உணர்வில் தெளிவு - ஈமானில் உறுதி|| - பிறைமேடை தலையங்கம் : ஆகஸ்ட் 1-16
அன்புத் தம்பிக்கு!
எல்லாம் வல்ல இறைவனின் பேரருள் நம் அனைவரின் மீதும் இலங்கட்டுமாக!
நெடிய சரிதையின் தொடர்ச்சி@
ஆம்@ நம் பேரியக்கமாம் முஸ்லிம் லீக் புதுப் பொலிவோடும் வலிவோடும் சிறந்து விளங்க அவ்வப்போது சில மாற்றங்கள் தேவைதான். இம்மாற்றங்களும் ஆங்காங்கே நிர்வாகிகள் அமையப் பெறுவதில் காணுகிறபோது ஒரு வகையான உற்சாகம். இந்த உற்சாகமும் உத்வேகமும் நம் எல்லோர் மத்தியிலும் இருக்க வேண்டும் என்பதுதான் நியாயம்.
தமிழ்நாடு முழுவதும் பிரைமரி, நகர தேர்தல்கள் முடிவுற்ற மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல்களும் நடைபெற்று இன்னும் ஒரு சில மாவட்டங்கள்தான் எஞ்சியிருக்கின்றன என்ற நிலையில் இருக்கிறோம். தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் அவர்களின் அனுபவமிக்க வழிகாட்டுதலில் நமது இளைய தலைமுறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கும் பொதுச் செயலாளர் அப+பக்கர் அவர்களும், தலைமை நிலையத்தின் மற்ற நிர்வாகிகளும் தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டு மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை ஆங்காங்கே மிகச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கின்றனர். அதற்கு முன்னரே அந்தந்த மாவட்ட நிர்வாகிகளின் முயற்சியால் கிராம, நகர, மாநகர வார்டு கிளை பிரைமரி தேர்தல்கள் செவ்வனே நடைபெற்று முடிந்திருக்கின்றன. ஜனநாயக ரீதியில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்தி வரும் நம் தாய்ச்சபையில் இந்த முறை ஒரு புதிய பரிணாம மாற்றம் இருப்பதை யாரும் மறுக்கவியலாது.
வயதின் மோச்சத்தால் உடல் நலிவு கண்டவர்கள் இளையவர்களுக்கு வழி தந்திருக்கிறார்கள். இவர்கள் எந்த வகையிலும் உணர்வால் குறை காணப்பட இயலாதவர்கள். அந்தந்த பகுதிகளில் சமுதாய மக்களின் பார்வையில் மரியாதை கொண்டவர்கள்@ மூத்தவர்கள். இவர்களை தாய்ச்சபை பொறுப்புகளிலிருந்து விடுவிக்கச் செய்வது என்பது மரியாதைக் குறைவை ஏற்படுத்திவிடும் என்று நினைத்துதான் பல பகுதிகளில் நிர்வாகிகள் மாற்றம் காணாது தொடர்ந்து வந்ததை நாம் நன்கு அறிவோம். ஆனால், அண்மையில் நடைபெற்று முடிந்த நிர்வாகத் தேர்தல் மூலம் இளைஞர்களை முன்னிறுத்தியிருப்பதைப் பல நகரங்களிலும், பல மாவட்டங்களிலும் காண முடிகிறது. வயதில் மூத்த முன்னாள் நிர்வாகிகள் பலர் இன்றைய நிர்வாகத்திலும் கௌரவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தாய்ச்சபையின் கண்ணியத்தை நிலைநிறுத்தக்கூடிய வரவேற்கத்தக்க அம்சமாகும். இந்நிலையில் நாம் நினைத்தவர்களைத் தேர்ந்தெடுக்க முடியாமற்போனதே என்றுகூட நம்மில் சிலர் ஆங்காங்கே நினைக்கலாம். ஜனநாயகப் பார்வையில் இந்த நினைப்பு சகஜமான ஒன்று. இன்னும் ஒருபடி மேலே போய்ச் சொன்னால், நிர்வாகிகளாகத் தொடர்ந்து நீடித்திட வேண்டும் என்று எண்ணிய சிலர்கூட மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமலும் போனதுண்டு. எது எப்படியானாலும், தாய்ச்சபை முஸ்லிம் லீக் வளர வேண்டும்@ அது வளர்ந்தால் நாம் வாழ முடியும்@ அதில்தான் நம்முடைய சமூக வாழ்வும், அரசியல் அந்தஸ்தும், மரியாதைக்குரிய தகுதியும் உண்டு என்று எண்ணுபவர்களுக்கு மாறுபட்ட எந்த எண்ணமும் ஏற்படாது. காலம் காலமாகத் தாய்ச்சபை முஸ்லிம் லீக் நமக்கு ஊட்டிய உணர்வு என்பது சுயநலத்திற்கும் சுய கவுரவ கண்ணோட்டங்களுக்கும் அப்பாற்பட்டது. அந்த உணர்வில் தெளிவாக இருப்பவர்கள் நடக்கவிருக்கிற தேர்தல்களிலும் விருப்பு வெறுப்பு என்று பாகுபடுத்தாமலும் இனிப்பு, துவர்ப்பு என்று வேறுபடுத்தாமலும் தாய்ச்சபை வளர்ச்சி ஒன்றே நமது ஒரே குறிக்கோள் என்றும், இதனை இழிவுபடுத்தி கீழான விமர்சனம் செய்வோருக்கு முன்னால் நெஞ்சு நிமிர்ந்து நேரிய நெறிமுறை தவறா உண்மை முஸ்லிம் என்றும் பறைசாற்ற பிறைக் கொடி நெஞ்சே!
உன் சீரிய பணி தொடரட்டும்,
உன் நேரிய வழி பரவட்டும்@
தலைமைக்குக் கட்டுப்படும் தீன் நெறி உன்னில் என்றும் மிளிரட்டும்.
- எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.
ஆசிரியர்