நாவலர் அல்ஹாஜ். ஏ.எம். யூசுப் சாஹிப்
மாண்புமிகு மதினாவில் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் தர்பாரில் நெஞ்சுருக ஸலாம் சொல்லி மகிழ்ந்த நாவலர் அல்ஹாஜ். ஏ.எம். யூசுப் சாஹிப்
( தளபதி ஏ. ஷபிகுர்ரஹ்மான் மன்பஈ )
நாடு விடுதலைக்கு முன்னர் மிகப்பெரும் சமுதாய அரசியல் இயக்க மாக முஸ்லிம்லீக் இருந்தது.
அந்த காலக்கட்டத்தில்
மிகப்பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும், சிற்றரசர்களும் முஸ்லிம் லீக்கில் இருந்தார்கள்.
நாடு விடுதலைக்குப் பின்னர் முஸ்லிம் லீக்கின் சிறப்பான – தியாகமான செயல்பாடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பெயரால் கண்ணியமிகு காயிதெமில்லத் அவர்கள் செயல்படுத்த துவங்கியபோது சோதனையான காலக்கட்டம் ஏற்பட்டது. முஸ்லிம்லீக் செயல்படுவதற்கும் அதன் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்கும் கடுமையான சோதனை ஏற்பட்டது. மிகப்பெரும் தலைவர்களெல்லாம் எதிர்த்தார்கள்.
அந்தக் காலக் கட்டத்தில் காயிதெமில்லத் அவர்களுக்கு ஆதரவாக இருந்து முஸ்லிம் லீக்கின் பணிகள் தமிழகத்திலும், கேரளத்திலும், ஆந்திரத்திலும் செயல்படுவதற்கும் பெரிதும் ஆதரவு வழங்கியவர் நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் அவர்கள்.
மறுமலர்ச்சி வாரஇதழை துவக்கி தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கின் உறுப்பினர்களைச் சேர்த்து முஸ்லிம் லீக்கின் கிளைகளை துவக்கி வைத்த தியாகச்சீலர் ஏ.எம். யூசுப் சாஹிப் அவர்களாகும்.
என்னுடைய 10 வயதிலிருந்து நாவலர் யூசுப் சாஹிப் அவர்களுடன் இயக்கப்பணியில் நல்ல நெருக்கம் உண்டு. நாவலர் அவர்களின் வீர மிகுந்த பேச்சை கேட்டு அதைப்பாடமிட்டு என்னுடைய 10 வயதிலிருந்து பேசிவருகிறேன்.
அச்சம் தயை தாட்சன்யமின்றி சமுதாயத்தின் உரிமைகளைப்பற்றி வாழ்வெல்லாம் பேசியவர்கள் நாவலர் அவர்களாம்.
மறுமலர்ச்சி வார இதழ் மூலமும் தன் நாவன்மையாலும் முஸ்லிம் லீக்கிற்கு எழுச்சியூட்டிய அரசியல்மேதையாம் .
இவர் புனித ஹஜ்ஜிற்கு வந்திருந்தபோது அவருடன் மக்கா முகர்ரமாவிலும், ஹஜ்ஜின் கேந்திரங்களான புனித மக்கா, மினா, அரஃபா, முஜ்தலிபா ஆகிய இடங்களில் அவருடன் அமல் செய்திருக்கிறேன் அப்போதெல்லாம் நெஞ்சுருக்கும் வகையில் அவரின் ஆர்வமான செயல்பாடுகள் அமைந்திருந்தது.
மாண்புமிகு மதினா ஜியாரத்துக்கு வள்ளல் நபிகள் பெருமானார் ரசூலே கறீம்,,ஸல்,, அவர்களின் தர்பாரில் ஸலாம் சொல்லிக் கொண்டிருந்தபோது தேம்பி தேம்பி அழுதார். நெஞ்சுருக துஆச் செய்தார் அப்போது இவர்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடெங்கும் வள்ளல் நபிகள் பெருமானார் ரசூலே கறீம் (ஸல்) அவர்களின் பிறந்த தின விழாக்களில் மீலாத் மாநாடுகளில் – ஷரீஅத் மாநாடுகளில், திருக்குர்ஆன் மாநாடுகளில், முஸ்லிம்லீக்கின் மாநாடுகளில், பொதுக் கூட்டங்களில் மணிமணியாக பேசி இருக்கிறேன் மணிக்கணக்கில் பேசி இருக்கிறேன் நாள்தோறும் 2 மணிநேரம் 3 மணிநேரம் பெருமானார் ரசூல் கறீம் ,,ஸல்,, அவர்களின் அழகிய வாழ்வினைப்பற்றி வாய் இனிக்க – நா மணக்க பேசி இருக்கிறேன் 50 ஆண்டுகளுக்கு மேலாக பெருமானார் அவர்களைப்பற்றி பேசிய பிறகுதான் –
இப்போது நேரில் வந்து அவர்களுக்கு ஸலாம் சொல்லுகிறேன். என் மனைவியுடன் வந்து ஸலாம் சொல்லும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக எதைப்பற்றி சிந்தித்தேனோ எதைப்பற்றி மேடைகளில் முழங்கி வந்துள்ளேனோ அதை அப்படியே இங்கே பார்க்கிறேன்.
மக்கா முகர்ரமாவும், மதீனா முனவ்வராவும் இங்குள்ள சரித்திர பிரசித்திப் பெற்ற இடமும் அடியேன் பேசி வந்தது உண்மைதான். சத்தியம்தான் என்பதை எனக்கு உணர்த்துகிறது. அவர் சொன்னச் செய்தி இன்னமும் என் நெஞ்சை மகிழவைக்கிறது. இவரின் கப்ரை பிரகாசமாக்கி இவர்க்கு சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை அல்லாஹ் வழங்குவானாக என கருணையுள்ள ரஹ்மானிடம் கரமேந்தி பிரார்த்திக்கிறேன்.