Monday, June 21, 2010

கோழையை வீரனாக்கும் கொள்கைக் குன்று !

கோழையை வீரனாக்கும் கொள்கைக் குன்று !

நல்ல நெறியுடையான் ஞானக் கடலுடையான்
வெல்லத் தமிழில் மிகுபுலமை கொண்டவன்தான்
ஆங்கிலத்தில் பேசுகின்ற ஆற்றல் மிகப் பெற்ற
ஓங்கி வளரும் உயர் குலத்துத் தென்றல்.

சிறுபான்மை மக்களின் தேன் நிலவு; மேலும்
பொறுமைக்கோர் சின்னமவன் பொன்மனத்தார்
அம்மகனை
ஒச்சமற்ற முத்தென்பார் உள்ளத்தில் வைத்திடுவார்
பச்சை உள்ளத்தவனைப் பாட்டெல்லாம் வாழ்த்திவரும்
இச்சகம் பேசும் இயல்பில்லை; ஆட்சியிலே
நச்சு நிலவுவதை நன்றாகச் சாடும்

அறப்போர்த்தலைவனவன் ஆணழகன் நல்ல
திறம் வாய்ந்த போர் வீரன் சிங்கத்தின் சாயல்
மறச் செயலைக் கண்டவுடன் மார் காட்டி வந்து
பறை தட்டிக் கூப்பிடவே பல்லோரும் கூடிடுவர்

பொல்லாங்கு தீர்ந்து விடும் புன்னகையுமின்னிவிடும்
எல்லார்க்கும் நல்லவன் எனப்படும் அண்ணலவன்
அவ்வையார் ஆகி அருநீதி சொல்கின்ற
எவ்வுயிர்கும் அன்பன் எதிர்ப்பில் வளர்கின்றான்

தூற்றுவோரை நெஞ்சம் துதிபாடும் ஆனாலும்
கூற்றுவன்போல் ஆவான் கொடுங்கோல் பகைவர்க்கு
ஊழியரின் உள்ளத்தில் உத்தமனாய் வாழ்கின்றான்
கோழையை வீரனாக்கும் கொள்கைக்குணக் குன்று

கல்வி பெறச் செய்ய கல்லூரி தந்து வரும்
எல்லாரின் நல்லாசான்; இன்னும் அவன் சேவை
நாலரைக் கோடி நலிவுற்று வாழ்வதையும்
கோல முகத்தவனும் கூர்ந்து கவனித்தான்

அஞ்சாதே ! என்றவுடன் ஆர்த்தெழுந்துவிட்டார்கள்
பஞ்சை உளத்தானும் பாயும் புலியானான்
‘அல்லாஹு அக்பர் !’ அணி முரசம் கொட்டிவிட்டு
எல்லோரும் ஒன்றானார் ஆஹாஹா ! என் சொல்வேன்?

பச்சைப் பிறைக்கொடியைப் பாங்குடனே ஏந்தியதும்
இச் சகத்தில் வாழ்ந்திடுவோம் என்கின்றார் ஐயமில்லை
ஆட்சியினர் நன்குணர்ந்து ஆணவத்தை விட்டொழித்தால்

மாட்சி பெற மார்க்கமுண்டு, வான்புகழால் அன்று
தரணி அரசாண்டதார்வேந்தர்க் கூட்டம்
இரந்து வதைகின்ற ஏளனத்தைப் போக்கி விட
வீர முழக்கமிட்டு வீழ்ந்த சமுதாயம்

சீருடன் வாழ செயல்புரியும் தீரனவன்
இஸ்லாம் மணிவிளக்கு என்கின்ற இன்னவனை
இஸ்மாயீல் என்பார் இசைந்து !

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மீது ‘அறிஞர் மதனீ’
1955ல் மறுமலர்ச்சியில் எழுதிய கவிதை.
தருபவர்: ஏயெம்ஹெச்.

நன்றி : மணிச்சுடர்
5/6 ஜுன் 2010