Saturday, July 11, 2009

காயிதெ மில்லத் அவர்களைப் பற்றிய கருத்துப் பூச்சரங்கள்

காயிதெ மில்லத் அவர்களைப் பற்றிய கருத்துப் பூச்சரங்கள்

தொகுப்பு : ஆலிமான் R.M. ஜியாவுதீன்

தொன்மையும், இலக்கியச் செறிவும், இலக்கணப் பொலிவும் நிரம்பிய மொழி, நாடாண்ட மொழி தமிழ்தான் இந்தியப் பொது மொழியாக இருக்க வேண்டும் என்று கம்பீரமாகக் குரல் கொடுத்து அந்தத் தமிழ் மொழிதான் என் தாய் மொழி என்று அரசியல் நிர்ணய சபையில் பெருமிதத்துடன் பிரகடனம் செய்தவர் காயிதெ மில்லத்.

-சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத்


காயிதெ மில்லத் ஆழமான மத உணர்வுகளும், உறுதியான இறை நம்பிக்கையும் மிக்கவர். ஆனால் அவர் வகுப்புவாத உணர்வுகளைக் கொண்டிருக்கவில்லை. மத உணர்வுக்கும் – வகுப்புவாதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அது வேறு இதுவேறு. தாம் சார்ந்துள்ள மதத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த அதே நேரத்தில் அனைத்து மதங்களின் மக்களையும் அவர் மதித்தார் – நேசித்தார் – சகோதர உணர்வுடன் பழகினார்.

-ஜி.எம். பனாத்வாலா


உணர்ச்சிகளை தூண்டும் அரசியல்போக்குகள் சமுதாயத்துக்கு நன்மை பயக்காது. காயிதெ மில்லத் காட்டிய அமைதி வழியே வெல்லும் வழியாகும்.

-பேராசிரியர் கே.எம்.கே


சிறுபான்மை பிரிவுக்கு மட்டுமின்றி இந்து பெரும்பான்மை சமூகம் என்று மாறுபாடு இன்றி சகோதர வாஞ்சையுடன் அனைத்துத் தலைவர்களுடனும் அரவணைத்துச் சென்றவர் காயிதெ மில்லத்.

-கி.வீரமணி


அரசியல் நிர்ணய சபை தேசியமொழி குறித்து ஆய்வு செய்தபோது முன்னை பழமைக்கும் பின்னை புதுமைக்கும் இலக்கிய இலக்கணத்திற்கும் உட்பட்டு என்றும் மாறாத தமிழ் மொழியை பரிந்துரை செய்தவர் காயிதெ மில்லத்.

-இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்


காயிதெ மில்லத் என்பதற்கு முஸ்லிம்களின் வழிகாட்டி என்று பொருள். நான் அவரை அறிந்த வரை அவர் முஸ்லிம் களுக்கு மட்டும் வழிகாட்டி அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்ந்தவர்.

-முன்னாள் சபாநாயகர் க. இராசாராம்


உலகத் தமிழ் மாநாட்டின் ஏழாம் நாள் கருத்தரங்கில் தமிழின் பொற்காலம் என்ற நிகழ்ச்சிக்கு கண்ணியத் திற்குரிய காயிதெ மில்லத் தலைமையேற்று பேசும் போது…
வேறு மொழிகளைப் போல் பெயர்ந்து வராமல், இருந்த இடத்திலிருந்தே தோன்றிய மொழி தமிழ். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு பொற்காலம் தோன்றி விட்டது என்று தமிழ்மொழியின் பெருமையையும் தமிழ் இலக்கியச் சிறப்புக்களையும் எடுத்துரைத்தார்.

-பேராசிரியை சா.நசீமா பானு



காயிதெ மில்லத்தைப் பொறுத்த அளவில் அவருடைய தலைமை மும்முகப்புகளுடன் இலங்கியது. அவர் தலை சிறந்த தேசியவாதி – அதே சமயம் நல்ல தமிழர் – அது போலவே உண்மையான முஸ்லிம். பாகிஸ்தான் பிரிந்த பிறகு முஸ்லிம் லீகை இந்தியர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தார்கள். அத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் முஸ்லிம் சமுதாயத்தை நெறிப்படுத்தி, இந்திய நீரோடையில் ஓர் அங்கமாக மாற்றிய பெருமை காயிதெ மில்லத்துக்கே உரியது. மதத்தால் முஸ்லிமாக இருந்தபோதிலும் உள்ளத்தால் இந்தியனாக வாழ வேண்டு மென்பதை வலியுறுத்தி வந்தவர் அவர்.

-’தினமணி’ தலையங்கத்திலிருந்து …..