Wednesday, September 22, 2010

கோடானு கோடி கரங்கள் உயரட்டும்

கோடானு கோடி கரங்கள் உயரட்டும்
( சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது )
ஓர் அற்புதமான பயிற்சிக்காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ரமலான் மாதத்தின் மிகப் புனித நாட்கள் ஒவ்வொன்றாக நகர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை அடிவானத்தில் தன் ஒளிக்கீற்றைக் காட்ட தலைப்பட்ட உடன் அன்று பெருநாள் என்ற மகிழ்ச்சி பூரிப்பில் திழைத்து மகிழ்ந்து அந்த மகிழ்வை உற்றார் உறவினரோடும் பகிர்ந்து கொண்டாடுவது உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் வாடிக்கை.
இல்லாமையால் பசித்து இருப்பது என்பது வேறு – இருந்தும் அல்லாஹ்வுக்காக அவன் கட்டளை என்பதற்காக உணவையும் நீர் அருந்துவதையும் கூட ஒதுக்கி வைத்துவிட்டு பசித்திருப்பதென்பது அறவழி பண்பாட்டில் வந்த ஓர் அற்புதமான பயிற்சியாகும்.
ரமலான் மாதத்தில் இயற்கையான வாழ்க்கை முறையிலேயே கூட அழுத்தமான ஓர் மாற்றம் ஏற்படுகிறது.
உழைப்பினை நல்கி வருவாயைத் தேடி உண்டு மகிழ்ந்திட பகலையும், உறங்கி களைப்பாறி இன்பந் துய்த்திட இரவையும் இயற்கையாக பெற்றுள்ள முஸ்லிம்கள் பகலை பசித்திருக்கவும் இரவை விழித்திருந்து அவனை வணங்கி இசைப்பாடி துதித்து கழித்திருக்கவுமாக மாற்றிக் கொள்கிறார்கள்.
ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழிக்காத இடும்பை கூர் வயிற்றை ஒரு மாத காலம் பகற்போதுகளில் பட்டினி கிடக்கச் செய்கிறார்கள். இது ஓர் அற்புத சாதனை அல்லவா ?
இஸ்லாமிய நெறியில் இந்தப் பயிற்சி இன்றியமையாத ஒரு கடமையானாலும், வாழும் மனித சமுதாயத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களாக வறுமைக் கோட்டின் கீழே வாழுபவர்களின் உணர்வுகளையும், வேதனைகளையும் புரிந்து, அவர்கள் மீது கழி விரக்கம் கொண்டு, தம்மிடம் உள்ளதைத் தேவைப்பட்ட மற்றவர் களுக்கும் பகிர்ந்து உண்ணும் பண்பை இந்தக் கடமை ஏற்படுத்துகிறது.
எனவே இந்த அறநெறிப் பண்பு உலகெலாம் தழைக்க மற்றவர்களும் இந்த பயிற்சியை கடைபிடிக்க வேண்டுமென்று சொல்லும் அதிகாரம் யாருக்காவது கிடைக்குமானால், அது வரவேற்கத்தக்கதே .
நோன்புப் பெருநாள் ஒரு கடுமையான பயிற்சியை, தானே மனமுவந்து – அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக மேற்கொண்ட விசுவாசிகளுக்கு – அற்புத சாதனையாளர்களுக்கு பெருங்கருணையாளனாகிய அல்லாஹ் வழங்கும் ஒரு சன்மானமாகும்.
மனிதர்களாக இருந்து கொண்டே அறவாழ்வின் அடிப்படையில் புனிதர்களாகத் தம்மை உயர்த்திக் கொண்ட அந்தத் திருவாளர்கள் அடையும் சன்மானம், பெருநாளின் மகிழ்ச்சியில் உலக மக்களும் பங்கு கொள்கிறார்கள்.
நம்மிடம் ஆயுதம் ஏந்தும் கரங்கள் உண்டு. ஆனாலும், அப்பாவி மக்களுக்கு ஆதரவாக இயங்கும் ஆயுதங்கள் இல்லை.
எனவே, நம்முடைய கோடானு கோடி கரங்களை அந்தக் கருணையாளனின் நினைவில் உயர்த்துவோம்.
“இறைவனே ! உன்னுடைய வலிமை யாராலும் தடுக்க முடியாதது. அந்த வலிமையால் கொடுமைகள் இழைக்கப்பட்ட அனைவருக்கும் உன்னுடைய கருணையால் – அபயம் தந்தருள்வாயாக ! கொடு மனம் கொண்ட கயவர்களால் சூழப்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பு நல்குவாயாக !
“உலகெங்கும் அமைதியை நிலை பெறச் செய்வாயாக ! சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் மனிதர்களிடையே நிலை நாட்டுவாயாக ! உன்னுடைய அளப்பரிய கொடையாலே மனித சமுதாயம் செழித்து சுபிட்சமுடன் வாழச் செய்வாயாக.
“கருணை மிக்கவனே ! உன் கட்டளைக்கேற்ப நோன்பு நோற்ற புண்ணியவான்களின் சாதனையை முன்னிலைப்படுத்தி உன் திருத்தூதர் காட்டிச் சென்ற வழிமுறைக்கொப்ப இரவெல்லாம் உன்னைப் புகழ்ந்தேத்தி – வணங்கி, வாழ்த்திய அந்த மனிதப் புனிதர்களின் தவநிலையின் அடிப்படையில் உன்னிடம் உளந்திறந்து பணிவோடு பிரார்த்திக்கின்றோம். எங்கள் வேண்டுகோளை ஏற்றருள்வாயாக. ஆமீன் ! ஈத் முபாரக் !!
( நன்றி – ‘மணி விளக்கு’ ஜுலை 1982 )

( மணிச்சுடர் ரமலான் சிறப்பு மலர் 2010 ன் மறுபிரசுரத்திலிருந்து )