Thursday, February 19, 2009

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள்


வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் –அல்லாஹ்வின் வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை !

தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்று வதற்காக 5.5.1970ம் தேதி இரவு 11 மணியளவில் டில்லியிலிருந்து கார் மூலம் அலிகர் போய்ச் சேர்ந்தார்கள். கூட்டம் நள்ளிரவு ஒன்றரை மணிவரை நடந்தது தலைவர் அவர்களின் கருத்துச் செறிந்த சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆனந்தக் களிப்போடு "அல்லஹு அக்பர்" என விண்ணதிர முழங்கினர் அப்பொதுக் கூட்டத்தில் தலைவர் அவர்கள் பேசும்பொழுது கூறியதாவது


நாம் முஸ்லிம்களென்று நம்மைக் கூறிக்கொள்வதற்கு காரணம் நாம் இறைவனுடைய அடியார்களாக அவனது வேத கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதுதான் நமக்கென்று தனி கலை கலாச்சாரம் ஆகிய வற்றைப் பேணிக் காத்து வருவதுதான் !

சிறுபான்மையினர் கடமைகள்


நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம் சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிகமிக அவசியம் பெரும்பானமை சமுதாயத்தினராக இருப்பவர்கள் எத்தனைக் கட்சிகளில் வேண்டு மானாலும் பிரிந்து பிரிந்து வாழலாம் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் பிரிந்து வாழ முடியாது; அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருக்கிறார்கள் .

குர்ஆன் போதனை

நாம் ஒன்றுபட்டு வாழவேண்டுமென்பது நாமாகச் சொல்வதல்ல இது இறைவனின் கட்டளையாகும்

அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என இறைவனின் திருமறையாம் திருக்குர் ஆன் போதிக்கிறது நபி பெருமான் ( ஸல் ) அவர்களும் இதையே வலியுறுத்தியிருக்கிறார்கள் !


இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம்வரை முஸ்லிம்கள் சிறப்பாகவே வாழ்ந்து வந்தனர் உலகத்தின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களெல்லாம் அவர்களது காலடியில் வீழ்ந்தன முஸ்லிம்களின் கலையும் கலாச்சாரமும் உலகத்தில் மேலோங்கியே நின்றது இஸ்லாமிய மெய்ஞானம் உலகெல்லாம் சுடர்விட்டது

முஸ்லிம்களின் நிலை தாழ்ந்ததேன்?


எப்பொழுது முஸ்லிம்கள் இறைவனை மறந்தவர்களாய் இஸ்லாமிய போதனைகளை புறக்கணித்தவர்களாய் மாறுபட்டு நடந்தார்களோ அப்போதே முஸ்லிம்களின் நிலையும் தாழ்ந்தது தாழ்ந்த நிலையிலிருந்து மீண்டும் அவர்கள் மீட்சி பெற முடியவில்லை!

முஸ்லிம்களின் மகத்தான வளர்ச்சி

உலகத்தில் சாம்ராஜ்யங்கள் உருவாவதற்கும் வளர்வதற்கும் பல நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன ரோமானிய சாம்ராஜ்யமும்,கிரேக்க சாம்ராஜ்யமும் பல ஆயிரணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அமைந்திருக்கின்றன


ஆனால் இஸ்லாமிய சாம்ராஜ்யமோ நபி பெருமான் ( ஸல் ) அவர்களின் மறைவிற்குப் பிறகு பத்தே - ஆண்டு காலத்திற்குள் உலகில் நிலை பெற்றிருக்கிறது இதற்கெல்லாம் மூலகாரணம் முஸ்லிம்கள் இறைவனிடத்தில் கொண்டிருந்த பக்தியும் விசுவாசமுமேயாகும் அவர்கள் மார்க்க போதனைகளுக்கொப்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டதனாலேயேயாகும் !

சிறப்படைவது எவ்வாறு?

நாம் ஏன் தாழ்ந்தோம்? ஏன் இந்நிலைக்கு ஆளானோம்? நமக்குள் ஏற்படும் வேற்றுமைகளை நீக்கிக்கொள்ள சக்தியற்றவர்களாகி விட்டோம்? நமது சிறிய அபிப்பிராய பேதங்களையெல்லாம் பெரிது படுத்திக்கொண்டதுதான் நமது ஒற்றுமை குலைந்ததற்குக் காரணங் களாகும் ! நமது வேற்றுமையையும் அபிப்பிராய பேதங்களையும் நாம் குர்பானி கொடுத்துவிட வேண்டும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்

அல்லாஹ் வாக்குறுதியை காப்பாற்றுபவன் !

வானம் இடிந்து விழலாம்; பூமி வெடித்து விடலாம்; ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்த்துப் போவதில்லை அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றுபவன் !


அவன் நமக்கு அழகான வாக்குறுதிகளை அளித்திருக்கிறான் அதன் பயனை அடைவதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒற்றுமையாக இருப்பதுதான் ஒன்றாக செயல்படுவதுதான் !
அரசியல் ரீதியாக ஒன்றுபடுவோம் !

நாம் எல்லாத் துறைகளிலும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் அரசியல் ரீதியாகவும் ஒன்றுபட வேண்டியவர்களாக இருக்கிறோம் நமக்கு எதற்கு அரசியல் என்று கேட்பவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்


அரசியலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினர்களுக்கு வேண்டுமானால் அரசியல் வேறு மதம் வேறு என்றிருக்கலாம் ஆனால் நமக்கோ மதமும் அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன நமது ஒவ்வொரு செய்கையிலும் இவ்விரண்டும் இணைந்தேயிருக்கின்றன !

இங்கு வாழும் மெஜாரிட்டி சமூகத்தாரில் சிலர் நாம் அரசியலில் மதத்தைப் புகுத்துவதாக நம் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? பாராளுமன்றத்தில் அரசியல் போர்வையின் கீழ் அவர்கள் கொண்டுவரும் ஒவ்வொரு சட்டமும் மதத்தில் தலையிடுவதாகவே இருக்கிறது அவர்கள் செய்வது தவறு எனக் கூறுவதற்குக் கூட நமக்கு உரிமையில்லையா?அவர்கள் செய்கின்ற தவறுகளையெல்லாம் திருத்துவதுதான் எப்படி? அரசியல் ரீதியாக நாம் ஒன்றுபடாவிடில் நமது உரிமைகளை நாம் எவ்வாறு பாதுகாக்க முடியும்? எனவே நாம் ஒன்றுபட்டே ஆக வேண்டும் ஒன்று பட்டிருக்கிறோம் என்று உலகிற்கு உணர்த்துவதற்காக நாம் ஸ்தாபன ரீதியாக இயங்க வேண்டும் !

முஸ்லிம்கள் வாழ முஸ்லிம் லீக் !


இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை எவ்வளவோ திருப்திகரமாக இருக்கிறது முஸ்லிம்கள் முறையாக ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில்தான் அவர்களது வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது மாற்றம் காண வேண்டுமானால் இறைவனின் போதனைப்படி நாம் ஒன்றுசேர வேண்டும்.

நாம் ஸ்தாபன ரீதியாக இயங்குகிறோம் என்பதற்கு அத்தாட்சியாக நாம் ஒரே அரசியல் ஸ்தாபனத்தில் ஈடுபட்டு செயல்படவேண்டும் அந்த நன்னாள் இப்போது வந்துவிட்டது நாம் ஒன்றுபட்டு இருக்கிறோமென்று அறிந்த பிறகே வேறுபல சமுதாயத்தவர்களும் நமது உதவியைத் தேடி வருகிறார்கள் நமது ஒற்றுமையை மென்மேலும் பலப்படுத்தினால் மேலும் சிறப்படைவோம் !


அந்த ஒற்றுமையைக் காப்பதின் மூலம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்குப்

பாத்திரமானவர்களாகிறோம் !

நமது தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்ய வல்லமையுடையவன் ஏக இறைவனாகிய அல்லாஹ்வேயாகும். அவனுடைய பொக்கிஷம் என்றுமே குறையாதது; நாம் அவனையே வணங்குவோம்; அவனையே பணிவோம்; அவனது கட்டளைகளின்படியே நடப்போம்; ஒற்றுமையாக இருந்து சிறப்படைவோமாக .

( கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் கருத்துரைகள் - நாடாளுமன்ற – சட்டமன்ற – பத்திரிகை நேர்காணல் உரைகளின் தொகுப்பிலிருந்து )

தொகுப்பாளர் :

திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா ( குவைத் )
காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர்
குவைத்
00965 9786 2316

வெளியீடு :

மணிமேகலைப் பிரசுரம்
7 தணிகாசலம் சாலை
தியாயராய நகர்
சென்னை 600 017
தொலைபேசி : 2434 2926

விலை : ரூ. 70 ( எழுபது )