இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்
இராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 15 நவம்பர் 2008 சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மாவட்ட செயற்குழுக் கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹாஜி எம்.எஸ். சௌக்கத் அலி தலைமை தாங்கினார். பேரையூர் மவ்லவி சாகுல் ஹமீது அரூஸி இறைவசனங்களை ஓதினார்.
மாவட்ட செயலாளர் ஹாஜி எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை முன்மொழிந்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு :
மறைந்த மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி கே.கே.எஸ்.ஏ.பக்ருதீன் மறைவுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்னாரது தியாக மனப்பான்மையை மாவட்ட நிர்வாகிகள் நினைவு கூர்ந்தனர். அவருக்காக துஆ ஓதப்பட்டது.
இராமநாதபுரம், விருதுநகர், சிவகெங்கை,கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல மாநாட்டினை இராமநாதபுரத்திலேயே நடத்த மாநில தலைமையினை கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 31 பேர் அடங்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழு பிற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்யும்.
டிசம்பர் மாதம் 26,27 ஆகிய தேதிகளில் உத்திர பிரதேச மாநிலம் லக்ணோவில் நடக்கும் அகில இந்திய மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
மாலேகான் குண்டுவெடிப்பில் உண்மைக் குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
இலங்கைத் தமிழர் துயர்துடைக்க ஒத்துழைப்பு நல்கி வரும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மேலும் இப்பிரச்சனையில் ஒரு குழுவை ஏற்படுத்த பிரதமரை தமிழக முதல்வர் கேட்டுக் கொள்ளவேண்டும் எனவும், அக்குழு இலங்கை சென்று பிரச்சனைகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ராமேசுவரம் தொடர்வண்டிப்பாதை விரிவாக்கப் பணி நடந்த பின்னர் அரசு அறிவித்தபடி வடமாநிலங்களை இணைக்கும் வண்ணம் தொடர்வண்டிகளை விட அரசும், ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநில பொருளாளர் நிதிநிலை குறித்து அனுப்பிய சுற்றறிக்கை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
பயிற்சிப் பாசறைகள் நடத்திய பனைக்குளம், மண்டபம், கீழக்கரை நகர முஸ்லிம் லீக் கிளைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதே போல் மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் பயிற்சிப் பாசறையினை விரைந்து நடத்தி முடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் ஆர்வத்துடன் அதிக அளவில் பங்கேற்ற அனைவருக்கும் பாரட்டு தெரிவிக்கப்பட்டது. இம்மாநாட்டுக்காக சீருடைகளை தயாரித்து வழங்கிய பனைக்குளம் நகர முஸ்லிம் லிக்கிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அமீரக காயிதெமில்லத் பேரவை செய்தித் தொடர்பாளர் முதுவை ஹிதாயத், பனைக்குளம் அபு முஹம்மது, கீழக்கரை வரிசை முஹம்மது ஹாஜியார், கீழக்கரை லெப்பைத்தம்பி, ஆர்.எஸ்.மங்கலம் அமானுல்லாஹ், தேவிபட்டிணம் சித்திக், மண்டபம் லியாக்கத் அலி, வேதாளை அப்துல் ரஷீத் ஆலிம், இராமநாதபுரம் சாதுல்லாஹ் கான், இராமநாதபுரம் மணிச்சுடர் ஏஜெண்ட் யாக்கூப், முதுகுளத்தூர் அமானுல்லாஹ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
வேதாளை அப்துல் ரஷீத் ஆலிம் துஆவுடன் செயற்குழுக் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்திற்குப் பின்னர் மீன் பொறியலுடன் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செய்தி : முதுவை ஹிதாயத் ( எம்.என்.ஏ. )