிகளை மீறுவதாகவும், மனித குல நாகரிகத்துக்கு எதிரானதாகவும் இருந்த போதும், விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு அத்துனை அக்கிரமங்களையும் மூடி மறைத்தது. கைதிகள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ன.

1. இராணுவ விதிகளில் அங்கீகரிக்கப்பட்ட விசாரணை உத்திகள்.

2. இராணுவ விதிகளால் பிற்பாடு அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட விசாரணை உத்திகள்.

3. அங்கீகரிக்கப்படாத விசாரணை உத்திகள்.

இவற்றில் பெரும்பான்மையான குற்றச்சாட்டுகள் முதல் இரண்டு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. மூன்றாவது வகை குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களை எச்சரித்து விட்டு விடலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டது.

சர்வதேச நெருக்கடி காரணமாக சமீபத்தில் குவாண்டனாமோ சிறையை படிப்படியாக மூடிவிடுவது எனவும், அங்குள்ள கைதிகளை அமெரிக்காவின் சாதாரண சிறைகளுக்கு மாற்றி விடுவது என்றும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

2002ம் ஆண்டு கனடா நாட்டைச் சேர்ந்த உமர் காதிர் என்ற 15-வயது சிறுவன் அல்-காயிதா அமைப்பை சேர்ந்தவன் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு குவாண்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டான்.

இன்றுவரை அச்சிறையின் அனைத்து சித்ரவதைகளையும் சந்தித்தும் உயிரோடு உள்ளான். அவன் மீதான வழக்கு விசாரணை 13.8.2010ல் தொடங்குவதாக அமெரிக்க ராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளது. விசாரிக்கப்போகும் நீதிபதிகள் யார் தெரியுமா? அதே கொடுங்கோல் இராணுவத்தின் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுதான். இங்கு கொலைக் களமே நீதிமன்றம்... கொலைகாரர்களே நீதிபதிகள்!!



Wednesday, September 15, 2010

இப்னு தளபதி

இப்னு தளபதி


http://ibnuthalabathi.wordpres.us/2010/04/in.html

Monday, September 13, 2010

இறையருள் எல்லோருக்கும் நிறைக! புதிய சரித்திரம் படைப்போம்! - கே.எம்.கே

இறையருள் எல்லோருக்கும் நிறைக! புதிய சரித்திரம் படைப்போம்! - கே.எம்.கே

நோன்புப் பெருநாள் நிறைவுற்று, புதிய வாழ்க்கை துவங்குகிறது நோன்பின் மாண்பால் புவனம் முழுவதிலும் சுவன சுகமும் இன்பமும் பெருகிட வேண்டும் என்றே நோன்பாளிகள் வேண்டினர். எதையும் மறந்து எண்ணங்களைத்துறந்து இதயம் திறந்து இறைவனிடம் முறையிடும் போது அதற்குரிய பலனும் பயனும் நிச்சயமாகவே கிடைக்கவே செய்கிறது.
நோன்பாளிகள் வாழ்த்துக்கு உரியவர்கள். இதனை கவிஞர் தா. ஜெய்புன்னிஷா தனது கவிதையில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இகபர சுகமெலாம் ஈந்திடும் நோன்பினை
இனிதுற நோற்பவர் நுழைவர்நல் சுவனமே
செகமிதில் எண்ணம் சொல் செயல்பாடுயாவிலும்
சேர்ந்திடும் நன்மையால் சிறப்புறும் புவனமே||
புவனத்தைப் புனிதப்படுத்தும் நோன்பிருந்து எங்களுக்கும் வாழ்த்துக்களை வாரி வழங்கிய அத்துணை நன்னெஞ்சங்களுக்கும் நமது இதய வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்தாம் எத்தனை வகை? அடடா, இப்படி யெல்லாம் வாழ்த்து கூற முடியுமா? என்று வியப்புற்று அதிசயிக்கச் செய்யும் அற்புத வாசகங்கள்! அடுக்கு மொழிகள்! உள்ளத்தைத் தொட்டிழுக்கும் கவிதை வரிகள்! அவை யாவும் சொற்செண்டுகள் மட்டுமா? தெவிட்டாத கற்கண்டுகள்!
இறையருள் எல்லோருக்கும் நிறைக!
தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த வாழ்த்துக்களுக்கு ஈடாக, ஏன், கொஞ்சம் அதிகமாகவே பிற மாநிலங்களில் இருந்தும் வந்து குவிந்துள்ளன. எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுத வேண்டும் என்னும் வேணவா ஏற்பட்டதன் விளைவே இந்தக் கட்டுரை.
இதைக் கட்டுரை என்று கூறுவதைவிட, எங்களின் கல்பில் - இதயத்தில் ஊறிய நன்றிப் பெருக்கின் வெளிப்பாடாகவே கருத வேண்டும்.
வாழ்த்துச் செய்திகளில் வந்த வைர வரிகளைப் பார்த்தபோது, அவற்றில் தலை சிறந்தவற்றுக்கு விருதும், பரிசும் வழங்கி வரிசைப்படுத்தினால் என்ன என்னும் சிந்தனை கூடப் பிறந்தது. இந்திய மாநிலங்களில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அமைப்புகள் தினம் தினம் ப+த்த வண்ணமாக உள்ளன. புதிய புதிய தலைவர்கள் - நிர்வாகிகளாகப் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.
கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் மட்டுமே இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது என்று எழுதுவோரும், ஏகடியம் பேசுவோரும் எங்கும் உள்ளனர். ஆனால், இந்த அந்த விமர்சனக்காரர்கள் பெரும் வியப்படைந்தவர்களாக மாறி விடுவார்கள்.
நோன்பு மனதுக்கு இதம் சேர்த்தது@ உடலுக்கு புதிய தெம்பைத் தந்தது@ சமூகத்திற்குப் புதிய சிந்தனையைத் தந்தது@ தேசத்துக்கு புதிய உறவுப் பாதையை வழங் கியது@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கு இதுவரை இல்லாத தொரு புதிய வரலாற்றையே இந்த ஆண்டு ரமளான் தந்திருக்கிறது.
வார்த்தைகளில் வந்த வாழ்த்துச் செய்திகளே!
நாளைக்கு செயல்பாடுகளால் வந்த வெற்றிகளாக
மாறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
வாழ்த்தாக வந்ததை வெற்றிக்கு இறைவன் தந்த விதையாக ஏற்போம்! புதிய சரித்திரம் படைப்போம்!

http://www.muslimleaguetn.com/news.asp?id=1843