திமுக கூட்டணி வெற்றிக்கு முஸ்லிம் லீக் பாடுபடும் - அப்துல் ரகுமான் எம்பி
ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 19, 2009, 12:12 [IST]
நெல்லை: சட்டசபை இடைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும் என்று வேலூர் எம்பி அப்துல் ரகுமான் கூறினார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் பேசியதாவது...
தமிழகத்தில் ஆகஸ்ட்டில் நடைபெற உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாடுபடும். தொடர்ந்து அந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம். தற்போது அரசு அறிவித்துள்ள கட்டாய பதிவு திருமண சட்டத்தை வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் இதுவரை கன்னியமாகவும், முறையாகவும் ஜமாத்துகளில் பதிவு செய்யப்படும் முஸ்லிம் திருமணங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் உள்ளது.
இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
சட்டமன்ற கூட்ட தொடருக்கு பிறகு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப ஹஜ் யாத்திரை செல்ல முஸ்லிம்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க வேண்டும்.
கட்சியை பலப்படுத்த மாநில செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி குற்றாலத்தில நடைபெறுகிறது. மேலும் கட்சி எழுச்சி பெற்றுள்ளதால் ஏராளமான இளைஞர்களும், பல முஸ்லிம் அமைப்புகளும் கட்சியில் சேருகின்றனர் என்றார்.