Friday, August 29, 2008

ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரி உருவாக வேண்டும்! -துபை அப்துர்ரஹ்மான

Thursday, August 28, 2008

ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரி உருவாக வேண்டும்! -துபை அப்துர்ரஹ்மான



இஸ்லாமிய சமுதாயத்தில் விழிப்புணர்வு எற்படவேண்டும் என்றால் முதலில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பட்டதாரி உருவாக வேண்டும். பட்டதாரிகள் இல்லாத வீடே இல்லை என்ற நிலை நமது நாட்டில் நமது சமுதாயத்தில் ஏற்பட வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம்.அப்துர் ரஹ்மான் கூறினார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் தைக்கால்தெரு சேக் சாஹிப் - தர்கா வளாகத்தில் இஸ்லாமிய நல்வாழ்வு சங்கம் நடத்திய இஸ்லாமிய பெண்கள் கல்வி மாநாட்டில் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது:-

உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்து சகோதரர்கள். இஸ்லாம் ஜாதி மத இன பேதம் பிரித்து பார்க்காத அனைவரையும் சகோதரத்துவ அன்புடன் பார்க்கும் மார்க்கமாகும்.

தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கு ஒவ்வொரு தொழுகையிலும் துஆ கேட்கிறோம். அந்த அளவுக்கு கல்விக்கு பெருமை தேடி தரும் மார்க்கம் இஸ்லாம்.

பள்ளி படிப்பு முடிக்கும் முன் நம் வீட்டு பிள்ளைகளும் பாஸ்போர்ட் எடுக்கும் பழக்கத்தை நாம் விட்டுவிட வேண்டும். படிக்காமல் நாம் அரபு நாடுகளுக்குச் சென்று நாம் வாங்கும் மூன்று மாத சம்பளத்தை படித்துவிட்டு வந்தவர்கள் ஒரே மாதத்தில் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். பட்டப்படிப்பு முடிக்காமல் அயல்நாட்டு வேலைக்கு செல்லவே கூடாது.

ஒரு ஆண் கல்வி கற்றால் அவன் மட்டுமே பயன் பெறுகின்றான். ஆனால் ஒரு பெண் பயின்றால் அந்த குடும்பமே பயன் பெறும். அதனால்தான் இஸ்லாம் ஆண, பெண் இருபாலருக்கும் கல்வியை கட்டாய கடமையாக்கி இருக்கிறது.

ஆண்களில் 64 சதவீதம், பெண்களில் 72 சதவீதம் மக்கள் பள்ளிப் படிப்பை விட்டு தாண்ட மாட்டேன் என்கிறார்கள். சமீபத்திய கணக்கெடுப்பின்படி 101 முஸ்லிம்களுக்கு ஒரு பட்டதாரிதான் உருவாகிறார். இதே சகோதர சமுதாயத்தில் 101 பேருக்கு 31 பட்டதாரிகள் உள்ளார்கள். இந்த நிலை மாற வேண்டும். நாமும் இந்த நாட்டில் கவுரவமாக வாழ கல்வியில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாணவ - மாணவியரின் பேச்சுப் போட்டி வினாடி-வினா போட்டி நடைபெற்றது. நெல்லிக்குப்பத்தில் மேல்நிலை எஸ்.எஸ்.எல். சி. மெட்ரிக் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ - மாணவி யருக்கு அப்துல் ரஹ்மான் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.

விழாவில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.