திருமண கட்டாய பதிவுச் சட்டம் முதல்வரை சந்தித்து முஸ்லிம்களின் ஐயப்பாடுகளை எடுத்துச் சொல்வோம்
தலைவர் பேராசிரியர் அறிவிப்பு
இந்திய தேசிய லீக், தேசிய லீக் உள்ளிட்ட இயக்கங் களிலிருந்து விலகி இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஆயிரக்கணக்கானோர் இணைந்த நிகழ்ச்சியில் அவர்களை வரவேற்று பேசுகையில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டதாவது:
இன்று திருமண கட்டாயப் பதிவுச் சட்டத்தை வைத்து சிலர் அரசியல் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத் திற்கும், தமிழக அரசிற்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்த சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்.
நான் ஒன்றை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். இரண்டு வருட காலமாகவும் நாங்கள் இதைத்தான் சொல்லி வருகிறோம். இஸ்லாமிய திருமணங்கள் காலம் காலமாக பள்ளிவாசல் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டு பத்திரமாக பராமரிக்கப் படுகின்றன.
அரசு இதை அப்படியே ஏற்க வேண்டும் என்பதுதான் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு. திருமணங்கள் காஜிகளாலும், அவரது சார்பிலான நாயிப் காஜிகளாலும் நடத்தப்படுகின்றன. இந்த முறைகளால் ஜமாஅத்துக்களிடையே கட்டுப்பாடும், ஒழுக்க முறைகளும் பின்பற்றப்படுகின்றன.
தற்போது, திருமண கட்டாயப் பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட்டு சர்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என சொல்லப்படுகின்ற நேரத்தில் அந்த பதிவிற்காக சில சான்றாவணங்கள் இணைக்கப்படும் விஷயத்தில் முஸ்லிம் சமுதாயம் சந்தேகங்களை கொண்டுள்ளது. இது ஷரீஅத் சட்டத்திற்கு பாதகத்தை ஏற்படுத்திவிடுமோ? என்ற ஐயப்பாடு உள்ளது.
எனவே, இதுபற்றி தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை சந்தித்து முஸ்லிம் சமுதாயத்தின் ஐயப்பாடுகளை எடுத்துச் சொல்லி பள்ளிவாசல்களில் பதிவு செய்யப் பட்டு பராமரிக்கப்படும் அந்த பதிவேட்டை அரசு அப்படியே அங்கீகரித்து பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தவுள்ளோம். இதில் யாரும் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.
ஷரீஅத் சட்டத்திற்கு பாதகம் வரக்கூடிய எந்தவொரு செயலையும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பொறுத் துக்கொள்ளாது. அதனுடைய நூற்றாண்டுக்கால வரலாறே இதற்கு சாட்சி.
1937லேயே வக்ஃபு சட்டத்தை கொண்டுவந்தவர் முஹம்மதலி ஜின்னா, ஷரீஅத் சட்டத்திற்காக அரசியல் நிர்ணய சபையில் வாதாடியவர் காயிதெ மில்லத், ஷரீஅத் சட்டம் காப்பாற்றப்பட நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா. இவர்களெல்லாம் முஸ்லிம் லீகுடைய தலைவர்கள்.
புதிதாக புறப்படுகின்றவர்கள் வரலாறு தெரியாமல் முஸ்லிம் லீகைப்பற்றி புறம் பேசி அலைகிறார்கள்.
இந்திய ய+னியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரையில் மார்க்க விஷயங்களில் ஆலிம்கள் பேச்சை இந்த சமுதாயம் கண்ணை மூடிக்கொண்டு கேட்க வேண்டும் என்று சொல்லிவரக் கூடியவர்கள். காரணம், 1400 ஆண்டுகளாக குர்ஆன் வழியில், நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்த நடைமுறையில் உரிய வழிகாட்டுதலை செய்து வரக் கூடியவர்கள் சங்கைக்குரிய உலமா பெருமக்கள்.
மார்க்க விஷயங்களில் உலமா பெருமக்கள் சொல்வது தான் சரியானது. தெருவில் மேடைபோட்டு வியாக்கியானம் செய்வதை இது விஷயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, மார்க்கம் என்று வருகிறபோது உலமாக்கள் சொல்வதை கேளுங்கள். அரசியல் என்று வருகிறபோது இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சொல்வதை கேளுங்கள்.
அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் எடுத்து வைக்கக் கூடிய ஒவ்வொரு செயல்பாடும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காகவே இருக்கும்.
இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.