Saturday, August 1, 2009

சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு ! -எம். அப்துர் ரஹ்மான் பேட்டி!

சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு ! -எம். அப்துர் ரஹ்மான் பேட்டி!

வந்தார் ! நின்றார் ! ஜெயித்தார் ! என எல்லோராலும் வியந்து பாராட்டும்படியாக மாபெரும் வெற்றிதனை வேலூரில் நிலைக்க வைத்தவர் முத்துப்பேட்டை எம். அப்துர் ரஹ்மான். காலமெலாம் சமுதாயத்திற்கு வெளியேயே சுற்றி விட்டுக் காலம் போன கடைசியில் சமுதாயத்தைத் திரும்பிப் பார்க்கும் சிலருக்குத்தான் அப்துர் ரஹ்மான் ‘இறக்குமதி’ செய்யப்பட்டவராகத் தெரியும். சமுதாயச் சேவையிலேயே ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அரபு மண்ணில் அலுவல் பார்த்தாலும் பிறந்த மண்ணில் சமுதாயம் மேம்பாடு காண அவர் அயராது ஆற்றி வந்த அரும்பணிகள் தெரிந்தே இருக்கும். உதட்டில் உதிர்க்கும் வார்த்தைகளில் மட்டும் அல்ல…. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் அவரது உணர்ச்சிகளிலும் இணைந்து கலந்தது இந்திய யூனியன் முஸ்லிம்லீக்.

வெற்றிவீர்ராகச் சென்னை திரும்பிய எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி. ‘இனிய திசைகள்’ இதழுக்கு அளித்த பிரத்யேகமான பேட்டி இதோ:

? தங்கள் வெற்றியின் இரகசியம்?

! சமுதாயக் கண்ணியம் காக்கப்பட – சமுதாயத்தினரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அரசியல் இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூரில் வெற்றிபெற்றே ஆக வேண்டுமென ஆன்றோர்கள், சான்றோர்கள், சங்கைமிகு உலமாக்கள், நடுநிலையாளர்கள், அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட நல்லெண்ணம் கொண்டவர்கள் என நல்லோர் பலரும் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சிக் கேட்ட துஆ – தஹஜ்ஜத்துத் தொழுகை தொழுது அழுது கேட்ட துஆ – ஹாஜத்து நோன்பு வைத்துக் கண்ணீர் பெருகக் கேட்ட துஆ இவற்றையெல்லாம் கபூல் செய்து அல்லாஹ் அளித்த தீர்ப்பு தான் இந்த வெற்றி!


? தேர்தலில் தாங்கள் சந்தித்த சங்கடம் என்ன? சந்தோஷம் என்ன?

! ‘உருது பேசத் தெரியாதவர்’ மண்ணின் மைந்தர் அல்லர்’ எனப் பரப்பப்பட்ட துவேஷமேசங்கடம், பல்வேறு ஜமாஅத் கூட்டங்களிலும், சந்திப்புகளிலும் உருதுமொழி பேசி அவர்கள் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டதும் அந்தப் பகுதி மக்களோடு பன்னெடுங்காலமாக நான் கொண்ட நெருங்கிய தொடர்பும் அப்பகுதியில் ஆற்றிய சமுதாயப் பணியும் தெரியவர இன்னும் அதிகமாக அப்துர்ரஹ்மான் இன்ஷா அல்லாஹ் சமுதாயப் பணியாற்றுவாரென்று எல்லோர் மத்தியிலும் ஏற்பட்ட நம்பிக்கை சங்கடத்திற்குப் பிறகு கிடைத்த சந்தோஷம் சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு என்பதை மக்கள் உணர்ந்து கொண்டதே மிகப்பெரும் சந்தோஷம்.


? இலட்சத்திற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோமென எதிர்பார்த்தீர்களா?

தொடக்கத்தில் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரச்சார முடிவில் எதிர்பார்த்தேன். ஒவ்வோர் ஊரிலுள்ள பெரியவர்கள் முக்கிய பிரமுகர்கள் ஒருங்கிணைந்து குழு அமைத்து ஜமாஅத் வாரியாகப் பணி புரிந்ததும் குறிப்பாக முஸ்லிம் பெண்களே குழுவாகச் சேர்ந்து ஜமாஅத் ஜமாஅத்தாக வாக்குகள் சேகரிக்க முனைந்ததும் பெருவாரியான வித்தியாசத்தில் இறையருளால் வெற்றி பெறுவோமென்ற நம்பிக்கையைத் தந்தது.


? வெற்றிக்கு முக்கிய காரணம்?

தமிழக முதல்வர் நாட்டு மக்களுக்குக் கடந்த மூன்றாண்டு களாக ஆற்றி வரும் சாதனைகளும் சமயச் சார்பற்ற மத நல்லிணக்கத்தை நிலைப்படுத்தும் நடுவண் அரசின் சாதனை களும் மக்களை வெகுவாக ஈர்த்திருந்தமையே முக்கிய காரணமெனலாம்.

தொகுதி முழுவதும் பயணம் செய்து பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தேன். மன்மோகன் அரசின் சாதனை களையும் கலைஞரின் சாதனைகளையும் நாம் சொல்ல முற்படும்போதே அவர்களே நன்றியுணர்வோடு சொல்லுகிற காட்சியை அனுபவித்தேன். வசதி படைத்தோர் முதல் பாமரர் வரை எல்லாத் தரப்பினரிடமும் இத்தகைய உணர்ச்சி இந்தத் தேர்தலில் பிரதிபலித்ததைப் போல வேறெந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கவில்லையென்றே கூறலாம்.


?எம்.பி ஆகியுள்ளீர்களே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச்சி இனி எப்படி இருக்கும்?

! இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அருமைத்தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் தலைமையில் சிறப்பாக வளர்ந்தே வந்திருக்கிறது. இந்த வளர்ச்சி மேலும் தொடரும். அந்த வளர்ச்சிக்கு இந்த எம்.பி. வாய்ப்பு மேலும் வலிமை சேர்க்கும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இறைவன் பெயரால் முற்றிலும் சமுதாயத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட இறையடியார்களால் தோற்றம் பெற்ற இயக்கமாகும். எனவே இந்த இயக்கத்தை – இதன் தத்துவத்தை – எவராலும் அழிக்க முடியாது. இயக்கச் செயல்பாடுகளில் அவ்வப்போது தொய்வு ஏற்படுவது இயல்பானதேயாகும். அதனைச் சரிசெய்து சரியான திசையில் மேலும் வீறுகொண்டு வலிவோடும் பொலிவோடும் செலுத்த வேண்டிய பொறுப்பு இப்போது எனக்கு இன்னும் அதிகமாகியுள்ளதென்றே கருதுகிறேன்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சியென்பது சமுதாயத்தின் உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்ததென்பதால் நிச்சயமாக வளர்ச்சி மேலும் தொடரு மென்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு.


? முஸ்லிம் லீகில் இளைஞர்கள் இல்லையென ஒரு குறை நிலவுகிறதே?

! அது உண்மை இல்லை. இளைஞர்கள் கணிசமாக முஸ்லிம் லீகில் இருக்கவே செய்கிறார்கள். ஆர்ப்பாட்ட மின்றி ஆரவாரமின்றி அமைதியாகக் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் காட்டிய நெறியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன் தலைமையில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

சூழ்நிலைக் கைதிகளாக ஆங்காங்கே வேறுவேறு அமைப்புகளில் சிக்கிக் கிடந்த இளைஞர்களும் இப்போது மீண்டு வருகிறார்கள். இஸ்லாமியப் பண்பாட்டு வழிமுறையை இஸ்லாமிய ஒழுக்க நெறியோடு பேணி வரும் ஒரே இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். இதனால் பல்வேறு அமைப்புகளில் இருந்த இளைஞர்கள் இன்றைக்கு அணி அணியாக முஸ்லிம் லீகில் இணைந்த வண்ணம் உள்ளார்கள்.


? அரசியலில் சமுதாய ஒற்றுமை ஏற்பட என்ன செய்யலாம்?

! சமுதாய உரிமைகளைப் பேணிக் காத்து நமக்கே உரிய கண்ணியத்தையும் மரியாதையையும் எல்லாத் துறை களிலும் பெற்று நாம் வாழ்ந்திட சமுதாய மக்களால் அங்கீகரிக்கப்பட்ட தாய்ச் சபையான இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் அனைவரும் இணைவதே அரசியலில் நாம் வலிமை பெற உதவும். இந்தியத் திருநாட்டின் ஒருமைப் பாட்டையும் இறையாண்மையையும் காத்து எல்லாரும் எல்லாமும் பெற்று மனிதநேயம் மதக் காழ்ப்பின்மை மிளிர அனைவரும் ஒன்று பட்டுப் பச்சிளம் பிறைக் கொடியின் கீழ் ஒருங்கிணைந்து ஒற்றுமை உணர்வு கொண்டு வாழ்வோம் … புத்தெழுச்சி பெறுவோம்.

அப்துர் ரஹ்மான் அவர்களுடைய கண்களின் மலர்ச்சியும் கருத்துகளின் தெளிவும் செயல்பாட்டில் முனையும் உறுதியும் ஆற்றலில் தெரியும் விவேகமும் இந்த நாடாளு மன்ற உறுப்பினர் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நிறைய சாதிப்பாரென்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. துஆ செய்வோம்!

-பேட்டி ‘சேயோன்’

நன்றி : இனிய திசைகள்
ஜுன் 2009