கட்டாய திருமண பதிவுச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு: எம்.பி. கோரிக்கை
திருநெல்வேலி, ஜூலை 18: கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளித்து ஜமாஅத் பதிவு முறை தொடர தமிழக அரசு வழி செய்ய வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் சனிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டி:
தமிழ்நாட்டில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், ஜனநாயக முற்போக்கு கூட்டணித் தலைவரான முதல்வர் கருணாநிதி கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்து பேசி எடுக்கும் முடிவுகளுக்கு துணை நிற்போம். ஐந்து தொகுதிகளிலும் எந்தக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், எங்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுவது போலவே எண்ணி அவர்களது வெற்றிக்கு தீவிரமாக தேர்தல் பணியாற்றுவோம்.
திருமண பதிவுச் சட்டம்: தமிழக அரசு அறிவித்துள்ள கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் இருந்து முஸ்லீம்களுக்கு விலக்கு அளிக்க முதல்வரிடமும், துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
முஸ்லீம்கள் இதுவரையில் தங்களது திருமணங்களை அவர்கள் சார்ந்துள்ள ஜமாஅத்துகளில் பதிவு செய்து வருகின்றனர். அந்த பதிவு ஆவணங்கள் நீதிமன்றங்களிலும் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
இப்போது அரசு அறிவித்துள்ள கட்டாய பதிவு என்பது, ஜமாஅத் பதிவு முறையை குலைத்துவிடும் என அஞ்சுகிறோம். எனவே, ஜமாஅத் பதிவு முறை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். நடப்பு சட்டப் பேரவைக் கூட்டம் முடிவடைந்த உடன் இந்த பிரச்னைக்கு நல்லதொரு அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம்.
சச்சார் கமிட்டி பரிந்துரைகளில் குறைந்தபட்ச பரிந்துரைகளை அமல்படுத்தக்கூட தற்போது அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி போதாது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கை, லிபரான் ஆணைய அறிக்கை ஆகியவற்றை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் நம்புகிறோம்.
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டில் தற்போது 3080 பேருக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்து வருகிறது. இது கடந்த 1991 ஆம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் ஆனது. இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும்.
எங்கள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 1-ல் குற்றாலத்தில் நடைபெற உள்ளது. அதில், கடந்த மக்களவைத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு உழைத்தவர்கள் பாராட்டப்பட உள்ளனர் என்றார் அப்துர் ரஹ்மான்.
பேட்டியின்போது, மாநில பொதுச்செயலர் கே.ஏ.எம். அபுபக்கர், மாநில துணைத் தலைவர் கோதர்மைதீன், மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாநகர் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். மில்லத் இஸ்மாயில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.