http://www.mudukulathur.com/educationdetails.asp?id=330
அரசு பள்ளிக்கூடங்களில் மத கல்வி போதிக்கப்பட வேண்டும் !
சிறுபான்மையினர் தாய்மொழிகளில் ஆரம்ப கல்வி தேவை !
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று தனது கல்லூரி படிப்பை தியாகம் செய்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த்தே ! இந்திய முஸ்லிம்கள் கல்வித்துறையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறையுடன் அவர் அரும்பாடு பட்டார். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்கட்சித் தலைவராகவும் அரசியல் நிர்ணய சபைக் குழு சபை உறுப்பினராகவும், பாராளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினராகவும் அவர் பணியாற்றிய காலங்களில் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக அவர் ஆக்கப்பூர்வமான பல யோசனைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளார்.
இந்திய முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ‘அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக’ த்திற்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்ட போதெல்லாம் அதன் உரிமைக்காக அவர் துணிந்து குரல் கொடுத்துள்ளார். காயிதே மில்லத்தின் அயராத உழைப்பின் காரணமாகவே, கேரளா மாநிலத்திலும் தமிழகத்திலும் முஸ்லிம்கள் கல்வித் துறையில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளனர். கேரளாவின் முஸ்லிம் லீக் தலைவர், சி.ஹெச். முகம்மது கோயா, அம்மாநில கல்வி அமைச்சராகவும் மாநில முதலமைச்சராகவும் பதவி வகிக்க முடிந்ததென்றால், அதற்குக் காரணம் காயிதே மில்லத் அவர்களின் கல்விச் சிந்தனையும் சேவையுமே ஆகும்.
சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்த போது 06.03.1947, 30.10.1947, 26.04.1948, 14.03.1949, 05.08.1950, 28.03.1951, ஆகிய தேதிகளில் அவர் உரையாற்றும்போது இந்திய முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் குறித்து தெளிவாக பேசியதுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
அரசியல் நிர்ணய சபையில் …
08.11.1948, 7.12.1948 ஆகிய தினங்களில், அரசியல் நிர்ணய சபையில் காயிதே மில்லத் அவர்கள் உரையாற்றும்போது கல்வி நிலையங்களில் மதக் கல்வி போதிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய ஆன்மீகக் கல்வி வழங்குவதன் மூலமே எதிர் காலத்தில் சிறந்த குடிமக்களாக மாணவர்களை உருவாக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.
ராஜ்ய சபாவில் 11.09.1956 அன்று உரையாற்றும்போது உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு உருது மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார். 03.09.1965, 06.09.1965 ஆகிய தேதிகளில் உரையாற்றும்போது அலிகர் முஸ்லிம் கலாச்சாலை பிரச்சினை குறித்து விரிவாக பேசி பதிவு செய்துள்ளார்.
சட்டமன்ற, நாடாளுமன்றங்களில் மட்டுமல்லாது பொது மேடைகளிலும் முஸ்லிம் சமுதாயம் கல்வித் துறையில் முன்னேற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அதற்காக அவர் பாடுபட்டதன் காரணமாகவே தமிழகத்தில் முஸ்லிம் மக்களால் பல கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 1919 –ல் இஸ்லாமியா கல்லூரி, வாணியம்பாடி என்ற ஒரே ஒரு கல்லூரி மட்டுமே முஸ்லிம் களால் நடத்தப்பட்டு வந்தது. சென்னையில் சுதந்திரத்திற்கு முன் முஹம்மதன் கலைக்கல்லூரி என்ற பெயரில் இயங்கி வந்த கல்லூரியை அரசு கலைக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்ததுடன் அக்கல்லூரியில் முஸ்லிம்களுக்கு கிடைத்து வந்த சலுகைகளையும் அரசாங்கம் தடை செய்ததனால் அன்றைய கல்வியமைச்சர் அவிநாசி லிங்கத்தின் ஆலோசனையின் பேரில் முஸ்லிம்களுக்கென்று தனியாக கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து அதற்காக ஊர் ஊராகச் சென்று முஸ்லிம் செல்வந்தர்களை அணுகி உழைத்ததன் மூலமாகவே, இன்று ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சில –
முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய கல்வி நிறுவனங்கள்
தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக்கூடங்கள்.
புதுக் கல்லூரி, சென்னை
ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்
ஜாஹிர் ஹூசைன் கல்லூரி, இளையான்குடி
ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்
காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டினம்
ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி, சென்னை
காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம், சென்னை
முஸ்லிம் கலைக் கல்லூரி, திருவிதாங்கோடு
மழ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்
எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி, மதுரை
தாசிம் பீவி பெண்கள் கலைக்கல்லூரி, கீழக்கரை
வாவு வஜிகா வனிதையர் கல்லூரி, காயல்பட்டணம்
அன்னை ஹாஜரா மகளிர் கல்லூரி, மேலப்பாளையம்
எம்.ஐ.டி. மகளிர் கல்லூரி, திருச்சி
ராஜகிரி தாவூத் பாட்சா கல்லூரி, தஞ்சாவூர்
ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி, சென்னை
கிரஸண்ட் பொறியியல் கல்லூரி, வண்டலூர்
(தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது).
சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை
டானிஷ் அஹமது பொறியியல் கல்லூரி, சென்னை உட்பட
ஏராளமான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மகளிர் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் பல மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப்பட்ட கல்லூரிகளையும், மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகின்றார்கள். இக்கல்லூரிகளில் அதிகம் பயின்று பயன்பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்திந்திய அளவில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமும் பன்னெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றன.
கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான அளவில் முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் மருத்துவ கல்லூரியைத் துவக்கி நடத்துவதற்கான முயற்சிகளும் ஆரம்பமாகியுள்ளன. கடந்த 2010, மே 25 ஆம் தேதி முஸ்லிம் லீக் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற முஸ்லிம் கல்வியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கெல்லாம் காரணம் காயிதே மில்லத் என்பதை எவரும் மறுக்க முடியாது !
நன்றி :
பள்ளபட்டியில் ஜுன் 9 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு 2010 ல் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இருந்து….
தொகுத்தவர் : மணிச்சுடர் இ.ரா.ச.மு. ஹமீது ( 99410 86586 )
sadayan sabu
dateWed, Aug 4, 2010 at 11:03 AM
அஸ்ஸலாமு அலைக்கும்
சிறுபான்மை கல்வி நிலையங்களாக கடந்த 1998 ல் இருந்து நம் சமுதாயத்திற்கும். மாற்று மத சமுதாயத்தினருக்கும் கல்விச்சேவை செய்து வரும் இரு கல்லூரிகளை மணிச்சுடர் இ.ரா.ச.மு. ஹமீது மறந்து விட்டார் போல் தெரிகிறது.
சுல்தானா அப்துலலாஹ் ராவுத்தர் மகளிர் கல்லூரி - கூத்தாநலலூர்
ராபியம்மாள் அஹமது மைதீன் மகளிர் கல்லூரி - திருவாரூர்
இரு கல்வி நிறுவனங்களும் கூத்தாநல்லூர்காரர்களால் நடத்தப் படுகிறது