Friday, August 29, 2008

வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே! டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பேச்சு

வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது முஸ்லிம்களே! டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பேச்சு



வகுப்புவாதத்தால் நடைபெறும் கலவரங்களில் அதிக இழப்புக்கு ஆளாவது முஸ்லிம்களே என்று காவல்துறை ஆய்வாளர் விப+தி நாராயணனின் ஆய்வு காட்டுகிறது என்று டாக்டர் ஹபீப் முஹம்மது கூறினார்.

இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக சென்னை காமராசர் அரங்கில் இஸ்லாமிய எழுச்சி மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஸரத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.எம். செய்யது அப்துல் காதர், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாதிக், டெல்லி சிறுபான்மை ஆணையத் தலைவர் கமார் பரூகி, வக்ஃப் வாரிய உறுப்பினர் சிக்கந்தர், எஸ்.எம்.ஹிதாயதுல்லாஹ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய பவுண்டேசன் டிரஸ்டு இணைச் செயலாளர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பேசியதாவது-

இன்று உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக கருதப்படும் பயங்கரவாதம் தோன்ற பல காரணங்கள் உள்ளன. ஜாதியவாதம், வகுப்புவாதம், ஏகாதிபத்தியம் போன்ற காரணங்களால்தான் பயங்கரவாதம் தலை தூக்குகின்றன. எந்த வடிவிலானாலும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் விஷ சக்கரம் போன்றது. அது என்றைக்காவது ஒரு நாள் ஏவுகணையை தாக்கி அழித்து விடும்.

நோய்க்கு மருந்து கொடுக்கலாம். ஆனால் அப்படி கொடுக்கும் மருந்தே உயிருக்கு ஆபத்தை விளைவித்து விடக்கூடாது.

பயங்கரவாதம் ஆபத்தான மருந்தாகும். அது நோயை தீர்ப்பதற்கு பதிலாக ஆளையே கொன்றுவிடும் என்பதில் கவனம் வேண்டும். இந்த நாட்டில் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேயின் பிறந்த நாளை தியாகிகள் தினமாக கொண்டாட மத்திய - மாநில அரசுகள் அனுமதி வழங்குகின்றன. ஆனால் இந்த நாட்டிற்காக அணுஅணுவாக உழைத்த முஸ்லிம் சமுதாயம் சுதந்திரதின பேரணி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இதுபோன்ற பாகுபாடுகளை அரசுகள் கைவிட வேண்டும்.

வகுப்புவாதம் குறித்து விரிவான ஆய்வு ஒன்றினை விப+தி நாராயணன் என்ற காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தார். அந்த ஆய்விலே வகுப்புவாதத்தால் நடைபெறும் கலவரங்களில் அதிகமான இழப்புகளுக்கு ஆளாவவது முஸ்லிம் சமுதாயம் என்றும், அதிக அளவில் தாக்குதலுக்கு ஆளான முஸ்லிம் சமுதாயமே சிறைகளிலும் அதிக அளவில் அடைக்கப்படுவதாக அதிர்ச்சியான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சமுதாயத்துக்கு அரசுகள் ஆதரவு காட்டுவதற்கு பதிலாக அவர்களை குற்றவாளிகளாக சிறையில் அடைத்து தண்டிப்பது இந்தியாவில் நடைபெறுகிறது. ஏன் இத்தகைய அநீதியை அரசுகள் இழைக்கின்றன? ஊடகத் துறையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பல அவதூறுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

இன்றையச் சூழலில் முஸ்லிம் இளைஞர்கள் ஊடகத் துறையில் அதிக அளவில் ஈடுபட வேண்டும். அதனை கடமையாக கருத வேண்டும். ஊடகத்துறை மூலமே நம் மீது சுமத்தப்படும் களங்கத்தை துடைக்க முடியும்.

இவ்வாறு ஹபீப் முஹம்மது பேசினார்.