முனீரே மில்லத் பேராசிரியர் பெருந்தகை
K.M. காதர் முகையதீன் M.A., EX M.P.
தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
கோவை செந்தமிழ் மாநாட்டு தங்களின் பேருரை வரலாற்றில் இடம் பெற்று விட்டது.
தமிழகத்தில் முஸ்லிம் சிறு குழந்தைகள் பள்ளிவாசலில் நடைபெறும் குர்ஆன் மதரஸாவில் படிப்பதற்காக அரபுத்தமிழில் துஃகபத்துல் அத்பால், என்ற சிறுநூல் கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை ஆலிம்ஷாவால் இயற்றப்பட்டதாகும்.
சிம்னு ஸுப்யான் என்ற அரபுத்தமிழ் கிதாபு எல்லா குர்ஆன் மதரஸாக்களிலும் குழந்தைகள் படிக்கின்றன. ரபாத் மாநாட்டுக்கு சிராஜுல் மில்லத் அப்துல் சமது அண்ணன் செல்கின்ற பொழுது காயிதே மில்லத் அவர்கள் சிம்னு ஸுப்யானைத்தான் விடுத்தனுப்பினார்கள். சமது அண்ணன் அவர்கள் சவூதி மன்னரிடம் விடுத்து தமிழக முஸ்லிம்கள் ஷரீஅத்தை தெரிந்து கொள்ள தமிழ் மொழியை அரபி லிபியில் எழுதியிருப்பதை எடுத்துச் சொல்லி மன்னரின் பாராட்டை பெற்றார்கள் அதுவும் அரபுத் தமிழ் குறிப்பில் இடம்பெற வேண்டிய ஒன்றாகும்.
துஃகுபத்துஸ் ஸமதிய்யா பீஃலிஸானில் அரபிய்யா என்ற அரபி அரபுத்தமிழ் அகராதி 1913 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் முஹம்மது இபுறாஹிம் ஆலிம் அவர்கள் எழுதி பார்த்திபனூர் முஹம்மது ஹனீபா ஆலிம் அவர்களால் வெளியிடப்பட்டதாகும். பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபி மதரஸாவின் முதல்வர் அப்துல் ஜப்பார் ஹஜரத் அவர்களும் பேராசிரியர் அப்துல் வஹ்ஹாப் ஹஜரத் அவர்களும் மதிப்புரை வழங்கியிருக்கிறார்கள். எல்லா உலமாக்களிடமும் அந்த அகராதி இருந்து வருகின்றன. இதுவரை யாரும் அரபி மொழிக்கு அரபுத்தமிழில் அகராதி வெளியிடவில்லை. இந்த கிதாபும் அரபுத்தமிழ் குறிப்பில் இடம்பெற வேண்டும்.
ஜவாஹிருல் மஸாயில் என்ற நூல் (தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்கள் போன்ற மாஸாயில்கள்) வீரசோளம் நைனா முகம்மது ஹஜரத் அவர்களால் 1906 ம் ஆண்டு அரபுத்தமிழில் வெளியிடப்பட்டதாகும். இந்த நூலும் அரபுத்தமிழ் குறிப்பில் இடம் பெற வேண்டும்.
உலமாக்கள் பலரின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து இந்த குறிப்புகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
P.K.N.அப்துல் காதிர் ஆலிம்
மதுரை மவ்லானா
கேம்ப் : துபாய்
04 ஆகஸ்ட் 2010