Friday, July 24, 2009

தமிழக முஸ்லிம்களின் ஒரே அரசியல் களம் !

தமிழக முஸ்லிம்களின் ஒரே அரசியல் களம் !

தாய்ச் சபை முஸ்லிம் லீக் மட்டுமே !

( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி அறிக்கை ! )

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் மற்ற சமுதாயத்திற்கு வெற்றி, தோல்வியை சொன்னதோ ? இல்லையோ? தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கு தெளிவான வெற்றியை சொல்லி விட்டது. அந்த வெற்றியை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூலம் சொல்லி இருப்பது ஒவ்வொரு முஸ்லிம்களையும் சிந்திக்க வைத்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் தாய்ச்சபை முஸ்லிம் லீக் எந்த அணியில் இடம் பெறுகிறதோ ! அந்த அணிக்குத்தான் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் படை திரண்டு ஆதரவை வழங்கி வருகிறது என்பதை 2006 சட்டமன்றத் தேர்தலும் 2009 நாடாளு மன்றத் தேர்தலும் உறுதிபடுத்தியுள்ளது. தாய்ச்சபை முஸ்லிம் லீக்கை விமர்சிப்பதன் மூலமே தங்களை வளர்த்துக் கொள்ள முடியும் என நினைத்து வாரத்திற்கு ஒரு கட்சியையும், வாரத்திற்கொரு இயக்கங்களையும் உருவாக்கி கொண்ட லெட்டர் பேடு அரசியல் கோமாளிகளெல்லாம் ஒவ்வொரு தேர்தலின் போதும் தங்களின் முகத்தை காட்டுவதும் தேர்தலுக்குப்பின் காணாமல் போவதுமாய் காலம் ஓடிக் கொண்டிருந்தாலும் இத்தகைய போலிகளின் எண்ணிக்கை மட்டும் குறைவதில்லை !

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் எங்கள் பின்னால் தான் என்ற குருட்டு நம்பிக்கையுடன் அவசர கோலத்தில் கட்சி ஆரம்பித்து தகுதிக்கு மீறிய வகையில் அரசியல் பேரம் நடத்தி அனைத்து கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்டு வேறு வழியே இல்லாமலும் திறந்த கடையை மூட முடியாமலும் தனித்து நின்று தங்கள் பலத்தை காட்டப் போகிறோம் என்று சொல்லி முஸ்லிம் லீக்கையும் அதன் தலைவர்களையும் விமர்சனம் செய்வதுமாய் அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழக அரசியலையே புரட்டி போடப்போகிறது எங்கள் கட்சியின் செயல்பாடுகள் என ஆணவ போதையில் உளறி கொட்டிய வீராதி வீரர்கள் ? எல்லாம் தேர்தலுக்குப்பின் அவர்களின் நிலையையும், செல்வாக்கையும் கண்டு அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் விரக்தி அடைந்து இனியும் நாமெல்லாம் அவசர கோலத்தில் ஜனித்த கட்சியில் நீடிக்க வேண்டுமா ? என கேள்வி கேட்டு ஊர் தோறும் கூட்டம் கூட்டமாய் முஸ்லிம்களுக்கான அரசியல் களம் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மட்டுமே என்று உணர்ந்து தொடர்ச்சியாக தாய்ச்சபையில் இணைந்து வருவதை இப்போது கண்கூடாய் பார்க்கிறோம்.

தமிழக முஸ்லிம்களின் ஒட்டு மொத்த பார்வையும் தற்போது தாய்ச்சபையின் முஸ்லிம் லீக் பக்கம் திரும்பியுள்ளது வரலாற்று சாதனையாகும். சத்தியத்தை அழிக்க நினைக்கும் எந்த அசத்தியமும் நிலைகொண்ட தில்லை. என்பதற்கு முஸ்லிம் லீக்கிற்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளின் தேய்வுகளே சாட்சியாகும்.

எந்த கொம்பனாலும் முஸ்லிம் லீக்கின் வரலாற்று நிழல்களை கூட அழிக்க முடியாது. காரணம் முஸ்லிம் லீக் இறையருள் பெற்ற இயக்கம். தன்னலம் கருதாமல் சமுதாயக் கவலை யுடன் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட தலைவர் களால் வழி நடத்தப்பட்ட பேரியக்கம். நல்லோர்களால் உருவாக்கப்பட்ட தூய்மையான இயக்கமாய் தமிழக அரசியலில் வலம் வரும் ஒரே இயக்கம் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மட்டுமே என்பதை பெருமைபடக் கூறிக்கொள்வோம்.

தமிழக முஸ்லிம்களின் கண்ணியமும், பாரம்பரியமும் கட்டிக் காக்கப்பட அனைவரும் அரசியல் ரீதியாக தாய்ச்சபையில் தங்களை இணைத்துக் கொண்டு தொடர்ந்து வெற்றிகளை குவித்திட முன்வர வேண்டுமாய் எல்லோரையும் அன்புடன் அழைக்கிறேன்.

வாரீர் ஒன்றுபடுவோம் ! உயர்ந்திடுவோம் !!