Thursday, August 26, 2010

நாடாளுமன்றத்தின் முன்மாதிரி உறுப்பினர்



நாடாளுமன்றத்தின் முன்மாதிரி உறுப்பினர்

நடப்பு நாடாளுமன்றத்தில் முப்பது முஸ்லிம் எம்.பி.,க்கள் இருக்கின்றனர். இவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு வகிப்பவர்கள் ஆவர். பொதுவாக நாட்டிலுள்ள எல்லா எம்.பி.க்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதி Member of Parliament Local Development Fund (MPLADS) Fund ( MQLADS) என்று அழைக்கப்படுகிறது.

2009-10ம் நிதியாண்டில் நாட்டிலுள்ள முஸ்லிம் எம்.பி.க்களின் 30 லோக்சபா தொகுதிகளுக்காக மட்டும் 67கோடி ரூபாய் அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 11.3கோடி ரூபாய் மட்டுமே அதாவது 16.89 சதவீத தொகை மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளி விவர அமைச்சகம், கொள்கை வகுப்பதற்கான அமைச் சகம் ஆகியவையே தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கி, அது செலவிடப்படுவதைக் கண்காணிக்கும் அதிகாரம் பெற்றவை ஆகும். இந்த அமைச்சகங்களில் கிடைக்கக் கூடிய புள்ளி விவரங்களின் அடிப்டையிலேயே இந்த விவரங்களை தருகிறேன்.

தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலுள்ள எல்லா எம்.பி.க்களும் ஆண்டுதோறும் தத்தமது தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை கூறக்கூடிய அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.
ஒரு எம்.பி.யின் ஆலோசனையின் பேரில் ஒரு தொகுதிக்கு அதிக பட்சம் இரண்டு கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் செலவிடலாம். இந்த திட்டம் 1993-ஆம் ஆண்டு ஒவ்வொரு எம்.பி.க்கும் ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யலாம் என்ற முடிவுடன் தொடங்கப் பட்டது. பின்னர் இது 1994-95ம் நிதியாண்டு முதல் 1997-98ம் நிதியாண்டுவரை ரூபாய் ஒரு கோடியாக உயர்த்தப் பட்டது. 1998-99ம் நிதியாண்டு முதல் இந்த நிதி இரண்டு கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமுதாய கட்டமைப்பு பணிகள், குடிநீர் வழிக்கான ஏற்பாடுகள், பொது சுகாதாரம், சாலை அமைத்தல் முதலிய பணிகளுக்கும் கூட இந்த நிதி எம்.பி.யின் அறிவுரையின் பேரில் ஒதுக்கப்பட வேண்டும். இவை மட்டுமல்ல-வெள்ளம், புயல், நில நடுக்கம், வறட்சி, ஆழிப்பேரலை முதலியவற்றில் மக்களுக்கு ஏற்படும் துன்ப துயரங்களை நீக்கி நிவாரணம் தரவும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம்.
இப்போது ஒரு ஹஹமில்லியன் டாலர்|| கேள்வி எழுகிறது. நம்முடைய எம்.பி.க்களுக்கு அவரவர்களுடைய தொகுதிகளில் மேற்கண்ட இனங்களில் இந்த நிதியைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா? இல்லையா?-என்பதுதான் அந்தக் கேள்வி. ஏனென்றால், முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனையோ உள்ளூர்த் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் உள்ளூர் நிர்வாகத்தால் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன. தொகுதி மேம்பாட்டு நிதியும் பல இடங்களில் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

இது குறித்து ஒவ்வொரு எம்.பி.யினுடைய செயல்பாடுகள் குறித்து கவனித்தபோது 30 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் (இவர்கள் எல்லாக் கட்சியையும் சேர்ந்தவர்கள்) ஒன்பதுபேர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு ரூபாயைக் கூடச் செலவிடவில்லை என்பது தெரியவருகிறது (2009-2010). இவர்களில் கடந்த மூன்று நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பெரும் ஈடுபாடுகாட்டிப் பெயரும் புகழும் பெற்ற ஒருவரும் அடக்கம் என்பதுதான் வேதனை.

எனினும், நாமெல்லாம் பெருமிதம் கொள்ளத்தக்க வகையிலே இந்த விஷயத்தில் ஒருவர் நனிசிறந்த நாடாளு மன்ற உறுப்பினராக விளங்குகிறார், தம்முடைய தொகுதிக்காக அரசு ஒதுக்கிய மூன்று கோடி ரூபாயில் அதிகபட்சமாக 2.40 கோடி ரூபாயைத் தொகுதியின் நலத்திட்டப் பணிகளுக்காகச் செலவிடப் பரிந்து ரைத்துள்ளார், அதற்கேற்ப இதுவரை 2.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் 1.75 கோடி ரூபாய் (அதாவது 58.33 சதவீத) செலவில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1.75 கோடி ரூபாய் அடுத்தடுத்து இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந் துரைப்படி செலவிடப் படுவதற்காக மாவட்ட நிர்வாகத்தில் ஆயத்தமாக உள்ளது, இந்த வகையில் இன்று இவரே நாட்டின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்-முதன்மையாகத் திகழ்பவர்- (The best Performer of all 30 Muslim MPs ) என்றெல்லாம் கூறினால், அவர் யார்? என்று அறிய ஆர்வம் கொள்வது அனைவருக்கும் இயல்பே.

எல்லாப் புகழும் இறைவனுக்கே! தாய்ச்சபையாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சகோதரர்களே! உங்கள் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்! அவர்தாம் முனீருல்மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் இனம் காட்டிய இன்முகச் சகோதரர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள்!
-ஏம்பல் தஜம்முல் முகம்மது